Sunday, March 29, 2015

wi-fi மின்காந்த அலையை கண்டுபிடித்த முன்னோடி.

குக்லியெல்மோ மார்கோனி (1874 -1937 )

வானொலியைக் கண்டுபிடித்த குக்லியெல்மோ மார்கோனி இத்தாலியிலுள்ள பொலோஞாவில் 1874 இல் பிறந்தார். அவருடைய குடும்பம் செல்வ நிலையிலிருந்தது. தனி ஆசிரியர்கள் அவருக்குக் கல்வி கற்பித்தனர். 1894 இல் மார்கோனி 20 வயதாக இருக்கும் போது, சில ஆண்டுகளுக்கு முன் ஹைன்ரிக் ஹெர்ட்ஸ் செய்த பரிசோதனைகள் பற்றி படித்தார். அப்பரிசோதனைகள் ஒளியின் வேகத்தில் காற்றினூடே செல்லும் கண்ணுக்குப் புலனாகாத மின்காந்த அலைகளிருப்பதைத் தெளிவாக எண்பித்தன.
கம்பிகளின்றி நெடுந்தூரம் செய்திக் குறிப்புகளை அனுப்புவதற்கு இந்த அலைகளைப் பயன்படுத்தலாமெனும் எண்ணம் குக்லியெல்மோ மார்கோனியின் உள்ளத்தில் உடனே உதித்தது. தந்தியினால் முடியாத செய்தித் தொடர்புச் சாதனைகளை இதனால் செய்ய முடியுமென்பது புலனாயிற்று. எடுத்துக்காட்டாக, இம்முறையினால் கடலிலுள்ள கப்பல்களுக்குச் செய்தி அனுப்ப முடியும்.
1895 இல் குக்லியெல்மோ மார்கோனி ஓராண்டு உழைப்பின் பயனாக எளிதில் இயங்கும் கருவியைச் செய்து முடித்தார். 1896 இல் இங்கிலாந்தில் அவர் தம் கருவி இயங்கும் வகையை விளக்கிக் காட்டினார். அவர் கண்டுபிடித்த அக்கருவிக்கு முதல் காப்புரிமை வழங்கப் பெற்றது. விரைவில் மார்கோனி ஒரு வணிக நிறுவனத்தை நிறுவினார். 1898 இல் முதல் "மார்கோனி செய்திகள்" அனுப்பப் பெற்றன. அடுத்த ஆண்டில் ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து கம்பியின்றிச் செய்திகளை அனுப்ப முடிந்தது. 1900 இல் அவர் முக்கியமான காப்புரிமையைப் பெற்ற போதிலும், தாம் கண்டு பிடித்த கருவியை இன்னும் சீர்படுத்தி காப்புரிமைகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தார். 1901 இல் அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்கே இங்கிலாந்தில் நியூஃபவுண்ட்லாந்திற்கு வானொலிச் செய்திகளை அனுப்புவதில் அவர் வெற்றி கண்டார்.
1909 இல் "ரிபப்ளிக்" எனும் கப்பல் கடலில் மோதி உடைந்து மூழ்கியபோது இப்புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் தெளிவாகப் புலப்பட்டது. அப்போது வானொலிச் செய்தியை அனுப்பியதால் உதவி கிடைத்தது. அறுவரைத் தவிர ஏனையோர் காப்பாற்றப்பட்டனர். அதே ஆண்டில் மார்கோனி தமது கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றார். அடுத்த ஆண்டு அவர் அயர்லாந்திலுள்ள அர்ஜென்டினாவிற்கு 6,000 மைலுக்கப்பால் வானொலிச் செய்தியை அனுப்பினார்.
இச்செய்திகள் எல்லாம் மார்க்ஸ் குறியீடுகளான புள்ளி, கோடு முறையிலே அனுப்பப் பெற்றன. குரலையும் வானொலி வாயிலாக அனுப்ப முடியுமெனத் தெரிந்திருந்த போதிலும் 1916 வரை அவர் அதைச் செய்யவில்லை. வணிக அளவில் வானொலி ஒலிபரப்பு 1920 களின் தொடக்கத்தில் தான் தொடங்கியது. ஆனால், விரைவில் அது பரவியது. அதன் முக்கியத்துவம் வளர்ந்தது.
இத்தகைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமைகள் முக்கியமாதலால் அதைப்பற்றி வழக்குகளும் தொடரப்பட்டன. ஆயினும் 1914 இல் நீதி மன்றங்கள் மார்கோனியின் முந்துரிமையைத் தெளிவாக ஏற்றுக் கொண்டதால் அதன் பிறகு அவரை எதிர்த்து யாரும் வழங்காடவில்லை. மார்கோனி தம் வாழ்வின் பிற்காலத்தில் சிற்றலை, நுண்ணலைச் செய்தி பரப்புகளில் முக்கிய ஆய்வுகள் செய்தார், 1937 இல் அவர் ரோமில் இறந்தார்.
வானொலியைக் கண்டுபிடித்தவர் எனும் வகையில் மார்கோனி புகழ் பெற்றவர், வானொலியின் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் பொறுத்தே அவரது சிறப்பும் அமைந்துள்ளது. (மார்கோனி) தொலைக்காட்சியைக் கண்டுபிடிக்கவில்லை. ஆயினும், வானொலி, தொலைக்காட்சியின் முக்கிய முன்னோடியாக மட்டுமல்ல இணையத்தில் முன்னோடியாகவும் இருந்தது.
ஆகவே தொலைக்காட்சி மற்றும் இணையத்தை கண்டுபிடித்த புகழில் அவருக்கும் ஓரளவு பங்குண்டு என்பது பொருந்தும். இன்றைய உலகில் வானொலி மற்றும் இணையத் தொடர்பு மிகவும் முக்கியமானது என்பதில் ஐயமில்லை. அது செய்தியை அனுப்புவதற்கும், இன்பப் பொழுதுபோக்கிற்கும், படைத் துறைப் பணிக்கும், அறிவியல் ஆய்வுக்கும், காவலர் பணிக்கும் பிறவற்றிற்கும் பயன்படுகிறது. இவற்றுள் சிலவற்றிற்கு (அரை நூற்றாண்டுக்கு முன்னே கண்டு பிடிக்கப்பட்ட) தந்தி பயன்படுமெனினும் பல்வேறு பயன்களுக்கு வானொலி இன்றியமையாததாக இருந்தது. இது உந்து வண்டிகளுடனும், கடலிலுள்ள கப்பல்களுடனும், பறக்கும் வானவூர்திகளுடனும், விண்வெளிக்கலங்களுடனுங்கூட தொடர்பு கொள்ளும். அது தொலைபேசியை விட முக்கியமான கண்டுபிடிப்பாக திகழ்ந்தது. தொலைபேசியில் அனுப்பும் செய்திகளை வானொலியிலும் அனுப்பலாம். ஆனால் தொலைபேசியினால், தொடர்பு கொள்ள முடியாத இடங்களுக்கு வானொலியின் வாயிலாக தொடர்பு கொண்டார்கள்.
இன்று இதே மின்கந்த அலைவரிசை இணைய சேவை மிக முக்கியமான பரிணாம வளர்ச்சியில் வந்து நிற்கிறது.
ஆதார நூல்: 100 நூறு பேர்.  புகைப் படங்கள் கூகுள் 

No comments:

Post a Comment