Friday, March 18, 2016

பயங்கரவாதத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை

இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமான டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி எழுதிய ‘பயங்கரவாதம் மற்றும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு ஃப்த்வா’ என்ற நூல் 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. நூல் வெளியீட்டிற்காக டெல்லி வந்திருந்த டாக்டர் தாஹிரை Frontline ஆங்கில இதழுக்காக நேர்காணல் கண்டவர் அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா.

‘ஷெய்குல் இஸ்லாம்’ எனப் பிரபலமாக அறியப்படும் டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி, புகழ்பெற்ற இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமாவார். 1951இல் பாகிஸ்தானின் ஜாங் நகரில் பிறந்தார். மதினாவிலுள்ள பாரம்பரியமிக்க ‘மதரசா-அல்-வுலும்-அல்-ஷரிய்யா’வில் மார்க்கக் கல்வியை 12 வயதில் தொடங்கினார். அரபு செவ்வியல் மற்றும் அறிவியல் மரபுவழிக் கல்வியைத் தன் தந்தையிடமிருந்தும் மார்க்க அறிஞர்களிடமிருந்தும் பெற்றார்.

 பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (லாகூர், பாகிஸ்தான்) ஆனர்ஸ் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறிய டாக்டர் தாஹிர் இஸ்லாமியக் கல்வியியலில் தனிச்சிறப்புடன் முதுகலைப் பட்டமும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் இஸ்லாமியச் சட்டவியல் விரிவுரையாளராகவும் இஸ்லாமியச் சட்டமியற்றல் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 
இஸ்லாம், இறையியல், சூஃபியிசம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் டாக்டர் தாஹிரின் நூல்கள் நானூற்றுக்கும் அதிகமாக வெளிவந்துள்ளன. ஆய்வாளர்; சிறந்த சொற்பொழிவாளர். உருது, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் உலகு முழுவதும் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார். மின்ஹஜ்ஜுல் குர்ஆன் என்ற சர்வதேச அமைப்பின் நிறுவனர். தீவிரவாதமற்ற இஸ்லாத்தைப் போதிக்கும் இந்த அமைப்பு உலகில் 55 நாடுகளில் இயங்கிவருகிறது.

சமீபகாலமாகப் பல முஸ்லிம் அறிஞர்கள் ஜிகாத் (அறப்போர்) என்பதன் பொருளை அரசியல்ரீதியாக விளக்க முயன்றுள்ளனர். ஆனால் நீங்களோ பயங்கரவாதத்திற்கும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கும் இஸ்லாமியத் தத்துவத்தில் இடமில்லை என ‘ஜிகாத்’திற்குப் பகுத்தறிவுக் காரணகாரியங்களுடன் மதரீதியாக விளக்கம் தர முயன்றுள்ளீர்கள்.

உள்நோக்கங்கொண்ட தங்களின் குறிக்கோளை அடைவதற்காக மதத்திற்குள்ளிருந்தே சிலர் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இஸ்லாம், குர்ஆன், சுன்னா (நபி வழி) இவற்றுக்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இதற்காக குர்ஆன் விளக்க உரைகள், இஸ்லாமியச் சட்டவியலாளர் கருத்துகள், இஸ்லாமியச் சமுதாயம் ஆகியவற்றை நுணுகி ஆராய வேண்டியதிருந்தது. அமைதிக்கும் சமாதானத்திற்குமே இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது. தீவிரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விளக்கங்கள் உண்மையான இஸ்லாமியப் போதனைகளிலிருந்து விலகியவையாகும்.

உதாரணமாக ஜிகாத், உயிர்த்தியாகம் அல்லது சண்டையிடல் என்னும் கருத்தாக்கம் ‘சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வது’ என்பதாக எந்த இஸ்லாமிய நூல்களிலும் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இந்தச் சொற்களில் எதுவும் பெண்கள், குழந்தைகள், முதியோர், மதபோதகர், நோய்நொடியுற்றோர் ஆகியோரைக் கொல்வது என்பதாகவும் பொருள்படாது. இவர்களைக் கொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை. கோயில்கள், சர்ச்சுகள், யூதவழிபாட்டு ஆலயங்கள், பிற வணக்கத்தலங்கள் ஆகியவற்றை இடித்துத் தகர்ப்பது என்பன இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ‘நியாயமான போர்’ அல்லது ‘தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே போரிடல்’ ஆகிய சந்தர்ப்பங்களில்தாம் இச்சொற்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. 

போர்க்களத்தில் இரு படைகள் மோதிக்கொள்ளும்போது மட்டுமே இந்தச் சொற்கள் இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும். ஒரு தனிக்குழு ‘ஜிகாத்’தைப் பிரகடனப்படுத்த முடியாது. இது அத்தகைய குழுக்களின் உரிமையோ சிறப்புச்சலுகையோ அல்ல. இரண்டு ராணுவங்கள் அல்லது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரின்போது கூட பல கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது. தளர்ந்துபோய்விடாமல் நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் காரணத்தால் வர்த்தகர்களும் விவசாயிகளும் கொல்லப்படக்கூடாது. 

பெண்கள், குழந்தைகள், ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பிற குழுக்களைக் கொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை.அவசியமில்லாமல் மரங்களை வெட்டுவதற்கும் அனுமதியில்லை. இவை அனைத்தும் தடை செய்யப்பட்டவை என்பது முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான். 

‘ஒரு முஸ்லிமைக் கொல்வது மனித குலம் முழுவதையும் கொல்வதற்குச் சமமாகும்’ என்பதாக குர்ஆன் வாசகத்திற்குத் தவறான பொருள்விளக்கம் தந்து அதனைச் சில பயங்கரவாத அமைப்புகள் பரப்பிவருகின்றன. ஆனால் குர்ஆனோ ‘மனித உயிரைக் கொல்வது’ எனத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகிறது. (‘முஸ்லிமைக் கொல்வது’- என்பதாக அல்ல). எனவே ‘ஒரு மனித உயிரைக் கொல்வதென்பது மனிதகுலம் முழுவதையுமே கொல்வதற்குச் சமம்’ என்பதே குர்ஆன் வாசகம். ‘மனித உயிர்’ என்ற பொருளில் நஃப்சன் என்ற சொல் குர்ஆன் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் அரசியல் செயல் திட்டம்தான் இஸ்லாமியச் சட்டத்தை இவ்விதம் குறிப்பிட்டவிதமாகப் பொருள் விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறது என்று கூறுகிறீர்களா?

அரசியல் செயல் திட்டமோ அல்லது சர்வதேசச் செயல் திட்டமோ மட்டுமல்ல. சமூகப் பொருளாதாரக் காரணிகளும், ஆங்காங்கே உள்ள அரசாங்கங்களின் சித்தாந்தங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற வன்முறை, அதன் சித்தாந்தப் புரிதல்களுடன் இஸ்லாத்தில் ஊடுருவிப் பரவியுள்ளது. முஸ்லிம் உலகு நெடுகிலும் வாழும் மக்களின் சமூக அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். எனினும் இத்தகைய அரசியல் பிரச்சினைகளும் சமயப் புரிதல்களும் ஒன்றோடு ஒன்று கலத்தல் கூடாது. 

அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைதியான ஜனநாயக வழிமுறைகள் இருக்க முடியும். சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வதற்கு (ஏன் முஸ்லிம்களைக் கொல்வதற்கும்தான்) இஸ்லாமோ இஸ்லாமியப் போதனைகளோ அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தப்படவேண்டும். ஆனால் தற்போது நிலவும் நிகழ்வுகள் கண்டிக்கப்படவேண்டியவை மட்டுமல்ல, திருக்குர்ஆனின் போதனைகளைக் கருத்தில்கொண்டு விளக்கப்பட வேண்டியவையுமாகும்.

இஸ்லாத்தில் தாராளமயக் கொள்கைகள் குறித்து உங்கள் புத்தகம் பேசுகிறது. கருத்துவேறுபாடுகளுக்கு இஸ்லாமிய வரலாற்றில் இடமுண்டு என்பது பற்றியும் இறையியல் ரீதியாக அது எவ்விதம் நியாயப் படுத்தப்பட்டது என்பது பற்றியும் கூறமுடியுமா?

பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே கருத்து வேறுபாடுகளுக்கு இஸ்லாத்தில் இடமிருந்து வந்திருக்கிறது. ‘லா இக்ற ஐ தீன்’ என குர்ஆன் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் யார்மீதும் இல்லை. அதே சமயம் இஸ்லாத்தின் தீனுக்குள்ளும் நிர்ப்பந்தம் ஏதுமில்லை. எனவேதான் இஸ்லாத்தில் சட்டவியல் சிந்தனைக் குழுக்கள் பலவற்றில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதைக் காண்கிறோம். இஸ்லாமிய வரலாற்றில் ஒரே சம்பவத்திற்காக வேறுபட்ட தீர்ப்புகள் இந்தச் சிந்தனைக் குழுக்களால் வழங்கப்பட்டிருக்கின்றன. வேறுபட்ட சிந்தனை முறைகளையும் வேறுபட்ட வழிமுறைகளையும் இக்குழுக்கள் கொண்டிருந்தமையே இதற்குக் காரணம். 

உலகளாவிய ஒரு கட்டமைப்பினுள் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதே உண்மை. இதனாலேயே சட்டவியலில் வேறுவேறு சிந்தனைப் போக்குகள்கொண்ட குழுக்கள் நிறுவப்பட்டன. எந்தக்குழுவும் - ஷியா தத்துவம் உட்பட, காஃபிர்களை (இறை மறுப்பாளர்கள்) இஸ்லாத்திற்கு வெளியே உள்ளோராகப் பிரகடனப்படுத்தவில்லை. ‘ஹதீத் - இக்தெதா- உம்மத்தி - றஹ்மத்துல்’ என்ற தத்துவத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ‘ஒரு நல்ல மத நம்பிக்கையில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் அந்தச் சமுதாயத்திற்கு இறைவனின் அருட்கொடையாகும்’ என்பது இதன் பொருளாகும். இது (கருத்து வேற்றுமை) மாற்றீடுகளைத் தருகிறது. ஒன்றில்லையெனில் இன்னொன்று -என்ற விருப்பத் தேர்வையும் நமக்குத் தருகிறது. கடந்த இரண்டாண்டுகளாய் இளையோர் இப்புரிதலைச் சிரம மேதுமின்றி எளிதாக உள்வாங்கிக் கொண்டுள்ளனர்.

‘ஃபத்வா’வின் வரலாறு என்ன?

ஃபத்வா எனும் சொல்லின் பூர்வீகம் திருக்குர்ஆனும் சுன்னாவும் ஆகும். புனித நபி மற்றும் அவரது சகாக்களின் காலத்தில் இந்தச் சொல் ஓர் ஆட்சிமுறைக் கருவியாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, தெற்காசியா நாடுகளில் சில மதகுருமார்கள் தங்களின் தனிப்பட்ட முற்சாய்வுகள் காரணமாக இந்தச் சொல்லைத் தவறாகப் பயன்படுத்தியபோது பிரச்சினை எழுந்தது. மருத்துவத்தில் ‘போலி டாக்டர்கள்’ எப்படியோ அதுபோலவே இஸ்லாமியத் தத்துவத்திற்கு இந்த மதகுருமார்கள் என்பதாகக் கொள்ளலாம். ஃபத்வா என்பது மிகுந்த அளவு வரையறைக்குட்பட்ட சட்டபூர்வமான சொல். 

காதிகளும் (நீதிபதிகள்) முஃப்திகளும் (தீர்ப்பு வழங்குவோர்) காலகாலமாக இச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஃபத்வா அல்லது இஃப்தா என்ற இரு சொற்களுமே ஒரே பொருள் கொண்டவைதாம். மிக முக்கியமான தீர்ப்புகளில் மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.

(நன்றி: காலச்சுவடு தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி )

No comments:

Post a Comment