Monday, December 10, 2012

கேன்சர் : மருந்து இருந்தால் சொல்லுங்கள்!


சிலருக்கு பெரிய வியாதியாக இருக்கும்; ஆனாலும் மனம் தளராமல் வீரமாக எதிர்த்துப் போராடுபவர்கள் இவர்கள். ‘கான்சருடன் போராடி வீர மரணம் எய்தினார்’ என்று ஆபிச்சுவரி கூட வரும். ஆனால் ‘ஸோ அண்ட் ஸோ, பலவீனமாக நோயை எதிர்க்க முயற்சி செய்து பரிதாபமாகச் செத்தார்’ என்று யாரைப் பற்றியாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
இவை இரண்டுமே தப்பான பார்வைக் கோணங்கள் என்கிறார், மைக் மார்க்குஸி. (http://www.mikemarqusee.com/?p=870) மைக்கிற்கு, பன்முக மைலோமா(ஒரு வித ரத்தப் புற்று நோய்) பாதித்திருப்பதாக இரண்டு வருடம் முன்னால் கண்டுபிடித்தார்கள்.
கான்சர் போல வியாதி வந்தால் வீர தீரமாக அதை எதிர்த்துப் போர் புரிய வேண்டும். அப்போதுதான் பரணி பாடுவார்கள், பள்ளிப்படைக் கோவில் கட்டுவார்கள். கான்சரை எதிர்க்க முடியவில்லை, வேகமாகப் பரவுகிறது என்றால் நோயாளியிடம்தான் ஏதோ தப்பு இருக்கிறது. மனதில் ‘வில் பவர்’ போதவில்லை என்பார்கள். போரில் தோற்றுப் போய் வில்லைக் கீழே போட்டுவிட்டான் என்பார்கள்.
மொத்தப் பழியையும் பேஷண்ட் மீது போட்டுவிட்டு விலகிக் கொள்ளும் இத்தகைய போக்குகளுக்குப் பின்னால், மேற்கத்திய நாடுகளுக்கே உரிய ‘தான்’ என்ற தனி மனித சுய வழிபாடு இருக்கிறது. வெற்றி-தோல்வி என்று அவர்கள் சுண்டிவிட்ட காசுக்கு இரண்டே பக்கம்தான். ஒவ்வொரு தனி மனிதனின் தகுதிக்கும் ஏற்ப வெற்றியும் தோல்வியும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஏழைகள் ஏழைகளாக இருப்பதற்கு, ஏழைகளே காரணம். அதுதான் மார்க்கெட்டின் விதி !
பராக் ஒபாமா, ‘ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்வையும் ஏதோ ஒரு வகையில் தொட்டுவிட்ட கான்சருடன் போராட ஒரு புதிய வியூகம் அமைத்திருக்கிறோம்’ என்கிறார். அவருக்கு முன்னால் நிக்ஸன் ‘இன்னும் பத்து வருடத்தில் கான்சருக்கு ஒரு மருந்து கண்டுபிடித்துவிடுவோம்’ என்றார். அது சொல்லிப் பல பத்து வருடம் ஆயிற்று. ஒபாமா சற்று ஜாக்கிரதையாக ‘நம் வாழ்நாளுக்குள் கான்சரை ஒழிப்போம்’ என்கிறார். நீண்ட ஆயுளுடன் இருக்கப்போகிறோம் என்று யாருக்குத்தான் நம்பிக்கை இல்லை ?
‘கான்சருக்கு எதிரான போர்’ என்பது, ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்பது போல்தான் பயனின்றிக் காற்றில் தோட்டா சுடுவது. முதலில் ஒரு அடிப்படைக் கேள்வி : எல்லோரும் சேர்ந்து ஒத்துழைத்துச் செய்ய வேண்டிய எந்த ஒரு செயலையும் ‘போர்’ என்று உருவகப்படுத்துவது எதனால் ? இது போர் என்றால், எதிரிகள் யார் ? (நல்ல விஷயத்துக்குக் கூட முழு மூச்சாக ‘க்ருஸேட்’ நடத்தும் மேலை நாட்டு சொற் பிரயோகங்களை, ‘ஊர் கூடித் தேர் இழுப்பது’ போன்ற நம் உருவகங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அமைதி விரும்பிகள் ?)
போர் வெறியுடன் ‘புற்று நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடிக்கிறோம்’ என்று இறங்குவதில் சற்றே முட்டாள்தனமும், பெரிதே நேர்மைக் குறைவும் தெரிகின்றன. கான்சருக்கு ஒரு தனிப்பட்ட மருந்து அல்லது ஒற்றை சிகிச்சை கண்டுபிடிக்கப்படுவது அவ்வளவு சாத்தியமாகத் தோன்றவில்லை. நமக்குத் தெரிந்த கான்சரிலேயே 200 வகைகள் உண்டு. அவற்றின் காரணங்களும் வெவ்வேறானவை.
கான்சருக்கு சஞ்சீவி மலையைக் கொண்டு வருகிறேன் என்று ஒற்றைத் திசையில் உழைப்பையும் பணத்தையும் செலவழித்துக் கொண்டிருந்தால் மற்ற பல முக்கியமான துறைகள் கவனிக்கப்படாமல் சவலையாகிவிடுகின்றன : வருமுன் காப்பது; விரைவில் கண்டுபிடிப்பது; வந்த பிறகு தரமான சிகிச்சை பரவலாகக் கிடைக்க வழி செய்வது போன்றவையே நம் உடனடித் தேவைகள். இவற்றுக்கு, புரட்சிகரமான புதிய கண்டுபிடிப்பு எதுவும் தேவையில்லை.
ஆனால், கான்சர் எதிர்ப்புப் பணிகளை, ‘போர்’ என்று வர்ணிப்பதில் பல பேருக்கு சகாயமும் இருக்கிறது, சம்பாத்தியமும் இருக்கிறது.
விஞ்ஞானிகள் ஓய்வாக இருக்கும்போது ஒரு கையால் தாடியையும் மறு கையால் மனச்சாட்சியையும் கோதிக்கொண்டு யோசிக்க வேண்டும். புகையிலை, ஆஸ்பெஸ்டாஸ் போன்றவைகளால் கான்சர் வருகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் அது பரவலாக வெளியே வருவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயிற்றே, ஏன் ? அரசல் புரசலாக உண்மையைப் பேச முயன்றவர்களையும் ‘பூ பூ !!’ என்று கத்தி வாயடைத்து உட்கார்த்தி வைத்துவிட்டார்களே, அதுதான் ஏன் ? காரணம், இவற்றைத் தயாரிக்கும் மெகா கம்பெனிகள். அவற்றின் கிகா வருமானம் !
கடந்த 2007-ம் வருடத்தில் பிரிட்டனில் ஆறு சதவீத கான்சர், பணியிடம் சார்ந்து ஏற்பட்டதுதான். இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பிறகு யாரிடம் போய்த் தேர்தல் நிதி வசூல் செய்வதாம் ? எனவேதான் ‘மாமருந்து கண்டுபிடிப்போம்’ என்ற மார்தட்டல்கள்; அவை, உண்மையான பிரச்னையிலிருந்து கவனத்தைத் திருப்பும் முயற்சி !
தற்போதுள்ள மருத்துவ விஞ்ஞானமே கான்சரைச் சமாளிப்பதில் கணிசமாக முன்னேறியிருக்கிறது. பிரிட்டனில் கான்சர் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிப் பேர் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலும் வாழ்கிறார்கள். ஆச்சரியமான புதிய மருந்துகளை விட, இருக்கும் மருந்துகளை வைத்துக்கொண்டு சீக்கிரமாகவே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க ஆரம்பிப்பது அவசியம். தரமான சிகிச்சை எல்லோருக்கும் பரவலாகக் கிடைப்பதும் அவசரம். ஆனால் நிலைமை என்ன ?
இங்கிலாந்து-வேல்ஸ் பகுதியில் மட்டும் பெண் கான்சர் நோயாளிகளில் பாதிப் பேருக்குதான் நல்ல சிகிச்சை கிடைக்கிறது. அதுவே ஆணாக இருந்தால் முக்கால்வாசிப் பேருக்கு சிகிச்சை கிடைக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் சதவீதக் கணக்கு போட ஆரம்பித்தால், கால்குலேட்டரிலேயே காண்பிக்க முடியாத அளவுக்கு சின்ன எண்ணாகத்தான் இருக்கும். இதையெல்லாம் சரி செய்வதற்கு நம் அமைப்புகளில் மாற்றம் தேவையே தவிர, புதிய மருந்துகள் எதுவும் தேவையில்லை.
நிஜமோ கற்பனையோ, எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் சில பிணக் கழுகுகளுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. கான்சர் ‘போரிலும்’ அப்படித்தான். கான்சர் நோயாளிகள் வெளி நாட்டுப் பயணம் செல்வதற்கு முன்பு இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முயன்றால் பத்து மடங்கு ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
ஈஸி சேரில் உட்கார்ந்துகொண்டு ‘கான்சர்தானே ! கவலையே வேண்டாம்’ என்று சுய உதவி நூல்கள் எழுதி சம்பாதிக்கவே ஒரு எழுத்தாளர்-பதிப்பாளர் கூட்டம் இருக்கிறது. மல்ட்டி வைட்டமின் மாத்திரை விற்பவர்கள் முதல் ஆல்டர்னேடிவ் மெடிசின், காந்த சிகிச்சை, சர்வ ரோக நிவாரணக் கற்கள், தலைச்சன் பிள்ளை மண்டை ஒட்டு தாயத்து என்று வித விதமான வியாபாரிகள் செம துட்டு பார்க்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடக் கில்லாடிகள் என்று சொல்லத் தக்கவர்கள் பல அல்லோபதி மருந்துக் கம்பெனிகள்தான். மருந்து விலைகள் மட்டுமல்லாது மருந்து ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி முடிவுகள் எல்லாமே இவர்களின் இரும்புப் பிடியில் இறுகியிருக்கின்றன. மற்ற எந்த இண்டஸ்ட்ரியையும் விட மூன்று மடங்கு லாபம். பண வீக்கத்தை விட எப்போதும் ஒரு படி உயரத்திலேயே பயணம் செய்யும் மருந்து விலைகள். கேட்டால் ‘எங்கள் ஆராய்ச்சி செலவுகள் அதிகம்’ என்பார்கள். உண்மை என்னவென்றால் மருந்துக் கம்பெனிகளின் ஆராய்ச்சி வளர்ச்சி செலவுகள், அவர்களுடைய விளம்பரச் செலவு, லாபி செய்வது இவற்றில் பாதிதான். மார்க்கெட்டினால் அதிக பட்சம் எவ்வளவு வலி தாங்க முடியுமோ, அவ்வளவு உயரத்தில் விலையை ஏற்றி வைத்துவிடுகிறார்கள்.
மருந்து ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடுவதில் கூடப் பற்பல வெட்டு, ஒட்டு வேலைகள், ஸ்டாடிஸ்டிக்ஸ் பொய்கள். இதில் தெரிந்தோ, தெரியாமலோ மீடியாவும் கூட்டணி. பாதகமான செய்தியாக இருந்தால் முக்கியமான ஆராய்ச்சி முடிவுகளைக் கூட இருட்டடிப்பு செய்துவிடுவது, ஒன்றுமில்லாத விஷயத்தை ‘புரட்சிக் கண்டுபிடிப்பு - இனி நோயாளிகளுக்கு விடிவு காலம்தான்’ என்றெல்லாம் முடி சிலிர்க்கும் கருத்துப் பத்திக் கட்டுரை எழுத வைப்பது என்று அவர்கள் செய்யும் உள் குத்து வேலைகள் ஏராளம்.
கடைசியில், கான்சர் நோயாளிகளுக்கு அடிப்படையான பிரச்னையே அரசாங்கங்கள்தான் என்று தோன்றுகிறது. இன்று உடல் நலப் பாதுகாப்புக்குப் பொது நிதி ஒதுக்கீட்டைப் படிப் படியாகக் குறைத்துக்கொள்ளாத கவர்மெண்ட்டே இல்லை. ஏற்கனவே வேதனையில் குற்றுயிராகக் கிடக்கும் நோயாளிகளைத் தனியார் ஆஸ்பத்திரி - மருந்துக் கம்பெனிகள் முன்னால் ‘இந்தா, சாப்பிடு !’ என்று எலும்புத் துண்டு போல் தூக்கிப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே, இந்த வியாதிக்கு ஒரு மருந்து உண்டா ?
(Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்)
பின்குறிப்பு: அப்படியே இந்த பதிவையும் படித்துப் பாருங்கள் http://www.islamiyapenmani.com/2012/12/to.html மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்.

2 comments: