Sunday, February 24, 2013

சவூதி சலூன் கடை.சிறுகதை (உண்மை கதை)


தண்ணீயை தலையிலே சருக்கு... சருக்குனு அடிச்சுகிட்டே பாய் சோட்ட,தோடா பாடா (சிறுசா,இல்ல கொஞ்சம் பெருசா) வெட்டவா என்று கேட்டுக் கொண்டே சீவ ஆரம்பித்தார்.  நார்மல் பாய் என்றேன் (நமக்குதான் ஹிந்தி தெரியாதே).  சொன்னவுடன் வெட்ட ஆரம்பித்தார் பாகிஸ்தானி. இந்த கடைக்கு மொத தடவையாக வர்றேன். வழக்கமாக வெட்டுவது மலையாளியிடம். 8 வருட பழக்கம். அங்கே போயி உக்கார்ந்தா ஒடனே  எந்த கேள்வியும் கேட்காமல் வெட்ட ஆரம்பித்து விடுவார். அவருக்கு தெரியும் எப்படி வெட்டனும் என்று....

கூட்டாளிகளை பார்க்க வந்த எடத்துலே அவிய்ங்க எல்லாரும் வெளியே ஒரு வேலையா போயிட்டாய்ங்க. சும்மா ரூமில் தனியாக இருக்க ஒரு மாதிரியாக  இருந்துச்சு. (நெட் இருந்தால் எவனும் தேவையில்லை இந்த காலத்துலே! நெட் வசதியில்லாமா எப்படித்தான் இவிய்ங்க இருக்காய்ங்களோ??) சரி கிடைத்த நேரத்தில் வெளியே போயி முடி வெட்டிட்டு வந்துடலாம் என்று கிளம்பி வந்து இங்கே தலையை கொடுத்துகிட்டு ஒக்காந்து இருந்தேன்.


உள்ளே நுழையும் போதே கட ரொம்ப பந்தவாக இருந்தது. கொஞ்சம் பெரிய கடை, அதிக ஆடம்பரம்! முடிவெட்ட காத்துகிட்டு இருக்கும் எடத்துல பெரிய LED Ssmsung 42 இன்ச் டிவியை பொருத்தி வச்சு இருந்தாய்ங்க. அதில் Fair & Lovely வெளம்பரம் ஓடிகிட்டு இருந்துச்சு செவப்பா  இருக்குற அரபி பொம்பளைங்க இன்னும் கொஞ்சம் செவப்பா ஆகுவது எப்படி என்று ஏமாத்திக்கிட்டு இருந்தாய்ங்க (உண்மையிலேயே சாதி,மத,மொழி வட்டார எல்லைகள் இல்லாதவய்ங்க, இந்த பன்னாட்டு கம்பெனி காரய்ங்கதேன் ). முழு மனிதனையும் அப்படியே முழுங்கி கொள்ளும் அகலமான சோபா வேற! முடிவெட்டுற தொழிலாளிகள் வெள்ள கோட்டு யூனிபார்மில் இருந்தார்கள்.  காசு கொஞ்சம் கூடத்தான் கேப்பாய்ங்க. எப்படியும் 25 ரியால் கேப்பாய்ங்க. சரி பரவாயில்லை என்று முடிவெடுத்து தான் உள்ளே போனேன்.

உள்ளே நுழையும் போதே. "எந்தா ஹைதரு! சுகமா?" என்று வரவேற்கிற கேசவன் (மலையாளியின்  பெயர்) குரல் மிஸ்ஸிங். அவர் சொந்தமாக சின்ன கடை வைத்திருப்பவர்.  இவர்கள் வேலையாட்கள்! "இப்பதான் கொஞ்சம் பிரியாக  இருந்தோம்! அதுக்குள்ளையும் ஆள் வந்துருச்சு" என்கிற கோபமாக கூட இருக்கலாம்.  இயந்திரதனமாக பைட்டோ பாய் (உட்காருங்க) என்றார். மிக நிதானமாக வெட்ட ஆரம்பித்தார்.

நம்ம கேசவன் அப்படியில்லை. வெட்டும் போதே கண்ணாடி கதவை ஊடுறுவி வெளியே எட்டிப் பார்த்துக் கொள்வார். கூட்டமாக இருக்கு என முடி வெட்ட வருகிறவர்கள் திரும்பி போய் விடக் கூடாது என்பதற்காக!  வெட்டிக் கொண்டிருக்கும் போது ஆள் உள்நுழைந்து விட்டால் இன்னும் வேகம் கூடிவிடும். வெளிநாட்டு சக தொழிலாளி; சொந்த கட; வாடகை அதிகம்; முடிந்த வரை சம்பாரிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் நானும் புரிந்துக் கொள்வதால் அவரின் திடீர் வேகம் எனக்கு எரிச்சலை தராது. அப்புறம் முடிவெட்டி, தாடி மீசையை லேசா சரிபண்ணுவதற்கு எல்லாம் சேர்த்து இவர் 10 ரியால் தான் வாங்குவார்.

பாகிஸ்தானி நிதானமாக முடிவெட்டிக் கொண்டிருக்கும் போது என் மொபைல் அடித்தது. ஆமா முடிவெட்டும் போது தான் போன் அடிப்பாய்ங்க என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு சரி அப்புறம் பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே இன்னொரு நியாபகமும் அப்பதான் வந்துச்சு, "போன எடுத்து வந்தியே மணிப்பர்சு காசு எடுத்துட்டு வந்தியா??" . துணியை விளக்கி கையை விட்டு பாக்கெட்டில் தடவி பார்த்தா மணிப்பர்ஸ் இல்லை!  "போச்சுடா... புது கட! காசு கொடுக்காமா எப்படி போவ??"  வலது புற பாக்கேட்டை தடவிப் பார்த்தால் காசு இருக்கு!  எதர்த்தமாக எப்பவோ வைத்திருந்த 10 ரியால்.

"ஆஹா 10 ரியால் பத்தாதே! எப்பூடி சமாளிக்க போறேன்? ஒருவேள இவிய்ங்களும் 10 ரியால் தான் வாங்குவாய்ங்களோ? இருக்காது!  கட இவ்வளவு டெக்ரேஷனாக இருக்கு! எப்படியும் 25,30 ரியால் கேப்பாய்ங்க.. என்ன செய்ய போறேன்?" .  பக்கத்தில் ஒருவர் முடி வெட்டி முடிச்சு பணம் எடுத்துக் கொடுத்தார். அதை தலையை திருப்பிப் பார்க்காமல் ஓரக்கண்ணால் பார்த்தேன். சரியாக தெரியவில்லை. அவரு பாட்டுக்கு அஞ்சு ஆறு தாளை கொடுப்பது போல் இருந்தது. "ஒரு ரியாலாக 10 ரியால் கொடுத்து இருப்பாரோ, அஞ்சு ரியாலாக அஞ்சு தாள் கொடுத்து இருப்பாரோ?" அதுவே பெரிய சந்தேகம் ஆகிவிட்டது.

போன் அடித்து நண்பர்களை காசு கொண்டுகிட்டு வரச் சொல்லுவோமா?? அவிங்க இப்பதானே போனாய்ங்க. மார்க்கெட் வேலையை முடித்து வர  இரண்டு மணி நேரம் ஆகுமே! அதுவரை இங்கேயே ஒக்காந்து இருப்பமா? அசிங்கமாக ஒரு மாதிரியாக இருக்குமே. காசு இல்லை என்று எப்படி சொல்வது? சுத்தி ஆட்கள் வேற இருக்காய்ங்க. சரி...  பத்து ரியாலை கொடுத்து விட்டு மொதுவாக மேற்கொண்டு காசு இல்லை நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்து காசு கொடுத்து விட்டு போவது என்று முடிவேடுத்துக் கொண்டேன். ஒருவேள பத்து ரியால் தான் இவர்களும் வாங்குவார்கள் என்றால் கவுரமாக தப்பித்து விடலாம்.

முடிவெட்டி முடித்த பாகிஸ்தானி தாடியை சரிபண்ண வேண்டுமா என்றார் முடிவெட்டுனதுக்கே சரியான காசு இல்லை, இதுலே தாடி வேற சரி பண்ணினால் எவ்வளவு வருமோ என்று நொடியில் நினைத்துக் கொண்டு,  வேண்டாம் என்று மறுத்தேன்.

கீழே இறங்கி ஒருமுறை சரியாக வெட்டி இருக்கிறாரா என்று கண்ணாடியில் பார்த்து விட்டு 10 ரியாலை எடுத்து நீட்டினேன். மனதில் ஆயிரம் கூச்சத்தோடு கொடுத்துட்டு,  இதோட விட்டா  ஒடி போய் விடுவோம், மேற்கொண்டு கேட்டால் போன் பண்ணுவோம் என்று போனையும் ஒரு கையில் வைத்துக் கொண்டேன். வாங்கி கிட்டு ஒன்றும் சொல்லவில்லை. அம்மாடி பெரிய நிம்மதி!   சரி நைசா வாசலை நோக்கி வெளியே கிளம்ப ஆரம்பித்தேன்.  பாய், பாய் என்கிற பாகிஸ்தானியின் குரல் தடுத்து நிறுத்தியது!  போச்சா? சரி சமாளிப்போம் என்று திரும்பினேன். பாய் இங்க ஆட் (8) ரியால் தான். தாடி சரி பண்ணினால் தான் 10 ரியால்! 2 ரியாலை பிடி என்று கொடுத்தார். ரொம்ப நிதானமாக வெட்டினீங்க 2 ரியால் டிப்ஸ் என்று திருப்பிக் கொடுத்தேன்.

கண்ணாடி கதவுகளை திறந்து வெளியே வந்தேன் குளிர்ந்த காற்று காதோரத்தில் வருடிச் சென்றது. கடையை ஒருமுறை திரும்பி பார்த்தேன்.

சுத்தமான பெரிய கடை, நிதானமாக வெட்டக் கூடிய தொழிலாளி.  நம்ம கேசவன் கடையோடு ஒப்பிட்டு பார்த்தேன்.  இது எவ்வளவோ மேல்! இனி இங்கையே முடி வெட்ட வரலாமா?... ம்ஹும் வேண்டாம்!  கேசவன் கேரளாவிலிருந்து என்னை போலவே ஆயிரம் கனவுகளோடு இங்கு வந்து நம்பிக்கையோடு சொந்த கடை நடத்திக் கொண்டு இருக்கும் சக நண்பர். சோ வேகமாக பதறி பதறி வெட்டுகிற கேசவனிடம் தான் அடுத்தமுறை தலையை கொடுக்கணும் என்ற முடிவோடு அந்த இடத்திலிருந்து புறப்பட்டேன். 

13 comments:

  1. உணர்ச்சிமிகுந்த அனுபவம் எங்களுடன் பகிர்ந்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹேர்

    ReplyDelete
  2. அண்ணே செம்மையா இருந்துச்சு, படிக்க படிக்க சுவாரஸ்யமாகவும், இந்த காலகட்டத்தை எடுத்து காட்ட கூடியதாகவும், வெளிநாட்டு வாழ்க்கையையும் சொல்வதாகவும் ஒருசேர கதையில் அமைந்தது சிறப்பு

    ReplyDelete
  3. pinnitinga boss. itha pola enakum inga nadanthirukku, sappattu kadayila :D

    ReplyDelete
  4. 10 ரியாலும் வைத்துக் கொள்ளாத நியாய மனசும், 2 ரியாலை கொடுத்த சந்தோஷ மனசும் அருமை- கேசவனுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும் சேர்த்து...

    ReplyDelete
  5. நல்ல அனுபவம் .., நல்ல மனது ..சிறு வார்த்தை இடையில் சேர்த்தால் பதிப்புக்கு தகுந்த சிறுகதையாக வரும் ..! தொடரத்தும் உங்கள் மனித நேயம் ..!

    ReplyDelete
  6. சலாம் சகோ. உண்மையான சிறுகதை அருமை :) அனுபவம் சொல்லும் பாடம்... கையில் காசு இல்லாம துடிக்கிற பசியா இருந்தாலும் சாப்பாட்டில கை வைக்கக்கூடாது! வீட்டிலோ, விருந்திலோ அல்ல.. ஹோட்டலை சொன்னேன் :-)

    ReplyDelete
  7. கேசவனிடம் தான் முடிவெட்ட போகவேண்டும் என்று சட்டென்று 'முடி'வெடுத்த உங்களை பாராட்டத்தான் வேண்டும். நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  8. பதிவு மிகவும் சுவாரஸ்யமாகவும் அருமையாக இருந்தது.

    ReplyDelete
  9. எங்க எரியாவுல 15 ரியால் வாங்குராங்க அன்னா

    ReplyDelete
  10. எங்க எரியாவுல 15 ரியால் வாங்குராங்க அன்னா

    ReplyDelete