Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Sunday, February 10, 2013

பயங்கர தீவிரவாதியின் உண்மை கதை. (மீள் பதிவு)

அமெரிக்காவின் புதிய அடிமை கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில். ஏற்கனவே அமெரிக்க அரச தீவிர கண்கானிப்பில் இருக்கும் முஸ்லிகளை தன்னுடைய ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்கிற வெறிக்காக இன்னும் ஆழமாக அவர்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டும் என்ற செய்தியை கூறியிருக்கிறார் ஆனால் உண்மை என்ன?

அந்த நாள் (11.9.2001) காலை பத்து மணிக்கு நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியிலுள்ள தனது இல்லத்திலிருந்து 23 வயது நிரம்பிய முஹம்மது சல்மான் ஹம்தானி என்ற இளைஞர் (பாகிஸ்தானி- அமெரிக்கா) ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் தனக்குக் கிடைத்திருந்த புதிய ஆராய்ச்சியாளர் பதவியில் சேருவதற்காகச் சென்று கொண்டிருந்தார்.
                                                  முஹம்மது சல்மான் ஹம்தானி
அப்போது மன்ஹாட்டனிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து கடுமையான புகைமூட்டம் வருவதைக் கண்டு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்கிறார்.


அவசரகால மருத்துவ சிகிச்சை பற்றிய தொழில்நுடபம் பயின்றிருந்த அவர் அந்தக் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தன்னிடமிருந்த சான்றிதழையும் அடையாள அட்டையையும் காவலர்களிடம் காண்பித்து மேலே சென்றார்.

அப்படிச் சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. அவரைப் பற்றி தகவல்களும் வெளிவரவில்லை.

2605 பேர் உயிரிழக்கக் காரணமாக அமைந்த இந்த நிகழ்வு அமெரிக்காவையே உலுக்கியது.அதன் காரணமாக உலகில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்பட்டனர்.அமெரிக்கா ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்று சொல்லித் தக்குதல்களைத் தொடங்கியது.

இச்சம்பவம் பற்றி சல்மான் ஹம்தானியின் தாயார் திருமதி ஹம்தானி ‘இந்து’ நாளிதழ் செய்தியாளரிடம்,நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டிடம் தாக்கப் பட்டபோது அதில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் எனது மகன் அங்கு சென்றிருக்கிறான். இயல்பாகவே அன்பும் இரக்கமும் பிறருக்கு உதவும் எண்ணமும் கொண்டிருந்த அவன் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில் வியப்பில்லை என்றார்.

இந்த வீடியோவை பாருங்கள் சல்மானின் தாயார் மற்றும் நண்பர்கள்,அவர் படித்த கல்லூரியின் ஆசீரியர்களின் வாக்குமூலங்கள்.


மகனின் நிலை பற்றித் தெரியாத அவர் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது மகனின் இறந்த உடல் கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஒன்றும் கிடைக்கவில்லை.

பின்னர் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்று அங்கு தனது மகன் சிகிச்சை பெற்று வருகிறானா என்று பார்த்து விசாரித்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் தனது மகன் இல்லை என்பதை அறிந்த அவர் பெரும் துயரத்துக்கு ஆளானர்.காவல்துறையினரிடம் சென்றும் விசாரித்தார் ஒன்றும் பலன் இல்லை.

ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் நியூயார்க் காவல் துறையினர் சல்மான் ஹம்தானி தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் என்று செய்தியை பரப்பினர். இதனால் அவரது தாயார் பெரிதும் அதிர்ச்சி அடைந்து தன் மகன் பொருட்டு பிரார்த்தனை செய்வதற்காக அவர் மக்காவுக்குச் சென்றார்.அந்த நேரத்தில் ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழ் சல்மான் ஹம்தானி காணமால் போயிருக்கலாம் அல்லது தலைமறைவாகி இருக்கலாம் என்று தினமலர் பாணியில் செய்தி வெளியிட்டது.

அன்று காலை 11 மணி அளவில் அவர் வர்த்தக மையக் கட்டிடத்தின் மையப் பகுதியில் நின்று கொண்டிருந்தார் என்றும் கையில் குர்ஆனை வைத்துக் கொண்டிருந்தார் என்றும் அந்த இதழ் தினமலர் பாணியில் அடித்து விட்டது

அவர் பிறப்பால் பாகிஸ்தானி இது போதுமே சந்தேகப்பட உலக மீடியாக்கள் முழுவதும் பாகிஸ்தான் என்றலே தீவிரவாத நாடு மார்க்கேட்டில் காய்கறி விற்பது போல் வெடிகுண்டுகளை விற்கும் நாடு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. நம்ம விசயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூட போடாத சண்டையா? பயன்படுத்தாத ஆயுதமா?

பிரபல எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் அவர்களின் பாகிஸ்தான் பயண அனுபவம் பல போலி பிம்பங்களை உடைக்கிறது (கொஞ்சம் பாருங்கள்)


சரி விஷயத்துக்கு வருகின்றேன்
அமெரிக்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் சீக்கியர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.பல்பீர்சிங் சோதி உள்ளிட்ட பல சீக்கியர்கள் கொல்ல்லப்பட்டனர். முஸ்லிம்கள் உட்பட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பலரும் விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்களில் சல்மான் ஹம்தானி இல்லை.

தனது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்; சிறையில் இருக்கக்கூடும் என எண்ணியிருந்த அவரது தாயாரின் நம்பிக்கையும் இது பின்னர் தகர்த்தது. ஒரு திருப்பமாக, சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பின் சல்மான் ஹம்தானியின் இறந்த உடலைத் தாக்குதலுக்கு உள்ளான வர்த்தக மையக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் நியூயார்க் காவல் துறையினர்க்கு கிடைக்கிறது.

எனினும் அவர்கள் சுமார் ஆறுமாதங்களுக்குப் பிறகு அதாவது 2002, மார்ச்சில் தான் புகன் விசாரனையை முடித்துக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்போன போது சல்மான் ஹம்தானி இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தனர்.

முஹம்மது சல்மான் ஹம்தானியின் உடலை அமெரிக்க பள்ளிவாசலில் அடக்கம் பன்ன கொண்டு சென்றபோது.


அதன்பின்னர் சல்மான் ஹம்தானி ஒரு வீரராக அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப் பட்டார் அவரது பெயர் யு.எஸ் பேட்ரியாட் ஆக்டில் இடம் பெற்றது. உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது அதில் சிக்குண்டவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற குறிப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன.

2002 ஆம் ஆண்டு நியூயார்க் இஸ்லாமிய பண்பாட்டுக் கழகம் நடத்திய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நியூயார்க் நகர மேயர் புளூம் பெர்க்கும் நகர காவல்துறை ஆணையாளர் ரே கெல்லியும் காங்கிரஸ் செனட்டர் கேரி ஆக்கர் மேனும் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு சல்மான் ஹம்தானியின் வீரத்தை நினைவுகூர்ந்தனர்.

களங்கப்படுத்தப்பட்ட தனது மகன் மீட்சி பெற்றார் எனக் கூறுகிறார் திருமதி ஹம்தானி.
(ஆதார நூல்கள்.நன்றி: இந்து 12.9.11, நன்றி சமரசம் 16-31 ஆக் 
படங்கள் கூகுள் வீடியோ யூ டியுப்)

Friday, January 25, 2013

அமெரிக்கா அடிமைத்தனத்தில் விஸ்வரூபமாய் கமல்.


அடிமைகள் எப்போதுமே நல்லப் பெயர் எடுக்க கூடுதலாக ஏதாவது செய்ய நினைப்பார்கள். கூடுதல் விசுவாசம் காட்ட நினைப்பார்கள். அவ்வகையில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் அதே வேளையில் அமெரிக்கர்களுக்கு அவர் கொடுக்கும் நற்சான்றிதழ்தான் அடிமை குணத்தின் உச்சம். ஒரு காட்சியில் அமெரிக்க இராணுவம் ஹெலிகப்டரில் இருந்தபடி தாலிபான் படையினரைச் சுடும். அதில் ஒரு குண்டு ஒரு பெண்ணின் மீது பட்டுவிட அமெரிக்க இராணுவ வீரன் மனம் நொந்து வருந்துவான். தாலிபான் படைக்கு பயிற்சியாளராக வரும் கமல், வீட்டில் இருக்கும் படை தலைவனின் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பான். அதற்கு தாலிபான் தலைவன் சொல்வானே ஒரு பதில்… “அமெரிக்கர்கள் குழந்தைகளையும் பெண்களையும் கொல்ல மாட்டார்கள். எனவே அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும்.”


அதே சமயத்தில் இஸ்லாமியர்கள் எவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் எனக்காட்ட வேண்டாமா? நேட்டோ (NATO) படையினர் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களை தாலிபானியர்கள் தாக்குகின்றனர். அதில் அவர்கள் மக்களே முற்றாக அழிகின்றனர். “இந்தப் பாவமெல்லாம் அமெரிக்கர்களுக்குதான்” என்கிறான் தலைவன். நாகரீக, மனித மாண்பின் உச்சத்தில் அமெரிக்கனும் அநாகரீக, பிற்போக்கின் அடிபாதாளத்தில் ஆப்கான் மக்களும் இருக்கின்றனர் என உளர கமல் 100 கோடி செலவு செய்திருக்க வேண்டாம். 

ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா குழந்தைகளை கொன்றதில்லையா?? அமெரிக்காவை விட வெறு யாரும் கொன்றதில்லை என்பது தான் உண்மை.

பலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக்காட்டிலும் படுமோசமாக உள்ளது
”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
ஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.
அண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல  இரத்தப் புற்றுநோய் [leukemia]  பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது.  இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.
RAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன்.  இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.
அணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது.  இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது.  இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது.  அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்வமான முதல் ஆய்வு இது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.
பல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள்.  மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….
“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன.  அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன.  அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…
“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன.  அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.
பாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது.  ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது.  “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.
ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை?  ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.
ஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று.  இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.
அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.  ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ்.  2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people.... You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.
கட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010 

Monday, October 15, 2012

ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்

முன்குறிப்பு: ஹாலிவுட்டை பற்றி பதிவு எழுதாதவர் எல்லாம் ஒரு பதிவரா? என்று யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவு.

ஓடு, ஓடு, மிருகம் வேற துரத்துது மழை வேற பேயிது காரு வேற கிடைக்கலே ஓடு, ஒடு. கொட்டாம்பட்டி சினிமா கொட்டாய் வரை அமெரிக்கத் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜுராஸிக் பார்க்” ‘தி லாஸ்ட் வேர்ல்ட். திரைப்படத்தில் வரும் அருமையான வசன வரிகள்.

உங்களுக்கு தேவை  திறமையான பொறியியலாளர், யாரும் நினைத்திராத உருவங்களை வடிக்கும் கணிப்பொறி வல்லுநர், இந்த ஊடகத்தைப் புரிந்து கொண்டு திரைக்கதை வார்க்கும் படைப்பாளி - இது போதும், உலகம் உங்கள் வசப்படும்; ஆயிரம் கோடி டாலர் உங்கள் கூரையைத் துளைத்துக் கொண்டு கொட்டும்” என்கிறார், ஹாலிவுட் படங்களுக்கு ‘ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்’ செய்து கொடுக்கும் கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் அதிபர்.
நீல வானத்தை பார்த்து விட்டும், அடர்ந்த கானகத்தின் இருளில் பயந்தவாறும் நடித்து விட்டு, நடிகர்கள் போய் விடுவார்கள். வானத்தில் செவ்வாய்க் கிரகம் வெடிப்பதையும் காட்டிற்குள் டயனோசர் விழிகளை உருட்டுவதையும் கணிப்பொறி மூலம் உருவாக்குகின்ற டிஜிட்டல் - ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் வல்லுநர்கள்தான் இன்றைய ஹாலிவுட்டின் நட்சத்திரங்கள்- நடிகர்களல்லர்.

ஹாலிவுட் ஃபார்முலா


காதல், குடும்பம், கிராமம், பழிக்குபழி, சகோதர பாசம், தேசபக்தி போன்ற 9 ஃபார்முலாக் கதைகள் மட்டும் தமிழ் திரைப்படங்களில் உலவுவதாகச் சொல்வார்கள். ஹாலிவுட் படங்களும் கிட்டதட்ட அப்படித்தான்.நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் வில்லனை வீழ்த்தும் கெளபாய், பெல்ட்டில் தொலைபேசி - பேனாவில் துப்பாக்கி - முதல் பார்வையிலேயே எந்தப் பெண்ணையும் படுக்கையில் வீழ்த்தும் ஜேம்ஸ்பாண்ட், சிலந்தி மனிதன் - வெளவால் மனிதன் -சூப்பர் மேன் போன்ற சின்னபுள்ளையில் படித்த காமிக்ஸ் நாயகர்கள். மாஃபியா அல்லது தீவிரவாதியை வென்று அமெரிக்கா தர்மம் காக்கும் போலிஸ் - இவையெல்லாம் ‘ஆக்‌ஷன்’ படங்கள்.

சுடுகாட்டு,கல்லறைப் பேய், டி.வி. பிசாசு ஷைத்தான்,உருகும் மனிதன், டிராகுலா, வண்டாக, கொசுவாக, சிங்கமாக - கழுதையாக மாறும் மனிதன்,கொடூரக் கொலையாளிகள் போன்றவை திகில் படங்கள்.இயந்திர மனிதன், வேற்றுக் கிரக வாசிகளுடன் நட்பு - போர் டயனசோர்,எலியன்ஸ், எந்த காலத்திலும் சென்று வரும் தற்கால மனிதன், விண்வெளிச் சாகசங்கள் - போன்றவை ‘அறிவியல்’ படங்கள்! மீதி - குடும்பம், காதல், நகைச்சுவை, பாலுணர்வு போன்றவை ‘செண்டிமெண்ட்’ படங்கள், இறுதியாக மேற்கண்ட அனைத்திலும்  இழையோடியோ அல்லது தனிச்சிறப்பாகவோ எடுக்கப்படும் கம்யூனிச எதிர்ப்புப் படங்கள், வெளிப்படையாக வெறித்தனமாக எடுக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படங்கள் இவைதான் ஹாலிவுட் ஃபார்முலா.

தொழில்நுட்பமே கலையாக!


அமெரிக்காவின் ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மாளிகை’ என்றழைக்கப்படும் ‘இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மேஜிக்’ எனும் நிறுவனத்தின் அதிபர் ஜார்ஜ் லூகாஸ். 77 லிருந்து இவரால் வெளியிடப்பட்ட ‘ஸ்டார் வார்ஸ்’ வரிசைப் படங்கள் ஹாலிவுட்டிற்குப் புதிய திசை வழியைக் காட்டின. இதன் பின்னர் வந்த ஸ்டார் ட்ரெக், யங் ஷெர்லாக் ஹோம்ஸ், தி அபீஸ் போன்ற படங்களில் முதன்முறையாகக் கணிப்பொறி கிராஃபிக்ஸ் முப்பரிமாண  டிஜிட்டல் முறை மூலம் காட்சிகளும், பாத்திரங்களும் உருப்பெற்றன. படத்தொகுப்பில் புதுமையையும், ஒலி - ஒளிச் சேர்க்கையில் துல்லியத்தையும் - வேகத்தையும் கொண்டு வந்தது அவிட், லைட் ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் ‘டிஜிட்டல் எடிட்டிங்’ என்ற புதிய முறை. இதற்காகவே திரையரங்கில் பொருத்தப்பட்ட புதிய ஒலி உபகரணங்கள் பார்வையாளர்களை மயங்க வைத்தன.


‘ ஜாஸ் வரிசைப் படங்களில் மனிதர்களை வேட்டையாடும் சுறாமீனைப் படைத்தபோது ஸ்பீல்பெர்க்கின் வயது இருபத்தேழு. 23 வருடங்கள் கழித்து அவரது படங்களில் வேட்டையாடும் டயனசோர்தான் கடந்த இடைக்காலத்தில் கலைத்துறையில் அவர் கண்ட பரிணாம வளர்ச்சி.

கற்பனை உருவங்கள், இயற்கை, கனவுகளுக்குப் பொருத்தமான குழந்தைகள் ஸ்பீக்பெர்க்கின் படங்களில் தவறாமல் இடம்பெறுவர். ‘முன்னேறிய மேற்குலக நாகரிகத்தின்’ பார்வையில் மூன்றாம் உலகம் காட்டு வாசிகளாய் இருப்பதால் விரக்தியுற்ற தனது அமெரிக்கக் குழந்தைகளுடன் நட்பு கொள்ளும் தகுதியை வேற்றுக் கிரக வாசிகளுக்கு அளிக்கிறார் போலும் ஸ்பீல்பெர்க்! டயனசோரையும், வேற்றுக் கிரக வில்லன்களையும் வீழ்த்திக் காட்டும் அமெரிக்காவை உலகின் விடிவெள்ளியாகவும், லட்சிய நாடாகவும் மூன்றாம் உலகிற்குக் காட்டுகின்றனர் ஸ்பீல்பெர்க்கும், ஏனைய ஹாலிவுட் இயக்குநர்களும்.

நன்மைக்கும், தீமைக்கும் நடைபெறும் போராட்டத்தில் நல்லது வெல்ல வேண்டும் என்ற அவா, திரையரங்கில் அமெரிக்க ஹீரோக்கள் வில்லனை வீழ்த்தும்போது கைதட்டுகின்றது. இதில் நல்லது எது, கெட்டது எது என்பதை அமெரிக்கர்கள் தீர்மானிப்பார்கள். ஆமெரிக்கா நன்மையின் பிரதிநிதிகளாக ஆர்னால்டு,ஹாரிசன் ஃபோர்டு, புரூஸ் வில்லிஸ், சில்வஸ்டர் ஸ்டல்லான், மெப்கிப்ஸன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்.

ஒரு படத்தில் எத்தனை நபர்களைக் கொல்கிறார்கள் என்பதை வைத்து இவர்களின் நட்சத்திர அந்தஸ்து உருவாகிறது. நாயகனின் போராட்டத்திற்கு நீங்கள் தார்மீக ஆதரவளிக்க, கொடூரமாக ஒரு கொலை இருக்கும். கதையின் வேகத்தையும் கூட்ட அதிவிரைவுத் துரத்தல் காட்சியும் இடம்பெறும். இறுதியில் பெரும் குண்டுவெடித்து, கட்டிடங்கள் தகர்த்து அமெரிக்க நன்மை வெற்றி பெற்றதும் மந்திரத்தில் கட்டுண்ட பார்வையாளர்கள் வெறும் வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

கனவும் நனவும்


கார் சவாரி கூடக் கைகூடாதவர்களை விண்கலத்தில் ஏற்றி வெளியை ஊடுருவி வலம் வரும் வண்ணமயமான விண்வெளி அனுபவம் தாலாட்டுகின்றது. படம் முடிந்து வெளியில் வந்து பைக்கை ஸ்டார்ட் பன்னும்போது அல்லது பேருந்து நடத்துநரிடம் காசை நீட்டும் போதுதான் பெட்ரோல் விலை உயர்வும், கட்டண உயர்வும் நினைவுக்கு வருகிறது. அழகான மாந்தார்கள், எழிலான இருப்பிடம், உல்லாச வாழ்க்கை என்று ஹாலிவுட் சித்தரிக்கும் சராசரி அமெரிக்க வாழ்க்கையானது மூக்கு வழியும் குழந்தைகளையும், சமையல் பாத்திரம் கழுவும் பெண்களையும் வியர்வையில் நாறும் ஆண்களையும் கொண்ட நமது நரக பூமியை நினைத்து வெட்கப்பட வைக்கிறது; வெறுக்க வைக்கிறது. கணிப்பொறியில் உயிர்பெற்றுவரும் விதவிதமான கொடூர வில்லன்கள் ஏற்கனவே விதியை நொந்து வாழும் நமது வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தன்னிரக்கம் எனும் புதிய பரிமாணத்தை சேர்க்கின்றனர்.


அவர்களுடைய நாகரீகத்தின் சின்னங்களான பெப்சியும், கோக்கும் நம் நாட்டின் பெட்டிக்கடை வரை வந்து மதுரை மாப்பிள்ளை விநாயகர் பன்னீர் சோடா கம்பெனியையும், காளிமார்க் போன்றவற்றையும் அடித்து நொருக்கி விட்டது. இளைய தலைமுறை பாப் கலாச்சாரத்தின் எம்.டி.வியும், அமெரிக்கக் கொள்கை பரப்பும் சி.என். என் -னும் ஓரளவு வீடுகளில் குதித்து விட்டன. தினசரி 4 காட்சிகள் மூலம் நிகழ்த்தப்படும் திரையரங்க அமெரிக்கக் கனவு, தனது பிரம்மாண்டத்தின் மூலம் மெல்ல மெல்ல மூன்றாம் உலக மூளையில் ஊடுருவுகிறது.

அதற்காகத்தான் தொழில் நுட்பம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், டிஜிட்டல் ஒலி.ஹெச்டீ தரம். நம்மிடம் இருக்கும் சமூகத் தன்மையை உறிஞ்சி எல்லையற்று நுகரும் இயந்திரமாக மாற்றி, அதையே ரசனையாக, பண்பாக, வெறியாக மாற்றுவதற்குத்தான் அத்தனை முயற்சிகளும். 

Tuesday, April 17, 2012

உலகமயமாக்கல் என்றால் என்ன?:உலகமயமாக்கலின் உண்மை முகம்.


"ஊருக்கு போறேன்! 32 இன்ஞ் சோனி LED டிவி வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று நண்பர் சொன்னபோது அருகிலிருந்த இன்னொரு நண்பர்  "அட ஒலகமயமாக்கல் வந்ததிலிருந்து இப்ப எல்லாமே ஊர்லேயே கெடைக்கிது. இங்கே இருந்து எதுக்கு சுமந்துக்கிட்டு போற?? ஊருலேயே வாங்கிவிடலாம். ஒலகமயம் வந்தது எவ்வளவு வசதியாக இருக்கு?" என்றார்.


நண்பரை பொறுத்தவரை உலகமயமாக்கல் என்பது பயணச்சுமையை குறைத்து ஊரிலேயே அனைத்து பன்னாட்டு கம்பெனிகளின் தரமான(!?) பொருட்களை வாரி வாரி வழங்கக்கூடிய அமிர்த சுரபி. நண்பர் சொல்வது போல உலகமயமாக்கல் என்பது அவ்வளவு நல்ல விடயமா?


உலகமயமாக்கல் என்றால் என்ன?


தகவல் தொழில்நுட்ப புரட்சியும் இணைய புரட்சியும் போட்டி போடும் யுகம் இது. அமெரிக்க அதிபர் தேர்தலை ஆண்டிப்பட்டியில் அமர்ந்து கொண்டு அலச  முடிகின்ற அசாத்திய யுகம். உலகில் எந்தவோரு மூலையில் நடக்கின்ற எந்தவோரு முக்கிய நிகழ்வும் விரல் சொடுக்கில் காட்டுத்தீயாக உலகமெங்கும் பரவிவிடுவதை அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.


உலகமயமாக்கலின் இந்தப் பரிமாணம், தகவல் தொழில்நுட்பப் புரட்சியோடு தொடர்புடையதாகும். ஆனால் அரசியலையும், சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவதென்பது முற்றிலும் மாறுபட்ட பொருளையும் பரிமாணத்தையும் கொண்டதாகும்.


அதென்ன அரசியலையும் சர்வதேச விவகாரங்களையும் உலகமயமாக்குவது?


பொருளதாரம், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு உறவுகள், தேசப் பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை உலகமயமாக்குவது தான் உலகமயமாக்கலின் உண்மையான இலக்காகும். இந்த நான்கும் மக்கள் நல அரசின் ஆளுகைக்குக் கீழ் வருகின்ற மிக மிக முக்கியமான துறைகளாகும்.

உலகமயமாக்கல் என்கிற போர்வையில் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் இந்த நான்கு முக்கியமான துறைகளை மூன்றாம் நாடுகளின் அரசாங்களிடமிருந்து பிடுங்கி, அவற்றைத் தம்முடைய ஆளுகையின் கீழ் கொண்டு வரத் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

1. பொருளதாரம்


முதலாவதாக, பொருளாதாரத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தங்களின் கிடுக்குப் பிடியில் கொண்டு வருவதற்காக இவர்கள் என்ன செய்கின்றார்கள்? எந்தெந்த விதங்களில் வேடந் தரித்து வருகின்றார்கள்/ இந்தச் செப்பிடு வித்தையை இவர்கள் செய்வதெப்படி? இதற்காக இவர்கள் போடுகின்ற ஆட்டங்கள் என்னென்ன?

முதலில் உதவித் தொகைகளைத் தருகின்றோம் என்று தொடங்குவார்கள். பாலங்கள் கட்டுவோம், அணைக்கட்டு கட்டித் தருகின்றோம், விமானத்தளம் அமைத்துத் தருகின்றோம் என பல வடிவங்களில் ஆசை காட்டுவார்கள். குறைந்த வட்டியில் கடன் தருகின்றோம் அல்லது சேவைக் கட்டணத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று தாமாக முன் வந்து கடன் கொடுத்து கடன் பொறியில் மூன்றாம் உலக நாடுகளைச் சிக்க வைப்பார்கள். பிறகு அதிக வட்டியில் குறுகிய காலக் கடன் என வலையை இறுக்கிக் கட்டுவார்கள்.
இவையெலலாமே கமுக்கமாக நடந்தேறும்.வெளிப்படையான நிர்வாகம்,ஜனநாயகம்,விடுதலை,சுதந்திரம் என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்பவர்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடும் எதிர்கால வளத்தோடும் தொடர்புடைய இந்த விவகாரங்களை குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் நடத்துவதை விரும்ப மாட்டார்கள்.

ஏற்றுமதி- இறக்குமதி வல்லுநர்கள்,வெளிநாட்டு ஆலோசகர்கள்,உள்நாட்டு அரசு அதிகாரிகள் என எல்லாரும் சேர்ந்து கைகோர்த்துக் கொண்டுச் செயல்படுவார்கள். நாட்டின் இறையாண்மை, மக்கள் நலன்,எதிர்காலம் குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் கவலையின்றி இவர்கள் எல்லாரும் புகுந்து விளையாடுவார்கள்.

அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என்கிற வடிவில் அற்பமான உலக லாபங்களுக்காக நாட்டு நலன்களையும் எதிர்காலத்தையும் வெளிநாட்டு பண முதலைகளுக்கு அடகு வைக்கத் துணிந்து விடுகின்ற, மனச்சாட்சியற்ற கைக்கூலிகள் இவர்களுக்கு எல்லா நாடுகளிலும் கிடைத்து விடுவது தான் வேதனையான முரண்பாடு ஆகும்.

இவ்வறாக, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு சிறுக சிறுக மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில், குறிப்பாக அமெரிக்காவின் கிடுக்குப் பிடியில் முழுமையாகச் சிக்கிவிடும். உடைத்தெறிய முடியாத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அடிமைகளின் நிலைக்கு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு ஆளாகிவிடும்.
அடுத்த கட்டமாக அந்த ஏழை நாட்டின் கரன்ஸி நாணயம் மீது கை வைக்கப்படும்.


நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிடு; இல்லையேனில் புதிய கடன் பொருளாதார ஒப்பந்தங்கள் கிடையாது என எச்சரிக்கை விடப்படும். நாணயத்தின் மதிப்பைத் திரும்பத் திரும்பக் குறைக்கும் போது உலக அரங்கில் அந்த நாணயத்துக்கு மதிப்பில்லாமல் போகும்.அதற்கு நேர்மாறாக, அதனோடு ஒப்பிடும்போது அமெரிக்க டாலர், பவுண்டு,ஸ்டெர்லிங், ஃபிராங், யென் போன்றவற்றின் மதிப்பு எகிறிக் கொண்டே போகும்.

உலக வங்கி,ஐ.எம்.எஃப் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் ஆடிய ஆட்டத்தால் இன்று உலக அரங்கில் அமெரிக்க டாலர் கொடி கட்டிப் பறக்கின்றது. அதனோடு எந்தவொரு மூன்றாம் உலக நாட்டின் நாணயத்தையும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதன் ஆதிக்கம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது.சர்வதேச அரங்கில் எந்தவொரு நாட்டின் கரன்ஸியின் மதிப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் செல்வாக்கும் கணிக்கப்படும். கரன்ஸி வீழ்ந்தால் அந்த நாட்டின் செல்வாக்கும் சரிந்து விடும்.

2.வெளிநாட்டு வணிகம்


இரண்டாவதாக வெளிநாட்டு வணிகத்தை எடுத்துக் கொள்ளுவோம்.எந்த நாட்டுடன் எப்படிப்பட்ட வணிகத்தை வளர்த்துக் கொள்வது? உள்நாட்டு வணிக நலன்கள் பாதிப்படையாத வகையில் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்துக்கான கொள்கையை வகுப்பதெப்படி? போன்றவற்றைக் குறித்தெல்லாம் சுயமாக நிர்மணம் செய்கின்ற உரிமை ஒரு நாட்டுக்கு உண்டு.

ஒரு நாட்டுக்கு இருக்கின்ற இந்த சுய நிர்ணய உரிமையைப் பறிக்கின்ற நோக்கத்துடன் மேற்கத்திய, அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் அமைக்கப்பட்ட நிறுவனம் தான் உலக வர்த்தக அமைப்பு (WTO)

வெளிநாட்டு வணிகத்தில் ஒரு நாட்டுக்கு இருக்கின்ற சுதந்திரத்தையும் உரிமையையும் முற்றாகப் பறிக்கின்ற வலுவான ஆயுதமாக இது இருக்கின்றது. இதனோடு சுதந்திர சந்தை, சந்தை பொருளதாரம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் மூலகமாகவும் வெளிநாட்டு வணிகத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும் உரிமையும் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுகின்றது. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டாக ஈரான் -இந்திய எண்ணெய்க்குழாய் அமைக்கின்ற திட்டம் முடக்கப்பட்டதைச் சொல்லலாம். இவற்றுக்குப் பின்னால் அமெரிக்க, யூத சூழ்ச்சிகளும் சதித் திட்டங்களும் இயங்குகின்றன என்பது வெளிப்படை.

சுதந்திர சந்தை, சந்தை பொருளாதாரம்,ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட வணிகவசதி, சில குறிபிட்ட நாடுகளை மட்டும் அதிகமாக சலுகை காட்டப்பட வேண்டிய நேசநாடுகளை(Most Favoured Countries) அறிவிக்குமாறு அமெரிக்கா செய்கின்ற நிர்பந்தம்- இவையெல்லாமே எதற்காக என நினைத்தீர்கள்?

யாருக்குத் துணை நிற்கின்ற ஏற்பாடுகள் இவை என நினைத்தீர்கள்?

இவற்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. அதற்கு மாறாக மூன்றாம் உலக நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்களும் காலூன்றுவதற்குத் தான் இவையனைத்தும் துணை நிற்கின்றன.இதுதான் மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை.

இன்னும் வெளிநாட்டு உறவுகள்,பாதுகாப்பு இவை பற்றியும் உலகமயமாக்கல் தொடர்பில் எழுத வேண்டியிருப்பதால். தொடரும்

ஆதாரங்கள்: நூல் உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்