Monday, March 26, 2012

மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமா?

தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரணமான மின்வெட்டு,தமிழக மக்களின் வாழ்க்கையையே நிலைகுலையச் செய்துள்ளது. சிறு தொழில்கள் நிறைந்த கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை தொடர்ந்தும்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இடைவேளி விட்டும் மின்தடை ஏற்படுகிறது.

இதே போல் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்டத்திலும் இதே நிலை. இங்கெல்லாம் குறைந்தபட்சம் இரண்டு ஷிப்டுகள் நடத்தி வந்தவர்கள் தற்பொழுது ஒரு ஷிப்டு கூட நடத்த முடியாத நிலை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் எனும் நிலையில் பல சிறுதொழில் நிறுவனங்களும், கடுமையான பதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தொழிற்சாலைகளை தொடர்ந்து விவசாயிகளும் மின்தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளி கல்லூரிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன? தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?

தமிழ்நாடு மின்சார வாரியம் 1994- 98 முதல் 2000- 01 வரையிலான காலங்களில் ஆண்டொன்றுக்கு சுமார் 350 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வந்துள்ளது. இடையில் 2000-01 இல் 4851 கோடி நஷ்டமும் மீண்டும் 20001- 2002 இல் 112.5 கோடி லாபமும் அடைந்துள்ளது. அதன் பிறகு 2002- 03 முதல் தொடர்ந்து 1110 கோடியில் ஆரம்பித்து 2010- 11ல் 11,733 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வருங்காலத்தில் இந்த நஷ்டம் இன்னும் அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

31.3. 2011 முடிவு வரை மின்சார வாரியம் அடைந்துள்ள நஷ்டம் 53, 298 கோடி; அத்துடன் 2012-2013 ஆண்டுக்கான நஷ்டம் 14547 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சரி கட்ட மின்சார வாரியம், மின்கட்டண உயர்வை பயனீட்டாளர்களின் தலையில் சுமத்தவதற்கான அனுமதி வேண்டி மின்சார ஆணையத்திடம் கோரியுள்ளது. 2001- 02 வரை மின்சார வாரியமும், அரசுமே மின்கட்டண உயர்வை நிர்ணயம் செய்து கடந்த 10 ஆண்டுகளில் 8 முறை அறிவித்து வந்துள்ளது. இந்த உயர்வு தொழிற்சாலைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மட்டுமே என்றாலும் வாரிய வருவாய் உபரியாகவே இருந்துள்ளது.

ஆனால் 2003 இலிருந்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அது புதிய மின்நிலையங்களை நிறுவுவது, மின்சார உற்பத்தி, விநியோகம், பயனீட்டுக் கட்டணங்களை நிர்ணயம் செய்வது, பற்றக்குறையைப் போக்க தனியாரிடமிருந்து மினசாரம் கொள்முதல் செய்வது, கொள்முதல் விலையை நிர்ணயிப்பது போன்ற அனைத்து நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட சர்வ வல்லமை படைத்த நீதிமன்ற அதிகாரத்துடனான ஓர் அமைப்பாக உருவானது. அதன் பிறகுதான் வாரியத்தின் நஷ்டமும் செழித்து வளந்து இருப்பதைப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

எனவே மின்வாரியம் அடைந்த நஷ்டத்திற்கும் தற்பொது நிலவும் மின் பற்றாக்குறைக்கும் காரணம் ஆணையத்தின் செயல்பாடுகளே என்று உணர முடியும். 2001- 02 முதல்தான் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை வாரியத்திற்கு விற்கத் தொடங்கின. மின்சார வாரியத்தின் விலை ரூ.2.64 /யூனிட் இருக்கும் பொழுது தனியாரிடம் வாங்கிய மினசாரத்தின் விலை அதிகபட்சம் ரூ.10.48 ஆக உள்ளது. எனவே இதில் தனியார் கொள்ளை லாபம் அடைகின்றனர். சுமார் 1200 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அவர்கள் கேட்காமலே ரூ.250 மானிய விலையில் மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது.
 மின்வாரியத்தின் புதிய நிலையங்களை அமைப்பதற்கோ, பழைய நிலையங்களைச் சரிவரப்பராமரித்து உற்பத்தியைப் பெருக்குவதற்கோ, உற்பத்தி மின்கடத்தல்,விநியோகம் போன்ற நிலைகளில் ஏற்படும் மினசார இழப்பைச் சரி செய்யவோ ஆணையம் எந்த முயற்சியும் எடுத்தாகத் தெரியவில்லை.
மாறாக எப்பொழுதெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தனியாரிடமிருந்து அதிக விலையில் கொள்முதல் செய்வதும், தனியாரிடம் போகும் ஒப்பந்தத்தில் மின்சாரம் வழங்கினாலும் இல்லையென்றாலும் குறைந்தபட்சமாக ஒரு தொகையைத் தனியாருக்கு வாரியம் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையும், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அவர்கள் கேட்கும் போதெல்லாம் கொள்முதல் விலையை உயர்த்துவதும் வழக்கமாக உள்ளது.

மின்வாரியம் உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிகளை ஆராயாமல் இழப்புகளைச் சரி செய்யவும் நிர்வாகத்தைச் சீர் செய்வதற்கும் எந்த முயற்சியும் எடுக்காமல் நஷ்டத்தை சரி கட்டுவதற்கு 9741 கோடி மின்கட்டண உயர்வு செய்ய வேண்டி ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் அரசிடம் இருந்திருந்தால் பால் விலையையும் பேருந்து கட்டணத்தையும் உயர்த்திய போதே உயர்த்தியிருப்பார்கள்.

தற்பொழுது மின்சார ஆணையமும் இது தொடர்பாக மக்களின் கருத்துகளை அறிய பல்வேறு முக்கிய நகரங்களில் பயனீட்டாளர்களின் கூட்டங்களை நடத்திக் கருத்து கேட்டு வருகிறது. தெருத் தெருவாக ஒவ்வொரு பயனீட்டாளரிடமும் கேட்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் ஒன்றிய அளவிலாவது கருத்துக் கேட்பை நடத்த வேண்டும். எனவே இது வேறும் கண் துடைப்பு நாடகம் தான் என்று தெரிகிறது.

எனவே ஆணையம் உடனடியாகத் தலையீட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரியத்துக்கு ஆணையிட வேண்டும்.

பல ஆண்டுகளாக அரசு, வாரியம், ஆணையம் ஆகியவற்றின் மெத்தனப் போக்கால் ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட மக்கள் தலையில் மின் கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. எனவே இந்த இழப்பை அரசே ஏற்க வேண்டும்.

மின் வாரியம் மாநிலத்தில் உள்ள மின்நிலையங்களின் பராமரிப்பை மேம்படுத்தி உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களின் துயரைத் துடைப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை. மக்கள் போர்க்கோலம் பூணுவதைத் தவிர்க்க இது ஒன்றே வழி.

மின்வாரியத்தில் நடைபெறும் ஊழலைத் தடுத்து நிர்வாகத்தைச் சீர்செய்து செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உற்பத்தி, மின்கடத்தல், விநியோகம் ஆகியவற்றில் உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் இழப்புகளைக் குறைக்க வேண்டும்.
தெரு விளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் முறையைச் செயல்படுத்த வேண்டும்.

தனியார் மற்றும் அரசு சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் ஊக்கமளிக்க வேண்டும்.

நன்றி: ஆ சுப்பிரமணி
(கட்டுரையாளர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் ஆவார்.)

17 comments:

 1. முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !!!

  Visit Here For More Details : http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/03/profit-sharing.html

  ReplyDelete
 2. இதெல்லாம் அரசு சிந்திக்குமா?மின் கட்டண உயர்வு வரும் மாசத்திலிருந்து ஆரம்பம்...

  ReplyDelete
 3. இதை செய்யதால் நல்லாத்தான் இருக்கும்...


  மின்வாரியம் கவனத்திற்கு இது சென்றால் நல்லதுதான்

  ReplyDelete
 4. மின்வெட்டு - திரை மறைவு உண்மைகள். PAGE 1.

  தமிழ்நாட்டில் மின் வெட்டும்-மின் கட்டண உயர்வும் தேவை இல்லாமல் வருகிறது.

  ஒரு பொறியாளரின் அலசல்.

  கடுமையான மின்வெட்டில் சிக்கித் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கொந்தளித்துப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

  ஒரு பக்கம் நெருக்கடி காலத்திற்கான அவசர உதவியாகக் கூட இந்திய அரசு தனது உடைமையாக உள்ள நெய்வேலி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க முன்வரவில்லை.

  இன்னொரு பக்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் விற்றுவரும் சில தனியார் நிறுவனங்கள் மின்சாரம் வழங்காமல் முடக்கிப்போட்டுள்ளன. இவற்றின் விளைவாக தமிழ்நாடு இருட்டில் அமிழ்ந்துள்ளது.

  மின் கட்டண உயர்வும் ‍ தனியார் மயமும்

  கடுமையான மின்வெட்டு இருக்கும் இந்த நிலையில் கூட மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

  மின்வெட்டை நீக்கி மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கத் திராணியற்ற தமிழக அரசு 9741 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வைக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுப் போட்டுள்ளது.

  கேட்டால் 53,300 கோடி ரூபாய் இழப்பில் சிக்கி மின்சார வாரியம் மரணப்படுக்கையில் கிடக்கிறது என சட்ட மன்றத்தில் அறிக்கை படிக்கிறார் முதலமைச்சர் செயலலிதா.

  தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இவ்வளவு கடன் சுமை உயர முதன்மைக் காரணம் எது?

  இவ்வினாவிற்கு விடையளிப்பதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.

  தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசு நிறுவனமாகும். மின்சார வாரியம் தனது மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்த மின்சாரம், நெய்வேலி நிறுவனம் மற்றும் இந்திய அரசு தொகுப்பிலிருந்து பெறப்பட்ட மின்சாரம் ஆகியவற்றை வழங்கி வந்தது.

  உற்பத்தி செலவை விட பெரும்பாலான மக்களுக்கு விலை குறைவாக மின்சாரம் வழங்கியதால் அது ஓரளவு இழப்பை சந்தித்தது.

  ஆயினும் பெரிய நிறுவனங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டணம் விதித்து பெற்ற நிதியை வீடுகளுக்கும் வேளாண்மைக்கும் குறைந்த கட்டணத்திற்கு மின்சாரம் வழங்கப் பயன்படுத்திக் கொண்டது.

  சேவைத் துறை என்ற முறையில் ஆண்டு தோறும் ஏற்பட்ட இந்த இழப்பு 2002 ஆம் ஆண்டு 1970 கோடி ரூபாய் என்ற அளவை எட்டிய போது இத்தொகையை தமிழக அரசு மின்சார வாரியத்திற்கான கடன் பத்திரமாக மாற்றி சரி செய்தது. இந்த கடன் தொகையையும் மின்சார வாரியம் பின்னர் அடைத்து விட்டது.

  ஆனால் அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு பிரதமராக பி.வி. நரசிம்மராவாவும் நிதியமைச்சராக மன்மோகன் சிங்கும் பதவி வகித்த காலத்தில் புதியப் பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் அறிமுகப்படுத்திய தனியார்மய - தாராளமயக் கொள்கை மின்சாரத் துறையையும் தாக்கியது.

  மின்சாரத்துறையை தனியார் முதலாளிகளின் கைகளுக்கு மாற்றி விடும் திட்டம் தலையெடுத்து வேகமாகப் பரவியது.

  1994 ஆம் ஆண்டிற்கு பிறகு மின்சார வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை இந்திய அரசு அனுமதிக்க வில்லை. அரசின் மின் வாரியங்கள் மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டுமென்றால் நடுவண் மின்சார ஆணையத்திடம் (CENTRAL ELETRICITY AUTHORITY) முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது.

  இந்த ஆணையம் அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தி வந்தது. அதே நேரம் அரசின் தனியார்மயக் கொள்கை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஊக்குவிப்பு வழங்கியது. இதற்கேற்ப மின் வழங்கல் சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப் பட்டன.

  இந்திய அரசு 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்த மின்சாரச் சட்டம், மின்சாரக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை பறித்து இந்திய அரசின் கட்டுப் பாட்டில் அமைந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்படைத்தது.

  தமிழக அரசு மின் கட்டணத்தைத் தானே தீர்மானிக்க முடியாது,

  தனது தேவையை இவ்வாணையத்திடம் கோரி அதன் ஆணைக் கேற்ப மின் கட்டணம் தீர்மானிக்கப்படவேண்டும்.

  Continued……….

  ReplyDelete
 5. மின்வெட்டு - திரை மறைவு உண்மைகள். PAGE 2.

  இந்த மின்சாரச் சட்டம் மாநில அரசுகள் வழங்கி வந்த எளியோருக்கான மானியத்தை குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தியது.

  மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இக்கொள்கையை செயல் படுத்தும் அமைப்பாக விளங்கியது.


  இந்திய அரசின் தனியார் மயக் கொள்கை, மேற்கண்ட சட்ட ஏற்பாடுகள் வழியாக மின்சாரத்துறையில் நிலை நிறுத்தப்பட்ட பிறகுதான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு பல மடங்காக உயர்ந்தது.

  அரசுத்துறை நிறுவனமான மின்வாரியம் தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாமல் முடக்கப்பட்டது.

  மறுபுறம் மின்சாரத் தேவைகள் மிக வேகமாக அதிகரித்தன.

  இதனை ஈடுகட்ட தனியார் மின் உற்பத்திக் குழுமங்களிடம் அவர் கள் சொல்லும் விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் உள்ளாக்கப்பட்டது.

  பெரிதும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து காசு கொடுத்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு வழங்கும் முகமை நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியம் மாறிப் போனது.

  தனியார் மின் உற்பத்திக¢ குழுமங்களிடம் மின்சாரம் வாங்குவதற்த் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் பெருமளவுக்கு மின்வாரியப் பணத்தை தனியாருக்கு வாரி வழங்குவதற்கு ஏற்ற வகையிலேயே அமைந்தது.

  இவற்றிடம் மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது மட்டுமின்றி , மின்சாரம் உற்பத்தி செய்யாமல், வழங்காமல் சும்மா இருந்த காலத்துக்கும் நிலைக்கட்டணம் என்ற பெயரால் பல நூறு கோடி ரூபாயை மின்வாரியம் கொட்டிக் கொடுத்தது.

  ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையம் மின் உற்பத்திக்கு அணியமாக இருப்பதாக ஒப்பந்தம் ஆகிவிட்டாலே போதும், உற்பத்தி செய்யாத காலத்திற்கும் ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஒருகோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு மின் வாரியம் அழவேண்டும்.

  எடுத்துக்காட்டாக


  எஞ்சிய 330 நாள்களுக்கு இந்த நிலையம் உற்பத்தியே செய்யவில்லை என்றாகிறது.

  ஆயினும் சும்மா இருந்த நாள்களுக்கு நிலைக் கட்டணமாக 330.04 கோடி ரூபாயைத் தட்டிச் சென்றது.

  இது போல் ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 1006 கோடி ரூபாயை உற்பத்தி இல்லாத காலங்களுக்கு நிலைக் கட்டணமாக மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

  ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், முடைக் காலத்தில் வெவ்வேறு மின் உற்பத்தி நிலையங்களிடம் அவ்வப்போது வாங்கிக் கொண்டதற்கும் மட்டும் கடந்த ஆண்டு 8884.4 கோடி ரூபாய் மின்வாரியம் வழங்கியிருக்கிறது.

  கடந்த ஆண்டு மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறினார். மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை கட்டுப் படுத்தியிருந்தாலே இந்த இழப்பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாயைக் குறைத்திருக்க முடியும்.

  Continued ……

  ReplyDelete
 6. மின்வெட்டு - திரை மறைவு உண்மைகள். PAGE 3.

  மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் மின்சாரத் தீர்ப்பாயமும் எவ்வாறு தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்குத் துணைபோய் மின்வாரியத்தை கடன் சேற்றில் சிக்கவைக்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.

  மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2010 ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்திய போது பன்னாட்டு வடநாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.80 முதல் ரூ.2.50 வரை கட்டணச் சலுகை வழங்கி அறிவித்தது.

  இவ்வாறு கட்டணச்சலுகை வழங்குமாறு தமிழக அரசும் கோரவில்லை; அந்த நிறுவனங்களும் கோரவில்லை. மக்கள் கருத்தும் கோரப்படவில்லை.

  தானடித்த மூப்பாக தகவல் தொழில்நுட்பக் குழுமங்களுக்கு இக்கட்டணச்சலுகையை வாரி வழங்கியது ஆணையம்.
  .
  ஒழுங்குமுறை ஆணையம் தான் இவ்வாறு என்றால் மின்சாரக் கட்டணம் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரிக்கும் உச்ச அமைப்பான மின்சாரத் தீர்ப்பாயமும் அதற்கு மேல் இருக்கிறது.

  பிரதாப் ரெட்டியின் பிபிஎன் நிறுவனம் தனக்கு மின்சார வாரியத்திலிருந்து 189 கோடி ரூபாய் பணம் நிலுவையுள்ளது என வழக்குத் தொடர்ந்தது.

  அவ் வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிபிஎன் குழுமம் கேட்டதை விடப் பல மடங்கு அதிகமாக இழப் பீட்டை கணக்கிட்டு ரூ 1050 கோடி வழங்குமாறு மின்சார வாரியத்திற்கு ஆணையிட்டது.

  இப்போதும் பிபிஎன் உள்ளிட்ட நான்கு தனியார் நிறு வனங்கள் மின்சாரம் வழங்கு வதை நிறுத்தி வைத்திருப்பதால் மின்வெட்டு இன்னும் கூடுதல் ஆகிறது.

  இந்திய அரசு திணித்து தமிழக அரசு ஏற்றுக்கொண்ட தனியார்மயம் தமிழ்நாட்டு மின்சாரத்துறையில் திரும்பியப் பக்கமெல்லாம் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

  தனியார் நிறுவனங்களுக்கு நியாயமே இன்றி மின்உற்பத்தியும் மின் வழங்களும் இல்லாத காலத் திலும் ஆண்டுதோறும் வழங்கப்படும் நிலைக் கட்டணமான ரூபாய் 1000 கோடியை நிறுத்தி வைத்து மின்சாரவாரியம் மின்உற்பத்தி நிலையங்களை நிறுவியிருந்தால் கடந்த பத்தாண்டுகளில் அரசுத்துறையில் 9000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை கூட்டியிருக்க முடியும்.

  தேவையற்ற - நியாயமற்ற தனியார் கொள்ளையை மின்சாரத் துறையில் அனுமதித்துவிட்டு அதில் ஏற்படும் இழப்பை மக்கள் தலையில் கட்டுவது எந்த வகையில் ஏற்கத்தக்கது-?

  மக்களில் சிலர் நினைப்பது போல் உழவர்களுக்கு வழங்கும் விலையில்லா மின்சாரமோ, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த கட்டண மின் சாரமோ மின்வாரிய இழப்பிற்குக் காரணமல்ல. தனியார் கொள்ளையே காரணம்.


  தமிழ்நாடு மின்சாரத் துறையை தனியார் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு அரசுத் துறையை ஓங்கச்செய்வதே தாறுமாறான மின் கட்டண உயர்விலிருந்து மக்கள் தப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி ஆகும். --- பொறியாளர்,சா.காந்தி.--
  நன்றி:"கீற்று"

  ReplyDelete
 7. என்று தணியும் இந்த மின்வெட்டு தாகம்!

  ReplyDelete
 8. என்று தணியும் இந்த மின்வெட்டு தாகம்!

  ReplyDelete
 9. எப்ப வரும் வெளிச்சம்

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


  மின்சாரம்... இனி தமிழகத்தில் அது கானல் நீர் தானோ என அஞ்ச தோன்றுகிறது

  ஆழமான அலசல் மச்சான்...

  பகிர்ந்த பதிவிற்கு
  ஜஸாகல்லாஹ் கைரன்

  ReplyDelete
 11. சூரிய ஒளியில் இயங்கும் முறையை வீடுகளிலும் பயன்படுத்த முயற்சி நடந்து வருகிறது போலும் அருமையான பகிர்வு .

  ReplyDelete
 12. ஆஹா..அருமையான பதிவு. நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன். 1994-98-ல் எந்த வழிமுறைகளைக் கையாண்டனர் என்று அரசு ஆராய்ந்து செயல்பட்டால் நலமாயிருக்கும். இந்த ஆணையம் இருந்தால் என்ன? ஒழிந்தால் என்ன?

  நல்ல பதிவு. நன்றி!

  ReplyDelete
 13. iththanai thavrukali seer seyyaamal-
  koodangulam pesuvathu!
  aniyaayam!

  ReplyDelete
 14. அருமையான பகிர்வு .

  ReplyDelete
 15. என்ன கொடுமையிது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆரம்பித்தபிந்தான் நஸ்டம் அதிகமாகியிருக்கா? அப்படியென்றால் அங்கு லஞ்சம், கமிசன் அதிகம் போகிறதோ

  ReplyDelete
 16. இன்றைய அரசுகள் எதுவும் மக்கள் நலனிற்காக இல்லை.

  ReplyDelete