Wednesday, January 8, 2014

இதுதாண்டா தமிழக போலீசு...

கோயில் பூசாரி,பஞ்சு மிட்டாய் விக்கிரவாய்ங்க இவிய்ங்க மாதிரி நம்ம அடிச்சது எல்லாம் சாப்ட் கேரக்டர்களை என்று ஒரு படத்தில் நகைச்சுவை வசனம் வரும் அது அப்படியே நமது தமிழக போலீசுக்குதான் பொருந்தும் என நினைக்கிறேன். 

முருங்கக் கீரை திருடியவரை 10 பேர் கொண்ட போலீஸ் படை அமைத்து பிடித்து அவர்களை புழல் சிறையில் தள்ளியது. திருட்டுக் குற்ற வழக்கில் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட கொசுவலை அடிக்கும் தொழிலாளி ஹுமாயூன் என்பவரை காவல்நிலையத்தில் உயிரோடு எரித்துக் கொன்றது. சமீபத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தொண்டையில் சுட்டது என சாதனை தொடர்கிறது.

தமிழக போலீசின் சாதனைகள் விரிவாக இதோ:

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்த ஹுமாயூன் என்ற தையல் தொழிலாளியும் அவரது நண்பரும் மற்றொரு கூலித் தொழிலாளியுமான சௌகத் அலியும் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கானத்தூர் போலீசு நிலையத்திற்கு விசாரணைக்காக ஜூலை 8 அன்று இழுத்துச் செல்லப்பட்டனர்.  திருட்டுப் புகார் கொடுத்தவர்கள் ஹுமாயூன் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சொல்லியிருந்ததால் சௌகத் அலியை விடுவித்துவிட்ட போலீசார், ஹுமாயுனை போலீசு நிலையத்திலேயே சிறை வைத்தனர்.  முதல்நாள் ஹுமாயூனை உயிரோடு பிடித்துச் சென்ற போலீசார், மறுநாள், “ஹுமாயூன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டதாக” அப்பாவிகளைப் போல அறிக்கை வெளியிட்டனர்.
திருட்டு கேஸ் விசாரணை என்ற பெயரில் சென்னை-கானத்தூர் போலீசால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி ஹூமாயூன்
‘‘ரேஷனிலேயே மண்ணெண்ணெய் கிடைக்காதபொழுது, ஸ்டேஷனில் மண்ணெண்ணெய் எப்படி வந்தது?” என தி.மு.க. தலைவர் மு.க., இக்கொட்டடிக் கொலையை அம்பலப்படுத்தி நையாண்டி செய்து அறிக்கை அளித்தவுடன், “ஸ்டேஷனில் இருந்த போலீசார் ஹுமாயூனைத் தனியாக விட்டுவிட்டு வாகனச் சோதனைக்காகச் சென்றுவிட்டார்கள்; விசாரணைக்குப் பயந்துபோயிருந்த ஹுமாயூன் அந்தச் சமயத்தில் ஸ்டேஷனில் வேறொரு வழக்கு தொடர்பாகப் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.  ஹுமாயூனை நாங்கள் யாரும் கொடுமைப்படுத்தவில்லை.  தீ வைத்துக் கொண்ட அவரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்ற முயன்றோம்” எனக் கதையளந்தது போலீசு.  பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்க்குப் பக்கத்திலேயே போலீசார் தீப்பெட்டியையும் வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் போலும்!

திருடப்பட்டது கீரை... புறப்பட்டது போலீஸ்தனிப்படை! சென்னை கொட்டி வாக்கத்தில் உள்ளது முன்னாள் டி.ஜி.பி வெங்கடேசன், இவரது மனைவி ராணி (முன்னாள் எம்.எல். ஏ ) இவர்களது மருமகந்தான் தென் சென்னை கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ். முன்னாள் டிஜிபி வெங்கடேசன் வீட்டில் உள்ள முருங்கை மரத்தில் கடந்த 5 -ம் தேதி முருங்கை இலை பறிக்க சென்ற சக்தியும் செல்வமும் மரம் முறிந்து வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள் விழுந்து காவலாளி கத்தவும் ஓடி விடுகின்றனர். தப்பியோடிய இருவர் மீதும் இதுவரை எந்த விதமான குற்றவழக்குகளும் இல்லை. ஏரியாவிலும் கெட்ட பெயர் இல்லை. ஆனால் தப்பியோடிய முருங்கை இலை மெகா திருடர்களைப் பிடிக்க ராஜேஸ்தாஸ் உத்தரவில் 10 பேர் கொண்ட போலீஸ் படை அமைத்து பிடித்து அவர்களை புழல் சிறையில் தள்ளியிருக்கிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தொண்டையில் சுட்ட அயோக்கிய ஆய்வாளர் புஷ்பராஜ்.


நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. சிறுவனை பயமுறுத்துவதற்காக கழுத்தில் துப்பாக்கியை வைத்து காவல் ஆய்வாளர் மிரட்டியபோது துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது.


சென்னை நீலாங்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சபீனாபேகம். இவரது மகன் தமீம்அன்சாரி (16). 6-ம் வகுப்புடன் படிப்பை முடித்த அன்சாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்துவந்தாராம். நீலாங்கரை காவல் துறையினர் பலமுறை அவரைப் பிடித்து எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டருகே இருந்த ஒரு கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டது.

தொண்டையில் சுடப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரி

இதுகுறித்த புகாரின் பேரில் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் தமீம்அன்சாரியை நீலாங்கரை போலீஸார் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.


அங்கு சிறுவனிடம் பல காவலர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் தமீம்அன்சாரி, 'நான் திருடவில்லை' என்று திரும்பத் திரும்ப கூறினாராம். இதனால் நொந்துபோன போலீஸார் முடிவில் நீலாங்கரை குற்றவியல் ஆய்வாளர் புஷ்பராஜிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

ஆய்வாளர் புஷ்பராஜிடமும், 'நான் திருடவில்லை' என்ற பதிலையே மீண்டும் மீண்டும் கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அன்சாரியின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து அன்சாரியின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கழுத்தில் காயம்பட்ட சிறுவன் ரத்தம் வழிந்த நிலையில் காவல் நிலையத்துக்குள்ளேயே மயங்கி விழுந்தார். விபரீதத்தை உணர்ந்த போலீஸார் அன்சாரியை உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.


துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் புஷ்பராஜிடம் அடையாறு துணை ஆணையர் சேவியர் தன்ராஜ், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்களாம்.

பெரும் கொலைகாரன் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கொள்ளைக்காரர்களுக்கு ராஜமாரியதை அளித்துக் கொண்டே சாதாரண அப்பாவிகளிடம் வீரத்தைக் காட்டுவது என போலீஸ் அமைப்பே சீர்குலைந்து கிடக்கிறது தமிழக அரசே தேவை நடவடிக்கை சீர்திருத்தம்.

5 comments:

  1. Kodumaikkaararkalaaa.......!!!

    ReplyDelete
  2. தெரியாம நடந்ததா! அட பாவி உனக்கு என்ன நரம்பு தளர்ச்சியா இல்லை நீ குடிகாரனா? இதில் எதுவாக இருந்தாலும் நீ தண்டிக்கப்பட வேண்டியவனே உன்னை போன்றவனை சரியாக தண்டிப்பதே மற்ற காவலர்களுக்கு கிடைக்கும் பாடம்.

    ReplyDelete
  3. தெரியாம நடந்ததா! அட பாவி உனக்கு என்ன நரம்பு தளர்ச்சியா இல்லை நீ குடிகாரனா? இதில் எதுவாக இருந்தாலும் நீ தண்டிக்கப்பட வேண்டியவனே உன்னை போன்றவனை சரியாக தண்டிப்பதே மற்ற காவலர்களுக்கு கிடைக்கும் பாடம்.

    ReplyDelete
  4. ஒரு 16 வயதுச் சிறுவனை, அதுவும் வெறும் திருட்டுக் குற்றச் சாட்டுக்கு துப்பாக்கியைக் கழுத்தில் வைத்துப் பயமுறுத்தியது மட்டுமல்ல, கொலையும் செய்த இந்தப் பாவியை ஆயுள் தண்டனையில், ஒருநாளும் வெளியே வரமுடியாதவாறு உள்ளே தள்ள வேண்டும்.

    ReplyDelete