Tuesday, May 10, 2011

மதமும் அறிவியலும். புத்தக பகிர்வு
றிவியலும், தொழில்நுட்பமும் மாபெரும் வளர்ச்சியைக் கண்டு மனித வாழ்வியல் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள இன்றைய காலகட்டம் அறிவியல் யுகம் என அழைக்கப்படுகின்றது. பகுத்தறிவுக்கும்,சுதந்திரமான சிந்தனைக்கும், ஆய்வு முயற்சிகளுக்கும் அறிவியல் வளர்ச்சி களம் அமைத்துக் கொடுத்துள்ள நவீன காலப் பிரிவில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பெற்ற மதத்தின் நிலைபற்றிய வினாக்கள் அவ்வப்போது எழுப்பப்படுவதைப் பார்க்கின்றோம்.

மனித வரலாற்றில் மத நம்பிக்கைகள் செல்வாக்குச் செலுத்திய காலம் மறைந்து, அறிவியல் ஆதிக்கம் செலுத்தும் புத்துலகம் தோன்றிவிட்டதாக ஒரு பிரமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.மதத்தினதும், அறிவியலினதும் களங்களையும், பரிமாணங்களையும் தெளிவுப்படுத்தி ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலப்பிரிவில் மதத்திற்கும், அறிவியலுக்குமிடையில் நடைபெற்ற போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்கி, மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய இஸ்லாமிய நோக்கை இந்நூல் விளக்கின்றது.

சிந்தனைத் தெளிவு வேண்டி நிற்கின்ற ஒரு தொனிப்பொருள் பற்றிய இந்நூல் வாசகர்களின் அறிவுக்கு விருந்தாக அமையும் என்ற நோக்கில் இந்த நூல் பகிர்வை பதிவிடுகிறேன்.

இனி இந்த புத்தகத்திலிருந்து ஒரு சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

மதத்திற்கும் அறிவியலுக்குமிடையிலான போராட்டத்தின் ஆரம்பம்.

மதம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து எப்போது, ஏன் தோன்றியது என்ற வினாவிற்கான விடையை நாம் முதலில் கண்டறிதல் வேண்டும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்த ஐரோப்பிய நோக்காகும்.

தங்களது ஏகாதிபத்தியவாத அமைப்பின் அடிப்படையில் கீழைத்தேய நாடுகளை அடிமைப்படுத்தி தங்களது ஆட்சியை இந்நாடுகளில் திணித்த ஐரோப்பியர், உலக வரலாற்றையும், அதன் நிகழ்வுகளையும் ஐரோப்பாவை மையமாக வைத்தே நோக்கினர். உலகம் முழுவதும் ஐரோப்பாவை அச்சாணியாக வைத்தே சுற்றிச் சுழலுகின்றது என்ற மனப்பான்மையில் அவர்கள் செயல்பட்டனர்.

ஐரோப்பிய வரலாற்றின் நிகழ்வுகளின் அடிப்படையில் உலக வரலாற்றின் நிகழ்வுகளை நோக்குவதும், ஐரோப்பிய வரலாற்று அனுபவங்களை உலக வரலாற்று அனுபவங்களாகக் கொள்ளும் மனப்பிரமையும் இதனடிப்படையிலேயே உருவாகியது.

மத்தியகாலப் பிரிவில் ஐரோப்பாவில் கிறிஸ்தவத் திருச்சபை மிக சக்தியும், அதிகாரமும் படைத்த ஒரு நிறுவனமாக விளங்கியது. இக்காலப்பிரிவில் கிறிஸ்துவத் திருச்சபையின் அதிகாரத்தில் ஆட்சி மட்டுமின்றி, அறிவு, கலாச்சார, பண்பாட்டு முயற்சிகளும் கட்டுப்பட்டிருந்தன.

பதினைந்தாம், பதினாறம் நூற்றாண்டில் அறிவுத்துறையில் ஏற்பட்ட இந்த விழிப்புணர்வே பதினேழாம் நூற்றாண்டில் நவீன அறிவியலுக்கான அஸ்திவாரத்தை இட்டது. இந்த நவீன அறிவியல் வானவியலோடு (Astronomy) ஆரம்பமாகியது. மத்திய கால கிறிஸ்தவ பிரபஞ்சவியல் (Medieval Comology) பூமியை மத்தியாகக் கொண்டு அதன்கீழ் நரகமும் உயரே சுவர்க்கமும் இருப்பதாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்பன மேலே உள்ள சுவர்க்கத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிப்ப்வை எனவும் போதித்தது. ஐரோப்பாவில் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான போராட்டம், வானவியலோடு தொடர்புடைய பூமியின் இந்த மத்திய நிலைப்பற்றிய கோட்பாட்டுடனேயே ஆரம்பமாகிறது.

சூரியக் குடும்பம் (Solar System) என அழைக்கப்படும் கிரகங்களின் குடும்பத்தின் மையமாக சூரியன் விளங்கின்றதா அல்லது பூமி விளங்கின்றதா என்பது தொடர்பாகவே இந்தப் போராட்டம் ஆரம்பமாகியது. இவ்விடயத்தில் கிரேக்கப் புவியியலாளர் டாலமி (Ptolemy) யின் கோட்பாட்டையே மத்திய கால கிறிஸ்துவத் திருச்சபை அங்கீகரித்திருந்தது. பிரபஞ்சத்தின் மத்தியில் பூமி அமைந்திருக்க சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் என்பன பூமியைச் சுற்றிச் சுழலுக்கின்றன என்பதே இக்கோட்பாடாகும்.

இந்நிலையில் போலந்து நாட்டைச் சேர்ந்த கொபர்நிகஸ்(Copernicus 1473 -1543) என்னும் வானவியலாளர், வானில் உள்ள கோளங்கள் சுற்றுவது பற்றி ஒரு நூலை(On the Revelation of the Heavenly Bodies) 1543ஆம் ஆண்டு எழுதினார். இப்பூமியானது நிலையாக சுற்றிச் சுழலுகின்றது எனவும், அது நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருவதாக இந்நூலில் அவர் குறிப்பிட்டார். ஆனால் இக்கோட்பாடு கிறிஸ்துவத் திருச்சபையின் போதனைக்கு மாற்றமாக உள்ளதால் திருச்சபையின் எதிர்ப்பை அது தோற்றுவிக்கும் என்ற பயத்தில் அந்நூலை அவர் வெளியிடவில்லை.

வானவியலைப் போன்றெ மருத்துவக் கலையைப் பொறுத்தளவிலும் கிறிஸ்தவச் திருச்சபை அதன் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. மத்திய காலப்பிரிவில் நோய்களுக்கு நிவாரணம் காண்பதில் அறிவியல்ரீதியாக செயல்படாது, கிறிஸ்தவர்கள் அ|றிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்பட்டனர்.

அக்காலப்பிரிவில் ஸ்பெயினில் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் கல்விகற்ற யூதர்களே மருத்துவத்துறையில் ஈடுபட்டனர். இவ்வாறு மருத்துவத்துறையில் ஈடுபட்டோரை மந்திரவாதிகளாக கிறிஸ்தவர்கள் கருதினர். உடலியல்(Anatomy) மிக இழிவான கலையாகக் கருதப்பட்டதுடன், மருத்துவ ஆய்விற்காக உடலை அறுத்துப் பரிசோதனை செய்வதையும் கிறிஸ்தவ திருச்சபை கண்டித்தது.

1847 ஆம் ஆண்டு ஸிம்ப்ஸன்(Simpson) என்னும் மருத்துவர் குழந்தைப் பேற்றின்போது பிரசவ வேதனையைக் குறைக்க மயக்க மருந்தைப் பரிந்துரை செய்தபோது கிறிஸ்துவ குருமார்கள் அதனை ஆட்சேபித்தனர். 
“துன்பத்திலும் வேதனையிலுமே நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பீர்கள்” 
(In Sorrow Shalt Thou Bring Forth Children Gen 111:16) என்ற பைபிளின் போதனைக்கு எதிராக இது அமைவதாக அவர்கள் வாதாடினர்.

இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் எதிராகவும், அறிவியல் விளக்கங்கள், கண்டுபிடிப்புகளை மறுக்கும் வகையிலும், கிறித்தவ திருச்சபையும் அதனைப் பிரதிநிதித்துவப் சிந்தனைப் போக்கை ஐரோப்பாவில் தோற்றுவித்தது. கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக திருச்சபையின் இரும்புப் பிடிலிருந்து விடுபடும் பொருட்டு சுதந்திரச் சிந்தனையை விரும்பியவர்களால் தொடுக்கப்பட்ட அறிவுப் போராட்டம் வரலாற்று ஓட்டத்தில் மதத்திற்கே எதிரான ஒரு போராட்டமாக மாற்றமடைந்தது.

இக்காலப்பிரிவில் இஸ்லாம் எப்படி அறிவியலுக்கு உறுதுணையாக நின்றது இஸ்லாமிய காஃலீபாக்கள் எப்படி இது போன்ற அறிஞர்களை அரவனைத்து அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டார்கள் என்பதையும் இந்நூல் ஆசிரியர் விளக்குகிறார்.

நூல்
மதமும் அறிவியலும்
ஆசிரியர்
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி
2 comments:

  1. வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...

    ASSALAAMU ALAIKKUM BROTHER

    ReplyDelete
  2. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

    நல்லபடியாக போயிட்டு வாங்க பிறகு உக்காந்து பேசுவோம்

    ReplyDelete