Wednesday, July 20, 2011

(18+) வரதட்சிணை எனும் அவமானம்.புத்தக அறிமுகமும்,எனது மலேசியா சிறை அனுபவமும்.

   18+ என்று போட்டவுடன் என்னோவோ ஏதோ என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.  வரதட்சனை எனும் கொடுமையால் என் நண்பன் எப்படி பாதிக்கப் பட்டான் என்பதை விளக்குவதற்காக அந்த 18+ வீடியோவை இணைத்துள்ளேன்.

சரி புத்தக அறிமுகத்திற்கு பிறகு மலேசியாஉண்மை சம்பவத்திற்கு போவோம்.

ஆசிரியர்:
கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
குடும்பத்தின் அமைதியைக் கெடுத்து சமுதாயத்தின் நல்லொழக்கத்தைச் சீர்குலைக்கின்ற மாபெரும் தீமையாகத் தலைவிரித்தாடுகின்றது வரதட்சிணை எனும் கொடுமை! முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்தத் தீமைகளின் ஆணிவேர் எது? இது எங்கிருந்து முளைத்தது? எப்படிப் பரவியது? அந்த ஆணிவேரை அடியோடு பிடுங்கி எறிய என்ன வழி? அதைத்தான் இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் டாக்டர் கே. வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள். அதுமட்டுமல்ல, வரதட்சிணைக்கு ஆதரவாகப் பேசுவோர் முன்வைக்கும் வாதங்களுக்கு உரிய பதில்களையும் டாக்டர் அவர்கள் ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.

பொற்றோர்,இளைஞர்கள்,இளம்பெண்கள்,சமயச் சொற்பொழிவாளர்கள்,
ஆன்மிகவாதிகள்,சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் பொறுப்புகளையும்
எடுத்துரைத்துள்ளார்.

இந்த புத்தகத்தில் நான் கோடிட்ட ரொம்ப பிடித்த சில வரிகள் உங்கள் பார்வைக்கு.

வரதட்சிணை என்பது எந்த உழைப்பும் இல்லாமல் முதலீடு இல்லாமல் ஒரு பெண்ணின் இயலாமையையும் சமூகத் தந்திரங்களையும் பயன்படுத்திப் பெற்ற பணமாகும்.இதுவும் ஒருவகையில் வழிப்பறிக் கொள்ளையே ஆகும்.

கொள்ளைக்காரர்கள் கத்தியைக் காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.வரதட்சிணை வாங்குபவர்களோ பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கின்றனர்.வழிப்பறிக்காரர்கள் சில வேளைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளவும் கூடும். ஆனால் வரதட்சிணை வாங்குபவர்களோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதோடு,சமூகத்தில் அந்தஸ்தோடும் உலா வருகின்றனர். எனவே கொள்ளையர்களை ‘புத்தியற்ற கொள்ளைக்காரர்கள்’என்றும், வரதட்சிணை வாங்குபவர்களை ‘புத்திசாலித்தனமான கொள்ளைக்காரர்கள்’
என்றும் வர்ணிக்கலாம்.

இப்போது என்னுடைய மலேசியா சிறை அனுபவம்.


'நீ எப்ப மலேசியா போன' என்று கேட்பவர்களுக்கு. இங்கே அழுத்துங்கள் .

மலேசியா கள்ளக்குடியேறி என்ற முந்தைய பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

அது ஒரு தொடர் (அது இப்பதான் எனக்கு ஞாபகம் வருகிறது)

2001ல் மலேசியாவில் கட்டிடட தொழிலாளியாக பர்மீட் இல்லாமல்வேலை பார்க்கும் போது பிடிபட்டு. மலேசியாவின் நெகிரி சிம்பிலான் என்ற ஊரில் சிறையில் ஒரு மாதம் இருந்தேன்

மலேசியாவில்
சக தமிழக கட்டிட தொழிலாளர்களோடு நான்
டி ஷர்ட்டை இன் பன்னி இருக்கிறேன்

போலீஸில் பிடிபடும்போது போட்டுயிருக்கிற ஒரே ஒரு துணி தான் இருக்கும்.
சிறையில் எனக்கு முன்னரே பிடிபட்ட 120 மேற்பட்ட தமிழர்கள் இருந்தார்கள்
ஒரு மாத சிறை வாழ்க்கையில் பலரின் சிறைநட்பு கிடைத்தது. அதில் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நண்பர் (பெயர் வேண்டாமே). அவரோடு மாப்பிள்ளை, மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்ப்பட்டது.


சிறையில் முக்கால் வாசி பேர் குளிக்கும் போது ஆடையில்லாமல் நிர்வாணமாகத்தான் குளிப்பார்கள். சிறையில் பாகிஸ்தான், 
இந்தோனேஷியா நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நாங்க மொத்தம் 500 பேர். அதில் உடுத்துன ஆடையோடு குளித்த ஒருசிலரில் நானும், நண்பனும் அடக்கம். அதாவது ஜீன்ஸ் பேண்ட போட்டுகிட்டு குளிக்கிறது. முடிந்த பிறகு சட்டையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஜீன்ஸ் பேண்ட புழிந்துவிட்டு மறுபடிக்கும் போட்டுகிட்டு காய்வதற்காக வெயிலில் நிற்பது.

இப்படி நண்பன் குளித்து விட்டு சட்டையை இடுப்பில் கட்டுவதற்காக முயற்சிக்கும் போது எதார்த்தமாக விலகி அவனுடைய குந்துபுறம் தெரிந்தது. அதில் ஆழமாக மூன்று கரும்கோடுகள் தழும்பு மாதிரி இருந்தது. பார்த்தவுடன் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 
'டேய் மாப்ளா என்னடா இது' என்று கேட்டே விட்டேன். அதற்கு அவன் 'சிங்கப்பூர்ல இருந்தேன் மச்சான். அங்கே பர்மீட் இல்லாமல் தங்கி இருக்கிறவங்கள மூன்று
ரோத்த அடி குடுப்பாய்ங்கே. நான் அங்கு பிடிபட்டபோது எனக்கு கிடைத்த அடியின் தழும்பு இது' என்றான்.

                                       சிங்கப்பூரின் தண்டனை ரோத்த அடிப்பது இப்படித்தான்

'நீ சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லையா?' என்று கேலி செய்தேன். அதற்கு பிறகு அவன் சொன்ன பதிலில் கண்கள் உடைந்து அழுதேன். 

'அப்பா கூலித்தொழிலாளி. அன்றாட காச்சி. எனக்கு இரண்டு சகோதரிங்க. ஒன்னுக்கு வயது 30, இன்னொக்கு 32, இரண்டு பேரையும் கட்டிக்கொடுக்க முடியவில்லை. நான் டுரிஸ்ட விசாவில் சிங்கப்பூர் வந்தேன் பாஸ்போர்ட்டை தூக்கி போட்டு விட்டு இரண்டு வருடம் வேலை செய்து சில லட்சங்களை சேர்த்து மூத்த அக்காவை கட்டிக் கொடுத்தேன். இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை, இனி ஊருல எதாவது புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக இருந்து பிழைத்துக் கொள்வேன்' என்றான். இன்றும் அவன் நட்பு தொடர்கிறது. 

வரதட்சணையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.

38 comments:

  1. கூட பிறந்த சகோதரிகளுக்காக இப்படி வாழும் சகோதரர்களும் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்.ரொம்ப கொடுமை இந்த மாதிரி அடிவாங்குவது.எவ்வளவு வேதனை அனுபவிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. என்னங்க காட்டுமிராண்டித்தனத்தை
    சட்டப்படி செய்கிறார்களா
    கொடுமையான வீடியோ
    அடித்து முடித்தபின் அந்த புண்களை
    அவர்கள் வீட்டுப் பெண்கள் பார்த்திருந்தால்
    எனக்கு திருமணமே வேண்டாம் என
    நிச்சயம் சொல்லி இருப்பார்கள்
    மனம் பாதித்த பதிவு

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    //இப்ப இரண்டாவது அக்காவின் திருமணத்திற்கு பணமெல்லாம் அனுப்பிய பிறகுதான் மலேசியா போலீஸ் புடிச்சாய்ங்கே. நல்ல வேளை,//
    இப்படி அவர் சொன்னத கேக்கும் போது அழுகை என்னை மீறி வருது.

    ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் தொழிலாளிகளுக்கு இப்படி தான் ஒரு கதை ஒளிஞ்சுருக்கும் இல்லையா? :(

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.ஹைதர் அலி...

    மனித உரிமைக்கு எதிராக செயல்பட்ட மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் என் வன்மையான கண்டனங்கள் மீண்டும்.

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது -படிக்கவும்,
    ரொம்ப கொடுமையாக இருக்கிறது -பார்க்கவும்.

    -----------------------------------

    என்னுடன் பணிபுரியும் சீனியர் டெக்னீசியன் (பிஹாரி) ஒருவர். ஒருநாள் எதேச்சையாக அவருடைய மகன்/மகள் பற்றி விசாரிக்க...

    "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றார்..!"
    கவனிக்கவும்..."நான் திருமணம் செய்து கொள்ளவில்லை" என்று அவர் சொல்லவில்லை.

    அவருக்கு வயது கிட்டத்தட்ட 50-55 இருக்கலாம்.

    அவரின் நெருங்கிய நண்பர் (அவர் எனக்கும் நெருங்கிய நண்பர்) ஒருவரிடம் கேட்டேன்... இதுபற்றி.

    அவர் சொன்னதாவது:

    அந்த பிஹாரிக்கு ஐந்து தங்கைகள்...
    ஒவ்வொருவருக்காய் திருமணம் முடித்துவிட்டு தனக்கு முடித்துக்கொள்ளலாம் என்று இருந்தாராம். கடைசி தங்கச்சிக்கு திருமணம் முடித்து விட்டு தன் கடமை எல்லாம் முடித்த மகிழ்ச்சியில்.. சவூதி வந்தவர், அடுத்த வருடம் தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் நண்பர்களிடம் எல்லாம் பத்திரிக்கை அனுப்புவதாய் சொல்லிவிட்டு ஊர் சென்றாராம்.

    அங்கே... அன்று...

    அவரின் முதல் தங்கையின் மகளை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட...
    ....
    ....
    ....
    இம்முறை சவூதி திரும்பியவரிடம்... அவரின் நண்பர்கள் அவரின் கல்யாணம் பற்றி கேட்க...

    ஊரில் மிக்க சந்தோஷமாக தன் மருமகளுக்கு தன் செலவில் திருமணம் செய்து அனுப்பி வைத்ததை பெருமையுடன் சொல்லி இருக்கிறார்.

    காரணம், அவரின் மச்சான் அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் ஒரு சாலைவிபத்தில் இறந்து இருக்கிறார்.

    இவை எல்லாம் நடந்து சுமார் 6 வருடங்களுக்கு அப்புறம்தான் நான் அவரிடம் அந்த கேள்வியை கேட்டேன்.

    இவரின் இந்த நிலைக்கு காரணம்...???

    ReplyDelete
  5. வரதட்சனை கொடுப்பதை கவுரவமாக நினைக்கும் கேவலமான சிலர் இருப்பதால் தான் இல்லாதோர் அவஸ்த்தை படுகின்றனர்... வரதட்சனை கொடுமை இல்லாமை ஆக்க வேண்டும்

    ReplyDelete
  6. என்ன ஒரு கொடுமையான தண்டனை...

    வீடியோ மனதை பாதித்தது.... வரதட்சனை கேட்பவர்களுக்கு இது போல் தண்டனை கிடைத்தால் கூட பரவாயில்லை ...ச்சே

    ReplyDelete
  7. Assalaamu Alaikkum BROTHER

    கள்ளக் குடியேரிகள்...

    ஒரு நாடு தமது நாட்டு வளர்ச்சிக்காகவும் சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக் கருதி சில அதிகத் தண்டணைகளை குற்றவாளிகளுக்கு வழங்களாம் ஆனால் அதில் அப்பாவிகள் அதாவது ஏஜன்டுகளால் ஏமாற்றப் பட்ட சகோதரர்கள் சிறைவசமும் தண்டனைகளும் பெரும்போது மனது கஷ்ட்டப் படுகின்றது.

    இதர்க்கெல்லாம் மூல காரணம் பணம் அந்தப் பணம் இல்லையென்றால் கட்டிய மனைவிகூட கணவனை ஓரம் கட்டும் நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

    தற்பொழுது மலேசியாவில் அந்த பிறம்பு அடி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.

    எது எப்படியோ நாம் கருத்துச் சொல்வதில் வாயிக்கு வந்தபடி சொல்லிவிடலாம் பாவம் பாதிக்கப் பட்டவர்களின் வலி நமக்கு தெரியுமா?

    எப்போ ஒரு நாடு சட்ட திட்டத்தை கடுமையாக்கி விட்டதோ அச்சட்ட திட்டத்திற்க்கு நாம் முழுமையாக கட்டுப் படனும் அதுதான் நீதி.

    படித்தவர்கள் செய்யும் தவறினால்(ஏஜென்ட்)படிக்காதவர்கள் தண்டனைப் பெருகிறார்கள்.

    உங்களின் வேதனையில் பங்கு கொள்கிறேன்.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வர...
    சகோ.ஹைதர் அலி,

    முதிர்கன்னிகள்,தற்கொலை,விப்ச்சாரம்,சிசுக்கொலை
    கருக்கொலை என வரதட்சிணையால் ஏற்படும் தீமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

    இந்த பட்டியலில் சகோதர்களின் தியாகமும் சேர்க்கவேண்டும்.

    வரதட்சனையின் பின்னே இருக்கும் சோகங்கள் இன்னும் தொடர்கதையாய் போவது சமூக சீர்கேடு.
    இந்த பதிவு மனதை வலிக்கச் செய்கிற்து. எத்தனை சகோதரிகள் இதை உணர்ந்திருப்பார்கள்

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ ஹைதர்அலி!

    மிகவும் மனதை பாதித்த பதிவு. எல்லாவற்றிற்கும் மூல காரணம மனிதனின் தகுதிக்கு மீறிய ஆசையே! சிறந்த பதிவை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வ ஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு!

    ஆரறிவு படைத்த அனைவரையும் பாதிக்க செய்யும் பதிவு! இச்சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீமையை மேலோட்டமாக கண்டு வருத்தம் காட்டும் மக்கள் தான் அந்த நிலையை எட்டும் பொழுது பல கரணங்களை சொல்லி நான் என் தங்கைக்கு, அக்காவுக்கு கொடுத்தேன் நான் எப்படி வாங்காமல் இருப்பது? என்று கூறி தான் முன்னர் பட்ட கஷ்டத்தை மறந்து அடுத்தவர்கள் படும் கஷ்டத்தை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த சமுதாயமும் அதை கண்டிப்பதை விட்டு விட்டு அவன் சொல்வதும் சரிதானே என்று போய்விடுகிறது. அப்படி இல்லாமல் வரதட்சனை வாங்கும் கொடுக்கும் திருமணங்களை சிந்திக்கும் மக்கள் ஒவ்வொருவரும் புற்க்கணிக்க வேண்டும். தற்பொழுது தமிழ்நாட்டில் இஸ்லாமிய சில அமைப்புகள் அல்குர்ஆன் - சுன்னாவின் அடிப்படையில் வலியுரித்தியும் கடைபிடித்தும் வருகிறார்கள் இதை அனைவரும் கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் விரைவில் இத்தீயை விரட்ட முடியும்.

    ReplyDelete
  11. @அமுதா கிருஷ்ணா அவர்களுக்கு
    //கூட பிறந்த சகோதரிகளுக்காக இப்படி வாழும் சகோதரர்களும் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்.ரொம்ப கொடுமை இந்த மாதிரி அடிவாங்குவது.எவ்வளவு வேதனை அனுபவிக்க வேண்டும்.//

    அவர்களின் வேதனையை உள்வாங்கி உணர்ந்து கருத்திட்டமைக்கு நன்றி
    அதே சமயத்தில் வரதட்சணைக்கு எதிராக நீங்களும் இணைய வேண்டும் என்பது இந்த சகோதரனின் ஆசை

    நன்றி சகோ

    ReplyDelete
  12. @Ramani
    //அந்த புண்களை
    அவர்கள் வீட்டுப் பெண்கள் பார்த்திருந்தால்
    எனக்கு திருமணமே வேண்டாம் என
    நிச்சயம் சொல்லி இருப்பார்கள்//

    அடிவாங்கியதை எல்லாம் வீட்டுள்ள யாரும் சொல்வதில்லை வெளிநாடுகளில் ஏற்படும் பதிப்புகளை பொதுவாக யாரும் சொல்வதில்லை

    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. @ ஆமினா அவர்களுக்கு
    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    //ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் தொழிலாளிகளுக்கு இப்படி தான் ஒரு கதை ஒளிஞ்சுருக்கும் இல்லையா? :(//

    கண்டிப்பாக சகோ ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சூழல்கள்

    ReplyDelete
  14. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //இவரின் இந்த நிலைக்கு காரணம்...???//

    பரிதாபம் மட்டும் படுகிறவர்களை பார்த்து கேள்வி கேட்பது போல் இருந்தது உங்கள் கருத்துரை

    நன்றி சகோ

    ReplyDelete
  15. @மாய உலகம்

    நண்பரே
    //வரதட்சனை கொடுப்பதை கவுரவமாக நினைக்கும் கேவலமான சிலர் இருப்பதால் தான் இல்லாதோர் அவஸ்த்தை படுகின்றனர்... வரதட்சனை கொடுமை இல்லாமை ஆக்க வேண்டும்//

    இந்த கொடுமைகளுக்கு மூலக்காரணம் என்ன என்பதை விளங்கி தங்கள் அளித்த கருத்துரைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  16. @மாய உலகம்

    ///வீடியோ மனதை பாதித்தது.... வரதட்சனை கேட்பவர்களுக்கு இது போல் தண்டனை கிடைத்தால் கூட பரவாயில்லை ...ச்சே//

    நண்பன் என்னிடம் சொன்னபோது வாங்கியவனை இதை அடிக்க வேண்டும் என்று சொன்னென் அதையைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள்

    ReplyDelete
  17. @அந்நியன் 2

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    //இதர்க்கெல்லாம் மூல காரணம் பணம் அந்தப் பணம் இல்லையென்றால் கட்டிய மனைவிகூட கணவனை ஓரம் கட்டும் நிலைமைக்கு வந்து விட்டார்கள்.//

    இன்றைய நடப்பு அப்படித்தான் இருக்கிறது இறையச்சம் உள்ளவர்கள் மட்டுமே விலை போக மாட்டார்கள்

    ReplyDelete
  18. @மு.ஜபருல்லாஹ்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //இந்த பதிவு மனதை வலிக்கச் செய்கிற்து. எத்தனை சகோதரிகள் இதை உணர்ந்திருப்பார்கள்//
    சிலர் உணர்ந்திருப்பார்கள் மற்றும் பலரை உணரவைக்க திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருப்போம் நாம்மால் முடிந்த வரை

    ReplyDelete
  19. @சுவனப்பிரியன்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    //மிகவும் மனதை பாதித்த பதிவு. எல்லாவற்றிற்கும் மூல காரணம மனிதனின் தகுதிக்கு மீறிய ஆசையே!//

    இந்த நண்பன் தகுதி மீறி அசைப்பட்ட மாதிரி எனக்கு தெரியவில்லை

    இன்றைய சமூக சூழலில் சாதாரண திருமணத்திற்கே பல இலட்சங்கள் ஆகின்றன சகோ.

    தவ்ஹீத் சிந்தனை அப்போதேல்லாம் ரொம்ப கம்மி சகோ

    உங்களின் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  20. @M. Farooq
    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //இஸ்லாமிய சில அமைப்புகள் அல்குர்ஆன் - சுன்னாவின் அடிப்படையில் வலியுரித்தியும் கடைபிடித்தும் வருகிறார்கள் இதை அனைவரும் கடைபிடித்தால் இன்ஷா அல்லாஹ் விரைவில் இத்தீயை விரட்ட முடியும்.//

    கண்டிப்பாக சகோ இஸ்லாமியர்கள் குர்ஆன் ஹதீஸை பின்பற்றினால் அனைத்து தீமைகளையும் விரட்டி விடலாம்
    அழகான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    நேற்று இந்த பதிவை மட்டும் பார்த்திருந்ததால் உடனே பின்னூட்டம் இட்டிருப்பேன். அந்த வீடியோவையும் சேர்த்தல்லவா பார்த்தேன் :( கலங்கிய கண்களோடும் நடுங்கிய கைகளோடும் என்னால் உடனே பின்னூட்டமிட இயலவில்லை சகோ. ஒருமுறை வீடியோவைப் பார்த்த அதிர்ச்சியில் 'யார் பெற்ற பிள்ளையோ இது' என நமக்கே இவ்வ‌ளவு பாதிப்பு என்றால்... என்ன கொடுமை இது...!

    திருட்டு, விபச்சாரம், கொலை போன்ற கொடிய‌ குற்றங்களுக்கான தண்டனைகள் என்றால் அது இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு நாட்டின் சட்டத்தை மீறுவது குற்றமே என்றாலும் வறுமையின் கஷ்டங்களையும் குடும்பத் துயர்களையும் நீக்க நாடு கடந்து வந்த சகோதரர்கள் செய்யும் இதுபோன்ற தவறுகளுக்கு அதிகபட்சம் சிறைத் தண்டனையே போதுமானது. இந்த தண்டனை நிச்சயம் அநியாயமான, அக்கிரமமான மனித உரிமை மீறலே! இதைத் தட்டிக்கேட்க யாருக்கும் முடியாதா?

    இந்த 'ரோத்த அடி' பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கேன் சகோ. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்த பிறகுதான் அதன் கொடுமையை உணர்ந்தேன். ஒருமுறை சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் வரை போலீஸால் கொண்டுவந்து விடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சகோதரர் உட்காராமல் நீண்ட நேரம் நின்றுக் கொண்டே பேசியபோது, 'இப்படி உட்காருங்களேன், ஃப்ளைட்டுக்குதான் நிறைய நேரம் இருக்கே'ன்னு என் கணவர் சொல்ல, அவர் கண்கள் கலங்கியவராய் 'இங்கேயாவது நின்றுக் கொண்டு பேசுகிறேன். இந்தியா செல்லும்வரை ஃப்ளைட்டில் எப்படி ஸ்டேண்டிங்லேயே போகப்போறேனோ தெரியல' என்று சொல்லிவிட்டு, அவருக்கு கொடுக்கப்பட்ட‌ இந்த தண்டையையும், குடும்ப கஷ்டத்தையும் சொல்லியிருக்கிறார். காயங்கள் ஆறி ஒரு மாதமாகியிருந்தாலும் உட்காரும் அளவுக்கு அவரின் வலி தீரவில்லை. இந்த தண்டனைக்கு பிறகு நரம்பு தளர்ச்சி, இதய பலகீனம், தொடர் முதுகு வலி என ஆயுள் முழுவதும் உடல்நலம் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்குமாம்!! :((

    பாடுபட்டு குடும்பத்தைக் காப்பாற்ற‌ வந்த அந்த உயிரும் உடலும் எப்படி துடித்திருக்கும்..! அதைக் கேள்விப்படும் அவர்களின் குடும்பம் என்ன பாடுபட்டிருக்கும்...! அனைத்துக்கும் மூல காரணம் தன் குடும்ப கன்னிப் பெண்களை கரை சேர்க்க ஏற்பட்ட அவலமல்லவா? "மாய உலகம்" அவர்கள் சொல்லியதுபோல்,

    வரதட்சணை என்ற பெயரில் பணம் தின்னும் பேய்களை மக்கள் மன்றத்தில் வைத்து இதுபோன்ற தண்டனைகளை நாலு பேருக்கு கொடுத்தால் போதும். சமுதாயமும் சீர்பெறும் இன்ஷா அல்லாஹ்! ஆனால் அதை யார் செய்வார்?

    அல்லாஹ் போதுமானவன்!

    ReplyDelete
  22. @அஸ்மா
    அவர்களுக்கு


    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //திருட்டு, விபச்சாரம், கொலை போன்ற கொடிய‌ குற்றங்களுக்கான தண்டனைகள் என்றால் அது இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.//

    மிகச்சரியாகச் சொன்னீர்கள் சகோ.
    இந்திய உள்பட சில நாடுகளில் திருட்டு, விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு கூட இவ்வளவு கடுமையான தண்டனைகள் கிடையாது.
    தண்டனைச் சட்டங்களை மனிதன் தன் சுயபுத்தியினால் வகுப்பதால் இது போன்ற குளறுபடிகள் ஏற்படுகிறது சகோ
    வேதனையில் பங்குக் கொண்டு வரதட்சணையை ஒழிக்க தீர்வை முன்வைத்து தங்கள் அளித்த கருத்துரைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  23. aiyo ithenna kodumai,,
    sariyaana varuththamaay irukku,,
    balikkuthu ungka pathivaippaarththathum ....

    ReplyDelete
  24. மனதை கனமாக்கும் பதிவு !

    ReplyDelete
  25. @vidivelli
    தங்கள் வருகைக்கு நன்றி
    துயரத்தில் பங்கு கொண்டதிற்கும்

    ReplyDelete
  26. @ஷர்புதீன்

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  27. அஸ்ஸலாமு அலைக்கும்,
    பல சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை இந்த வரதட்சனை என்னும் பேய் சீரழித்து இருக்கிறது. ஆனால் இத்தகைய நிகழ்வுகளில் இருந்து நாம் பாடம் பெறுகிறோமா என்பது தான் முக்கிய கேள்வி. பெரும்பாலோனோர் வெறுமனே சில நிமிடங்கள் கண்ணீர் சிந்தி விட்டு கடந்து சென்று விடுகிறோம் என்பது தான் நிதர்சனம். இந்த வரதட்சணையை ஒழிக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருக்கிறோம்? நம்மை நோக்கி நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியிது.

    நபிவழிக்கு முரணாக நடக்கும் பல திருமணங்கள் வரதட்சணை அடிப்படையில் தான் நடக்கிறது. பெண் வீட்டு செலவில் தான் விருந்து. அதை நாம் புறக்கணித்து இருக்கிறோமா? கல்யாணத்திற்கு போகாவிட்டால் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், நண்பன் கோபித்து கொள்வான் என்ற ஏதாவதொரு பதில். இந்த மாதிரி திருமணத்தை / கல்யாண விருந்தை நாம் புறக்கணிக்காத வரை வரதட்சணையை ஒலிக்கவும் முடியாது. அதைப் பற்றி பேச எவ்வித தார்மீக உரிமையும் நமக்கு இல்லை.

    ReplyDelete
  28. @Ibnu Halima
    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..
    அல்ஹம்துலில்லாஹ் அருமையான கருத்துரை சகோ


    //நபிவழிக்கு முரணாக நடக்கும் பல திருமணங்கள் வரதட்சணை அடிப்படையில் தான் நடக்கிறது. பெண் வீட்டு செலவில் தான் விருந்து. அதை நாம் புறக்கணித்து இருக்கிறோமா? கல்யாணத்திற்கு போகாவிட்டால் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், நண்பன் கோபித்து கொள்வான் என்ற ஏதாவதொரு பதில். இந்த மாதிரி திருமணத்தை / கல்யாண விருந்தை நாம் புறக்கணிக்காத வரை வரதட்சணையை ஒலிக்கவும் முடியாது. அதைப் பற்றி பேச எவ்வித தார்மீக உரிமையும் நமக்கு இல்லை.//

    வரதட்சணை வாங்குகிற,கொடுக்கிற அனைத்து திருமணங்களையும் புறக்கனிப்போம் சகோ இன்ஷா அல்லாஹ்.

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும்!
    மிகவும் நாகரிகமான, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் கண்ட‌ நாடாக கருதப்படுகிற சிங்கப்பூரில் இப்படி ஒரு தண்டனையா? மனித உரிமை அமைப்புகள், ஐ. நா. சபை, சில குறிப்பிட்ட இடங்களை மாத்திரம் குறியாக கொண்டு வெளிச்சம் போடும் மீடியாக்கள் இவையெல்லாம் ஏன் மௌனமாக இருக்கின்றன? ம‌னித‌ன‌து ம‌ன‌திலும் உட‌லிலும் மாறாத்த‌ழும்பையும் ப‌ல‌ நீண்ட‌ கால‌ உட‌ல் உபாதைக‌ளையும் ஏற்ப‌டுத்தும் இந்த குற்றத்திற்கு அதிமிகையான‌ த‌ண்ட‌னைக்கெதிராக‌வும் போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌ வேண்டும்.

    வரதட்சணை அல்லது கைகூலிக்கு எதிராக இன்றே நீங்கள் செயல்பட தொடங்கலாம். கன்னிகளாக காலம் கழித்துக்கொண்டிருக்கும் பெண்வீட்டாரின் த‌கவல்களை சேகரித்து நல்ல கைக்கூலி வாங்காத‌ இளைஞர்களோடு வலைமூலமாக இணைத்து வைக்கலாம்.

    டாக்டர். கலீல்

    ReplyDelete
  30. @Dr. Khalil அவர்களுக்கு

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //வரதட்சணை அல்லது கைகூலிக்கு எதிராக இன்றே நீங்கள் செயல்பட தொடங்கலாம். கன்னிகளாக காலம் கழித்துக்கொண்டிருக்கும் பெண்வீட்டாரின் த‌கவல்களை சேகரித்து நல்ல கைக்கூலி வாங்காத‌ இளைஞர்களோடு வலைமூலமாக இணைத்து வைக்கலாம்.//

    நல்ல யோசனை சில சிக்கல்கள் இருந்தாலும் முயற்சி செய்கிறோம்.

    தங்களின் முதல் வருகைக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி டாக்டர்

    ReplyDelete
  31. அபு ஃபைஜுல்July 25, 2011 at 12:00 PM

    அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ
    சகோ: ஹைதர் அலி நான் தாமதமாகதான் தங்கள் பதிவை பார்த்தேன் சங்கடமான விடியோ. மனிதன் எதாற்தத்தை உணரும் வரை இதுபோன்ற அவலங்கள் நடக்கும் நடந்து கொண்டே இருக்கும் எதோ ஓர் இடத்திலாவது. தாகம் எடுத்தால் தண்ணீர் தேவை,பசி எடுத்தால் உணவு தேவை,வயதுக்கு வந்த ஆண், பெண்,இருவருக்கும் இருவரும் தேவை அதை முரையுடன் சேர்த்துவைக்க வேண்டும் செலவு இல்லாமல். எப்போது உணருமோ இந்த சமுதாயம்.

    ReplyDelete
  32. நல்ல பதிவு ,,,, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. @அபு ஃபைஜுல்

    வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

    //மனிதன் எதாற்தத்தை உணரும் வரை இதுபோன்ற அவலங்கள் நடக்கும் நடந்து கொண்டே இருக்கும் எதோ ஓர் இடத்திலாவது. தாகம் எடுத்தால் தண்ணீர் தேவை,பசி எடுத்தால் உணவு தேவை,வயதுக்கு வந்த ஆண், பெண்,இருவருக்கும் இருவரும் தேவை அதை முரையுடன் சேர்த்துவைக்க வேண்டும் செலவு இல்லாமல். எப்போது உணருமோ இந்த சமுதாயம்.//

    முறையாக சேர்த்து வைக்காமல் திருமணம் என்றலே கடினமானதாக மாற்றி விட்டதால் சமூகத்தில் ஏற்ப்பட்ட தீமைகள் கொஞ்ச நஞ்சமல்ல

    இந்த தீமைகளின் ஆணிவேரை அனைவரும் இணைந்து பிடுங்கி எறிவோம் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  34. பதிவு என்னவோ வரதட்சணைக் கொடுமையும் அதில் பாதிப்பவர்களில் ஆண்களும்தான் என்பதுதான். இருந்தாலும், எனது பொறுப்புக்களை சரிவரச் செய்துல்லேனா என்று கண்கலங்க வேயத்துவிட்டது உங்கள் பதிவு. நல்ல பதிவு..

    ReplyDelete
  35. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...

    அருமையான பதிவு...
    சிந்திக்க வேண்டிய பதிவு..

    யா ரப் அந்த வீடியோவை காண ஒரு விதமான மன தைரியம் வேணும்... கதறி சத்தம் போடவில்லையே தவிர கண்கள் குளமாகின...

    நாட்டில் உள்ளவர்களுக்கு நம் பிள்ளை வெளி நாட்டில் இருக்கிறான் என்பது மட்டும் தான் தெரியும்.. ஆனால் அவர்கள் படும் இன்னல்களை அவர்கள் ஒரு போதும் அறிவதில்லை..

    அறியப்படுத்த நம் வீட்டு ஆண் தியாகிகள் விரும்புவதும் இல்லை.. நான் படும் கஷ்டத்தை சொல்லி எதற்கு என் குடும்பம் வருந்தனும் என்ற அவர்களின் பெருந்தன்மையே அவர்கள் குடும்பத்தை நிம்மதியாக வாழ வைக்கிறது....

    வரதட்சணை ஒழிய நாம் ஒவ்வொருவரும் நம் சமுதாயத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்...

    இன்ஷா அல்லாஹ்...

    ReplyDelete
  36. உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நாங்களும் ஊரை/உலகத்தை தெரிஞ்சுக் கிட்டோம்.

    ReplyDelete
  37. எவ்வளவு பெரிய நாலும் தெரிஞ்ச ஆளா இருந்தாலும் இந்த விஷயத்தில் மட்டும் என் விருப்பப்[படியில்லை என் அம்மாவுக்காக என்று சிலர் ஒளிந்து கொள்வது வருத்தமான விஷயம்.பச்சபிள்ளையை அடிப்பது போல் பார்க்க நெஞ்செல்லாம் பதறுது.இந்த கொடுமை ஒரு பக்கமென்றால் இன்னமும் கள்ளிப்பால் கொடுத்து எத்தனை சிசுக்களை கொண்ணுட்டு இருக்காங்க இதனாலேயே.ஆம்பிளைகளை குறை சொல்ல முடியாது..ஒவ்வொரு பெண்ணுமே சிந்தித்தால் தான் இது மாறும்..ஏன்னா வரதட்சனைக்கு அலைவதே மாமியார்கள் தான்

    ReplyDelete