Friday, December 16, 2011

முல்லை பெரியாரும் கள்ள பயல்களும்


வெளிநாட்டு வாழ்க்கை ஒரு வகையில் அருட்கொடை. பல நாடுகளை சேர்ந்தவர்கள், ஒரே நாட்டிலுள்ள பல மாநிலத்தவர்கள் அவர்களிடையே மாறுபடும் பழக்கவழக்கங்கள்,கலாச்சாரம், பண்பாடு இவைகளை பல நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் செய்யாமலே அவர்களுடன் கொஞ்சம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நெருங்கி பழகும் குணமும் இருந்தால் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.

இங்கு மலையாளிகளிடம் நெருங்கி பழகிய வரை எனக்கு தெரிந்தவரை அவர்களிடம் இன உணர்வும் மாநில வெறியும் அதிகம்.  ஒரு வெளிநாட்டுக்காரன் ஒரு தமிழனை நீ எந்த நாட்டுக் காரன் என்று விசாரித்தால் யோசிக்காமல் நான்(இந்தி) இந்தியன் என்று சொல்வார்கள், (நானும் அப்படித்தான் சொல்லி இருக்கிறேன்). அதற்கு பிறகு இந்தியாவில் நீ எங்கே என்று அவர் மேலும் தொடங்கும் போது மெட்ராஸி என்று சொல்லுவார்கள். ஆனால் இதே கேள்வியை மலையாளிகளிடம் கேட்டால் எடுத்தவுடனே நான் கேரளா என்பார்கள். அப்புறம் கேரளா எங்கு இருக்கிறது என்று கேட்டால் இந்தியாவில் இருக்கிறது என்பார்கள்.

இங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் ரூமை உள்வாடகை விடுவதற்காக பொது இடத்தில் விளம்பர நோட்டீஸ் ஒட்டும் போது South Indian Only என்ற வாசகத்தை பயன்படுத்துவர்கள். அதே மலையாளிகள் கேரளா ஒன்லி என்று மலையாள மொழியில் நோட்டீஸ் அடித்து ஒட்டுவார்கள். மலையாளம் வாசிக்க தெரிந்தவர்களுக்குத்தான் அது புரியும். அப்படியொரு  குறுகிய மாநில,இன,மொழி வெறி கொண்டவர்கள்.

அதே போன்று பத்திரிக்கை வாசிப்பது செய்திகளை தெரிந்துக் கொள்வது இதில் மலையாளிகளுக்கு ஆர்வம் ஆதிகம். இரண்டுக்கும் மேற்பட்ட மலையாள நாளிதழ்கள் சவூதியில் அச்சடிக்கப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் அவர்கள் நடத்தும் ஹோட்டல்களில் முழுநேரமும் செய்தி சானல்கள் ஒடிக் கொண்டு இருக்கும். நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கின்ற ஹோட்டல்களில் முக்கால்வாசி டிவி வைத்திருக்க மாட்டார்கள். அப்படியே வைத்திருந்தாலும் அழுகுனி டிவி சீரியல்களும், குத்து பாட்டுக்களும் ஓடிக் கொண்டு இருக்கும். இவர்கள் கொலவெறி பாடல்களில் மயங்கி இருந்த கால கட்டத்தில் அவர்கள் "DAM 999" என்ற படத்தை எடுத்து உலகம் முழுவதும் கேரளாவுக்கு ஆதரவான குரலை ஏற்படுத்தமுடிகிறதை வைத்து புரிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு வகையான ஊடகத்தை வளைத்து திரித்து தங்கள் கருத்தை திணிக்கும் கள்ளத்தனம். இந்த முல்லை பெரியாறு விவாகரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க, பிழைக்க துடிக்கும் பிழைப்புவாதிகள். இரு மாநில மக்களின் நல்லுறவை குலைத்தாவது லாபமடைய நினைக்கும் மனநிலை  அரசியல், ஆன்மிக, மாநில, மொழி, இனம் என்ற போர்வையில் எத்தனை வகையான கள்ளத்தனங்கள்.

இதில் மீடியாக்களின் பொறுப்பற்ற விளம்பரத்தனமான பார்வைகள் மிக அசிங்கமானவை. காலையில் சிற்றுண்டி சாப்பிட இங்குள்ள (சவூதி - ரியாத்திலுள்ள) கேரளா ஹோட்டலுக்கு போயி சேட்டா ஒரு செட் புரோட்டா என்று ஆர்டர் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் கேரளா கைராளி டிவி  நியூஸ் சானலில் முல்லை பெரியாறு ஒடிக்கிட்டு இருந்தது.

அதில் தமிழக கேரளா எல்லையில் உள்ள மலையாளிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கவர் ஸ்டோரி செய்தி. பேட்டி எடுப்பவர்களிடம் தமிழ் கலந்து பேசும் மலையாளிகள் எங்கள் வீட்டுக்குள் தமிழ்காரவுங்கே புகுந்து ஆடு, கோழி பணம் இவைகளை கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள் பாதுகாப்பில்லை என்று அழுகிறார்கள். அதை பார்த்து விட்டு ஆபிஸ்க்கு வந்து தமிழ் செய்திகளை பார்த்தால் தமிழக மக்கள் மலையாளிகளால் பாதிக்கப்பட்ட செய்திகளை கதை கதையாக செய்தி சானல்கள் ஒப்பித்து பாதிக்கப்பட்டவர்களை செய்தியாளர் களத்தில் சந்தித்து கள செய்திகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

மலையாள செய்தி சானல்களை தொடர்ச்சியாக பார்க்கும் மலையாளி, தமிழர்கள் இன வெறியர்கள் அவர்களுக்கெதிராக எதிர்தாக்குதல் நடத்த வேண்டும் என்று நினைப்பது போலவே தமிழ் நியூஸ்களை பார்க்கும் தமிழக மக்களும் உசுப்பேத்தப்படுகிறார்கள். இருபக்கமும் கொம்பு சீவி விடும் வேலையை மீடியாக்கள் திறம்பட செய்கின்றன.

எத்தனையோ தமிழர்கள் கேரளாவில் பல தலைமுறையாக அங்கேயே பிறந்து வளர்ந்து மாநில மொழி பேசி மலையாளிகளாக மாறி போயிருக்கிறார்கள். அதே போல் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மலையாளிகள் அவர்களின் மொழி மறந்து தமிழ் பேசி தமிழர்களாக மாறி இருக்கின்றனர். இப்படி இருக்கிறவர்களை இது போன்ற தருனங்களில் அங்கு தமிழர்கள்கிறுக்கர்களால் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பக்கத்து வீட்டு தமிழனாகி போன மலையாளியை தூக்கி போட்டு மிதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மற்றதன் சிறப்பொக்கும் என்றும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நன்மொழிகளை வழங்கியவர்கள் செய்யக் கூடிய காரியமல்ல இது. நியாயமான முறையிலான போராட்டங்களின் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது தான் சரியான வழிமுறையாகும். ஆனால் இதுபோன்ற அநீதியான செயல்களை யார் இரு பக்கமும் செய்கிறார்கள்? இங்கு தான் கள்ள பயல்கள் வருகிறார்கள்.முதல் வகையான கள்ளர்கள் சமூக விரோதிகள்.


சுனாமி, இயற்கை பேரழிவு நடந்த போது இரக்கமுள்ள அனைத்து மக்களும் உதவி செய்து கொண்டு இருக்கும் போது சில சமூக விரோதிகள் இந்த சூழலை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். பிணங்களின் கையில் இருந்த மோதிரத்திற்காக விரலை அறுத்தவர்கள், தோட்டிற்காக காதை அறுத்தவர்கள்.


மங்களுர் விமான விபத்து நடந்து பல உயிர்கள் கருகி இறந்து கிடக்க உறவினர்கள் பிணத்தை கூட அடையாளம் காண முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் போது சில திருட்டு சமூக விரோதிகள் பயணிகள் கொண்டு வந்த பொருட்கள், நகைகளை கருகிய உடல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுபிடித்து கொள்ளையடித்தவர்கள்.


எகிப்து புரட்சி நடந்தபோது இது போன்ற சமூக விரோதிகள் கடைகளில் புகுந்தும் வீடுகளில் புகுந்தும் கொள்ளையடித்தனர். ஆனால் இதனை தொடர விடாமல் போராட்டக்காரர்களே ஒரு குழு அமைத்து சமூக விரோதிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

இலண்டன் கருப்பு இனத்தவரின் போராட்டங்களின் போது ஊடுருவி சமூக விரோதிகள் கடைகளை கொள்ளையடித்தை இங்கிலாந்தின் மீடியாக்கள் கருப்பர்கள் கொள்ளையர்கள், திருடர்கள். அதற்காகத்தான் கலவரம் செய்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தியது. அதன் பிறகு சமூக விரோதிகள் தான் இந்த செயலை செய்தவர்கள் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

முல்லை பெரியாறு போன்ற போராட்ட பிரச்சனைகளை வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் மலையாளிகள் வீடுகளில் புகுந்தும், கேரளாவில் தமிழர்கள் வீடுகளில் புகுந்தும் திருடுகிறவர்கள், பெண்களை மானபங்கப்படுத்துகிறவர்கள் இந்த சமூக விரோதிகள் தான். இவர்களை அடையாளம் காண வேண்டும். அதை விட்டு விட்டு இதை ஒரு மாநிலத்தவரின் பன்பாக பார்க்கக் கூடாதுஇரண்டாவது கள்ளர்கள் சந்தர்ப்பவாத,வகுப்புவாத அரசியல்வாதிகள்.


திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், ஏ.கே.அந்தோனியின் வீட்டை தாக்க முற்படும் பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பின் போராட்டக்காரர்கள் முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணைகட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்ட ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில்.
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் "டேம்-999 " என்ற இந்த படத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். மத்திய அரசு தயாராக இல்லையெனில் தமிழக அரசு தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் குழுக்கள் பலமுறை சோதனை நடத்தி அணை பலமாக உள்ளது என தெளிவுப்படுத்தியும் கூட மக்களிடம் பீதியை ஏற்படுத்த கேரள அரசு செயல்பட்டு வருவதாக ஊருக்கு ஊரு பேச்சு என்பது போல் அறிக்கை விடுகிறார்.

நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் குண்டர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் செல்லும் முல்லைப் பெரியாறு மதகு பகுதியில் கேட்டுகளை உடைத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது இளைஞர் காங்கிரசாருக்கும், அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட. இந்த மோதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்திருக்கிறார்கள். இதுவெல்லாம் சுத்த அரசியல் கள்ளத்தனங்கள்.

இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அதனுடைய நியாயங்களை ஆதரிப்போம்.

8 comments:

 1. ஸலாம் சகோ...
  சூழ்நிலையின் ஓட்டத்தில் இப்படிப்பட்ட நரிகள் உள்ளே புகுந்து கிடைத்த மட்டும் லாபம் என புடுங்குவதை பலரும் உணர்வதில்லை.. இந்த அரசியல் வியாதிகளும் இதை செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டி கள்ளர்களை அடையாலப்படுத்தியதர்க்கு நன்றி...

  இருந்தாலும் இவ்ளோ க்ளோசா தமிழ் நாட்டு கள்ளன் போட்டோ போட்டு எனக்கு வாமிட் வர வைக்கும் முயற்சியை கைவிட்டுவிடுங்கள் சகோ :).. எனக்கு ஒத்துக்காது.. இனிமே இப்டி செய்யாதீக... நான் பாவம்,....

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 2. We tamilians had one malayali as a Chief minster for 13 years. Still he is being treated as a GOD in tamil nadu. Dear Keralites, you should understand tamilians grateful...

  ReplyDelete
 3. இவர்கள் கொலவெறி பாடல்களில் மயங்கி இருந்த கால கட்டத்தில் அவர்கள் "DAM 999" என்ற படத்தை எடுத்து உலகம் முழுவதும் கேரளாவுக்கு ஆதரவான குரலை ஏற்படுத்தமுடிகிறதை வைத்து புரிந்துக் கொள்ளலாம்.
  nach

  ReplyDelete
 4. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்December 17, 2011 at 6:27 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  ///////இங்கு மலையாளிகளிடம் நெருங்கி பழகிய வரை எனக்கு தெரிந்தவரை அவர்களிடம் இன உணர்வும் மாநில வெறியும் அதிகம்.///////
  100% correct

  டேம்999 படத்திற்க்கு பின் பல‌ மலையாளிகள் நடந்துகொள்ளும் விதமும் கொஞ்சம் கவலையளிக்கிறது.எனக்கு அறிமுகமான ஒரு மலையாளி சம்பந்தமேயில்லாமல் என்னிடம் முல்லை பெரியாறு எங்களுடையது நீங்கள்(தமிழர்கள்) ஏன் பிரச்சினை பண்ணுகின்ரீர்கள்,இன்னொருவர் சொல்கிறார் டேம்999 படம் என்கிட்ட இருக்கு உனக்கு வேண்டுமானு கேட்கிறார்கள்(ஒழுங்காக தண்ணீரை தருமாறு கேட்டால் அது தருவதாக இல்லை யாருக்கு வேண்டும் உன் டேம்999 cd).இதிலிருந்து அவர்களுடைய வெறியின் உச்சத்தை அவதானிக்க முடிகின்றது.

  நாட்டு மக்கள் மீது அக்கறையற்ற சமூக விரோதிகள் திரியை பத்த வைத்துவிட்டார்கள்.இது பூதகரமாக வெடிக்காமல் புஸ்வானமாகி விட்டால் இரு மாநில மக்களுக்கும் நன்மை பயக்கும்.சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களால் மட்டுமே இதற்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும்.ஆனால் அதற்கு முன்வருபவர்களை விடுவார்களா இந்த கயர்வர்கள் நிச்சயம் விடமாட்டார்கள்.

  ReplyDelete
 5. கரையில் இருந்துDecember 17, 2011 at 9:04 AM

  தங்கள் சொல்லுவது 100 % சரி ......
  இங்கு கிழே உள்ள செய்தியை பாருங்கள் தோழரே !!!!


  இவரும் ஒரு மலையாளி தான் ...ஆனால் இவரை போன்றவர்கள் மலையாளி என்று சொல்லுவதற்கு பதிலாக இந்தியன் என்ற சொல்லுவார்கள் !!!!!  :முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரண்டு மாநிலங்களின் மக்கள் இடையே மோதல் சூழல் உருவாவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய பீதியூட்டும், மோதல் சூழலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களை குறித்து கேரள மாநில கவலை அடையும் வேளையில், நான்கு மாவட்டங்கள் வறட்சியினால் தரிசாக மாறிவிடும் தமிழகத்தின் கவலையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

  இப்பிரச்சனையில் பீதியையும், கலக்கத்தையும் விதைத்து உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி தங்களது குறுகிய நோக்கங்களுக்கு உபயோகிக்கும் முயற்சியில் இருமாநில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கேரள மக்களின் பீதியை அகற்ற வேண்டும். அதேபோல் தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களுக்கு உண்டான தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்க வகை செய்யவேண்டும். அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்தது.

  முல்லைப் பெரியாரின் பெயரால் நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையேயான மோதலாக மாறாதிருக்க எஸ்.டி.பி.ஐயின் தமிழக-கேரள தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு தொடர்பான அமளிக்கு இடையே இரண்டு மாநில மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சோர்வடையாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும் இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

  சிந்திக்கவும்: ஒற்றுமைக்கு முன்கை எடுத்துள்ள SDPI தலைமைக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் முல்லை பெரியார் விசயத்தினால் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் சோர்வடைந்து விடாமல் பார்த்து கொள்ளுமாறு தங்களது கட்சியினர்களுக்கு வலியிறுத்தி இருப்பது ஒரு சிறப்பான சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் மாதிரி கூடன் குளம் அணுமின் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று மத்திய அரசை வேண்டாமல் அதை திறக்க கூடாது என்று வலிமையாக குரல் கொடுப்பதற்கு நன்றி.
  நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

  ReplyDelete
 6. மாப்ள நமக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிகம்...அதனால்தான் தாழ்ந்து கொண்டே போகிறோம்...அவனுங்க பேச்சை குறைத்து வீச்சை அதிகமா காட்றாங்க...ஆனா நாம தான் எப்பவுமே வேணாம் வேணாம்னு ஒதுங்கிட்டு இருக்கோம்...இந்த பிரச்சனயில சமூக விரோதிகளுக்கு இடமில்லை...அதே நேரத்தில் இது அட்டகாசமா திரி கிள்ளி போடப்பட்டு இருக்கும் செயல்...பாருங்க... என்னா தில்லு இருந்தா அணுவுலை திறந்தே தீருவோம்னு கொக்கரிசிருக்காங்க...மக்கள் இப்போ அணை மேட்டர்ல உலை மேட்டர விட்டுட்டாங்க...அங்க போராட்டக்காரர்களுக்கு எதிரா எல்லா ஆவணமும் உருவாகியாச்சி!

  ReplyDelete
 7. நல்ல பதிவு,
  சில பேர், முல்லை பெரியாரு விவகாரத்தை, கூடங்குளம் அணுஉலையுடன் ஒப்பிட்டு பேசுவது தவறு. காலத்திற்கேற்றவாரு நாம் நவினத்துடன் இனைந்துகொள்ளத்தான் வேண்டும். அவ்வாரு இணைந்ததன் வெளிப்பாடு தான், நாம் இன்று அணிந்திருக்கும் பேண்டும், சர்டும். இல்லை என்றால் இன்னும் கோவனத்துடன் தான் இருந்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 8. கயவர்களின் கள்ளத்தனத்தை விளக்கினீர்கள். தொல்லை பெரியாறு ஆகிவிட்ட
  முல்லை பெரியாறு
  -இனி இல்லை தகராறு என்று ஆகவேண்டும்.

  ReplyDelete