Saturday, August 18, 2012

உலக மனிதமே இசுலாத்தின் சாரம்!

அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் அன்பு பதிவுலக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பெருநாள் வாழ்த்துகள். வாங்கே எல்லோரும் கொண்டாடுவோம். அன்பை பகிர்ந்து கொள்வோம்.
பழ.கருப்பையா அவர்கள்
மேற்கு ஆசியாவில் மக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான்.ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.

உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி முஸ்லிம்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கஅபாவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு நோக்கித் தொழுகிறார்கள்! வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்றாகும். உலகின் எந்தப் பகுதியிலுள்ள எந்த மண்ணும் ஒருதன்மையானதுதான்!அதற்கென்று தனிப்பெருமையோ சிறுமையோ கிடையாது. அந்த மண்ணில் பிறக்கின்ற மனிதர்களைப் பொருத்து அது பெருமையோ சிறுமையோ அடைகிறது.

நபிகள் நாயகத்தின் ஏற்றமிகு பிறப்பு மக்கா மேன்மைப்படக் காரணமாயிற்று. அதேபோல் யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துப் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை, தன்னுடைய இழிசெயலை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, அவன் வீசி எறிந்த நிலம் 'ரத்த நிலம்' ஆகிச் சிறுமைப்பட்டுவிட்டது நபிகள் நாயகம் (ஸல்) 63 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் பிந்தைய 23 ஆண்டுகள் இறைவாக்குகள் அவர் வழியாக இறங்கின. இறைவாக்கினராக நபிகள் நாயகம் (ஸல்) இருப்பினும், அவர் தன்னைத் தெய்வநிலைக்குத் தூக்கிக்கொள்ள விழையவில்லை! தன்னை எளிய மனிதனாகவே பிறர் கருத வேண்டும் என்பதைத் தன்னைப் பின்பற்றுவோரிடம் சட்டமாக்கினார். 

இசுலாம் என்பதற்கு 'ஒப்படைப்பு' என்பது பொருள். அது முழுச் சரணாகதி நிலை. பொழுது புலர்வதற்கு முன்னர் தொடங்கி, ஒவ்வொரு நாளும் இடைவெளிவிட்டு ஐந்துமுறை தொழுகைக்கு அழைக்கப்படுகிறது. பொதக்குடியிலும் கூத்தாநல்லூரிலும் வாலாஜாபேட்டையிலும் வங்கதேசத்திலும் இரானிலும் ஈராக்கிலும் ஒரேமாதிரியாக ஐந்துமுறை தொழுகை விளிகுரல் ஓரிடத்தில் கூடித் தொழுது இறையிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்ளுமாறு அழைக்கிறது.

இசுலாத்திற்கு ஐந்து கடமைகள் உண்டு என்று திருக்குர்ஆன் விதிக்கிறது.
முதற்கடமை - இறை நம்பிக்கை; இரண்டாவது கடமை - தொழுகை; மூன்றாவது கடமை - ஜக்காத்; நான்காவது கடமை - ரம்ஜான் நோன்பு; ஐந்தாவது கடமை - ஹஜ் யாத்திரை. 
திருக்குர்ஆனில் 'அல்ஃபாத்திஹா' என்று கூறப்படும் தோற்றுவாய்ப் பகுதிக்கான விளக்கங்களை எவ்வளவு விரித்துச் சொன்னாலும், இன்னும் சொல்வதற்கு ஏதோ எஞ்சி நிற்பதுபோன்ற உணர்வே ஏற்படும்!  இறைவன், "அல்லாஹ்" என்றழைக்கப்படுகிறான். "அல்லாஹு அக்பர்" என்னும் சொற்றொடர் இறைவனை மிகப்பெரியவன் என்று பறையறைந்து சொல்கிறது!  

ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே.அவற்றை இறைவனா போட்டான்? 

இசுலாத்தில் 'இறை ஒருமை' இன்றியமையாதது. இறைவனை ஏகன் என்றும் அனேகன் என்றும் இருவேறு வகையாகத் திருவாசகம் கூறும். அதனுடைய பொருள் அவன் வரையறைக்குட்பட்டவனில்லை என்பதாகும். இது மாணிக்கவாசகர் என்னும் மனிதரின் கூற்று. இந்தக் கூற்றோடு உடன்படலாம்; மாறுபடலாம். எதுவும் குற்றமில்லை. மனிதன் கூறியதை மற்றொரு மனிதன் மறுப்பது இயல்பே! இந்து சமயம் நெகிழ்ச்சிப் போக்குடையது.  

ஆனால் திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு! ஆகவே ஐயத்திற்கிடமான விவாதிக்கத்தக்க நிலை என்று குர்ஆனில் எதுவுமே இருக்க முடியாது. எல்லாமே தீர்மானமாகச் சொல்லப்பட்டவை! மாற்றம் செய்ய எந்த மாந்தனுக்கும் உரிமையில்லை. இசுலாம் கட்டிறுக்கமானது. இன்றைய உலகமயமாக்கல் எல்லா நாகரிகங்களையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. சிலரைக் கொழுக்க வைத்துப் பலரை அன்னக்காவடிகளாக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையே அகிலத்தின் கொள்கையாகிவிட்டது. 
ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு பண்பாடு என்னும் நிலையை நோக்கி எல்லா நாடுகளும் தங்களின் தனித்தன்மையை இழக்குமாறு செய்யப்பட்டுத் தலைகீழாக இழுத்துச் செல்லப்படுகின்றன. முன்பு சோசலிசக் கோட்பாடு தடுத்து நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரம், இன்று தடுப்பாரின்றித் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அமெரிக்கச் சீரழிவுக் கலாசாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாசாரம் இசுலாமியக் கலாசாரம்தான். அதற்குக் காரணம் அதனுடைய கட்டிறுக்கமான அமைப்புத்தான். 

நபிகள் பெருமகனார் எல்லாத் தட்பவெப்ப நிலைகளையும் தாங்குவதற்கும் எதிர்கொள்வதற்கும் தோதாக "உம்மா" என்கிற இசுலாமியச் சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறார்! அரபுத் தேசியத்தைக் கட்டியமைக்கப் புறப்பட்ட நபிகள் பெருமானார் கஅபாவிலிருந்து விக்கிரகங்களை விலக்கினாரே ஒழிய, கஅபாவை விலக்கிவிடவில்லை. கஅபா என்னும் பழைய அரபு வேரிலிருந்து புதுமை படைத்தவர் நபிகள் பெருமானார். 

ஒருவன் இசுலாமியனாகத் திகழ்வதற்கு இறைநம்பிக்கை எப்படி இன்றியமையாததோ, அப்படியே இன்றியமையாதது கூடித் தொழுதல். தொழுகை விளிகுரல் தொழுகைக்கான நேரத்தை வரையறுத்து அழைப்பதன் நோக்கமே கூடித் தொழுதலின் இன்றியமையாமை காரணமாகவே! ஆகவே இசுலாத்தில் தொழுகை தனிமனித விவகாரமில்லை. அது சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. 

தொழுதால் போதாதா? கூடித்தான் தொழ வேண்டுமா என்று கேட்டால், இசுலாம் "ஆம்" என்று உறுதிபடக் கூறுகிறது. 

தொழுதல் 'உம்மாவோடு' தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. உம்மா என்பது சமூகம். அது ஒரு கொள்கை வழிப்பட்ட கூட்டத்தைக் குறிக்கிறது. இது நபிகள் பெருமானாரின் தனிப் பெருஞ்சிந்தனை! 
இஸ்தான்புல்லில் உள்ள இப்ராஹீமோடு நம்முடைய இளையான்குடி புதூரில் உள்ள அப்துல்லாஹ்வும் இணைய முடிவதற்கு நபிகள் பெருமானார் உருவாக்கிய உம்மாதான் காரணம்! இசுலாத்தில் 'உம்மா' முக்கியத்துவம் உடையது என்பதால் கூடித் தொழுதல் முக்கியத்துவமுடையதாகி விடுகிறது. 

(கடைசிக்) கடமையான ஹஜ் யாத்திரையின் நோக்கமே இந்தச் சமூகக் கட்டமைப்பைக் கெட்டிப்படுத்துவதுதான்! 

மக்கா கஅபாவின் முன்னால் ஆப்பிரிக்கரும் சீனரும் இளையான்குடி புதூர் திராவிடரும் வளைகுடா நாட்டு அரேபியரும் டாக்காவைச் சேர்ந்த வங்காளியும் பாகிஸ்தானைச் சேர்ந்த பஞ்சாபியும் அருகருகே குனிந்தும் நிமிர்ந்தும் கைகளைச் சேர்த்தும் விரித்தும் ஒரே மாதிரியாகத் தொழும்போது ராணுவ அணிவகுப்புத் தோற்றுவிடும் என்பது அழகியல் பார்வை! விரிந்து, பரந்த, சமூக உருவாக்கம் நபிகள் பெருமானாரின் சிந்தனையாக இருந்தது என்பது கருத்தியல் பார்வை! 

அரபு தேசியத்திலிருந்து படிப்படியாக விரிந்து, உலக சமுதாயத்தை நோக்கி வளர்கிறது நபிகள் பெருமானாரின் கூடித் தொழுதல் என்னும் கோட்பாடும் உம்மா உருவாக்கமும்! இசுலாத்தின் மூன்றாவது கடமை ஜக்காத். ஒருவன் தன் வருவாயில் நாற்பதில் ஒரு பங்கை, அஃதாவது இரண்டரை விழுக்காட்டை ஏழைபாழைகளுக்கு வழங்குவது! இந்தத்தொகை ஒன்றும் அதிகமானதில்லை. யாருக்கும் இயலக்கூடியதுதான்! 

ஒரு சமூகத்தில் சிலர் வசதியானவர்களாகவும் பலர் வறியவர்களாகவும் இருக்கும்போது, வறியவர்கள் இயல்பாக வாழ வழி செய்யப்படவில்லை என்றால் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதும் வழிப்பறியாளர்களாகக் கையோங்குவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். அத்தகையச் சூழ்நிலையில் எந்த அரசும் வறியவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது! 

ஆகவே உலகிலுள்ள எல்லா நெறியாளர்களும் கொடையைப் போற்றியிருக்கிறார்கள். "ஈத்துவக்கும் இன்பம்" என்று ஈகை பாராட்டி அதை ஊக்குவிப்பான் வள்ளுவன். வறியவர்கள் பெருவாரியாக இருக்கும் உலகில் ஈகை வறுமைக்குத் தீர்வாகாது எனினும், அது பேருந்துகளிலுள்ள அதிர்ச்சிதாங்கிபோல் செயல்படுவதால், வறியவர்கள் பொங்கி எழுந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதில்லை. 

இன்றைக்கு ஒரு கிலோ அரிசி ரூ.38க்கு விற்கும் நிலையில் வறியவர்களுக்கு ஓர் அரசு ரேஷன் கடையில் கிலோ 1 ரூபாய்க்கு அரிசி போடுவது, வறியவர்களின்மீது கொண்ட பற்றினால் அல்ல; ஆட்சியிலிருக்கும் வசதிமிக்க கோமான்கள் தங்களையும் தங்களையொத்த வசதியானவர்களையும் கிளர்ச்சிகளிலிருந்து காத்துக்கொள்வதற்காகத்தான்! 
எல்லாரும் கொடுப்பதைப் பாராட்டுகிறார்கள் எனினும் "ஈவார் மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவன் புகழாசை காட்டி கொடுக்கச் சொல்கிறான் என்றாலும், நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார். 

"ஜக்காத் கொடுக்காதவர்களின் நம்பிக்கையையோ தொழுகையையோ அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை" என்று நபிகள் பெருமானார் அடித்துக் கூறும்போது, ஏழைபாழைகளின்மீது அவர் கொண்டுள்ள பரிவு அல்லாஹ்வின்மீது கொண்டுள்ள அன்பையும் விஞ்சி நிற்கிறது! 

நான் முதற்கடமையான கடவுள் நம்பிக்கை உடையவன்; இரண்டாவது கடமையான தொழுகையையும் தவறாது நிறைவேற்றுபவன் என்று ஒருவன் நபிகளிடம் சொன்னால், மூன்றாம் கடமையான ஈயும் குணம் உன்னிடம் இல்லை. ஆகவே அல்லாஹ் உன்னை ஏற்க மாட்டார் என்று தள்ளிவிடுகிறார். 

மூன்றாம் கடமைக்குள் முதலிரண்டு கடமைகளையும் அடக்கிய நபிகள் பெருமானாரின் சிந்தனை ஈடுஇணையற்ற அழகுடையது; ஒப்பற்றது; சமூக உய்வை நோக்கமாகக் கொண்டது! 

தீர்ப்பு நாளன்று நீங்கள் செய்த நல்ல தீய செயல்களுக்குத் தக்க வெகுமதி அல்லது தண்டனை உண்டு என்று திருக்குர்ஆன் சொல்வது நாம் ஏற்கெனவே கேட்டறிந்த கோட்பாடுதான்! 

ஆனால் செய்யத்தவறிய செயலுக்குக்கூடத் தீர்ப்புநாளில் தண்டனை உண்டு என்று நபிகள் சொல்வதும் "உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தும், உங்கள் பக்கத்திலேயே ஆதரவற்றவர்கள் இருந்தும் அவர்களுக்கு ஏன் உதவவில்லை? என்ற கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்" என்று சொல்வதும் நாம் கேட்டறியாத ஒப்பற்ற கோட்பாடு! 

நான்காம் கடமை ரம்ஜான் நோன்பு. அந்த நோன்பு மாதம் முழுவதும் உண்ணாமலும் எதையும் அருந்தாமலும் இணைவிழைச்சு முதலியவற்றில் ஈடுபடாமலும் பகற்பொழுது முழுவதையும் கழிப்பது; தொழுவது!
பொதுவாகப் பண்டிகைகள் ஆட்டபாட்டம், விருந்து என்ற வகையில் கொண்டாடப்படும். ஆனால் பட்டினி கிடந்து பண்டிகை கொண்டாடு என்ற சிந்தனை இன்னொரு அழகிய சிந்தனை. 


பட்டினி கிட; பசியை உணர்; பசித்தவனுக்குச் சோறுபோடு! இதுதான் நான்காம் கடமையின் உட்பொருள். ஒரு திருவிழாவைப் பட்டினித் திருவிழாவாக்கி, பட்டினிக்கு எதிராக இயக்கம் நடத்திய நபிகள் பெருமானாரின் உன்னதமான சிந்தனை உலகை உயர்த்தவல்லது. 
ஐந்தாம் கடமையான ஹஜ் யாத்திரை உம்மாவோடு இணைத்து ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது! இசுலாத்திற்கு ஏக இறைத்துவம் எனப்படும் இறை ஒருமை முக்கியம்! இறையச்சம் முக்கியம். இறைவனுக்கு இணை சொல்லக்கூடாது என்பது முக்கியம். தீர்ப்பு நாளில் நம்பிக்கை முக்கியம். 
ஐந்துவேளை தொழுகை முக்கியம். ஜக்காத் முக்கியம். உம்மா முக்கியம்.
இன்னும் எத்தனையோ முக்கியங்கள் உண்டு. விரித்தால் விரிகடலெனப் பெருகும். 
ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் உடன்பிறந்தோன் என்பதை வலுப்படுத்தவே ஹஜ் யாத்திரை. தனிச்சாதி, தனிக்குலம், தனி இனம் என்பதெல்லாம் தகர்ந்து போகும். தேசத்தின் எல்லைக் கோடுகள் தளர்ந்து போகும். தகர்ந்துதான் போகட்டுமே. அவற்றை இறைவனா போட்டான்? 

1947-க்கு முன்பு நம்முடைய தேசபக்தி முழுப் பஞ்சாபையும் முழு வங்காளத்தையும் உள்ளடக்கியது. 1947-க்குப் பின் கிழக்கு வங்கத்தின்மீதும் பலுசிஸ்தான்மீதும் பற்றுக் காட்டுவது தேசபக்தி ஆகாது. 
நம்முடைய தேசபக்தி ஒச்சமுடையதுபோலும். ஒருகாலத்தில் விரிகிறது; பிறிதொரு காலத்தில் சுருங்குகிறது. "யாதும் ஊரே; யாவருங் கேளிர்" என்னும் தமிழ்ச் சிந்தனை உலகு தழுவியது. 
நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே. உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான். உலக மனிதமே இசுலாத்தின் சாரம். 
நன்றி : பழ. கருப்பையா Dinamani.com.

10 comments:

  1. அழகான முறையில் விளக்கம் தந்தார் திரு.பழ.கருப்பையா அவர்கள்.
    அதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    ReplyDelete
  2. அஸ்ஸலாம் அலைக்கும்...சகோ, " ஈத் முபாரக் " உலக மனிதமே இஸ்லாத்தின் சாரம்...இஸ்லாம் அதை சாதித்து காட்டும் அதுவரை பொறுமையாக இருப்போம் .....
    அருமையான ஆக்கம் ...மிக்க நன்றி பாய்.

    ReplyDelete
  3. ஸலாம் சகோ.ஹைதர் அலி.......

    //நபிகள் பெருமானாரின் சிந்தனையும் உலக மனிதனின் உருவாக்கமே.உலக மனிதனை உருவாக்குவது இன்னும் கற்பனாவாதமாகவே இருந்தாலும், இசுலாத்தின் முயற்சி அதுதான். உலக மனிதமே இசுலாத்தின் சாரம். //

    அதாவது....

    'Citizen Of World' --ஆ ஒவ்வொருவரும் எண்ணம் கொள்ளனும் என்றுதானே...? :-)

    ReplyDelete
  4. sako..

    nalla pakirvu!

    naankaam madamai nonpu ena maatri sollukiraar!

    neengalaavathu adaippu kurikkul-
    thannilai vilakkam koduththu irukkalaam...

    ReplyDelete
    Replies
    1. sako!

      kadamaiyai -
      madamai ena thappaaka thattachu seythu vitten-
      remove seythu vidungal!

      Delete
  5. சகோ சீனி!

    //naankaam madamai nonpu ena maatri sollukiraar!//

    தட்டச்சு செய்யும் போது தவறாக அடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். மடமை அல்ல கடமை.

    மற்றபடி வழக்கம் போல் பழ கருப்பையா அவர்களின் விளக்கம் சிறப்பாக இருந்தது.

    //ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று.//

    முகமது நபி பிறந்ததனால் அந்த நகரம் புனிதப்பட வில்லை. அதற்கு முன்பிருந்தே பல நபிமார்கள் அவர்களை பின்பற்றிய மக்கள் அந்த நகரை புனிதமாகவே கருதி கஃபாவை வலம் வந்தனர். இப்படி சிறு தவறுகள் ஒன்றிரண்டு.

    அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. thavarai kurippittathukku nantri!

      thappu nadanthu vittathu!

      Delete
  6. //நபிகள் பெருமானார் ஜக்காத் என்று சொல்லப்படும் கொடையை இசுலாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக்கி அதைக் கட்டாயமாக்கிவிடுகிறார்.//

    இன்று இலவசம் என்று வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மட்டும் வழங்கும் அரசாங்கம் அதை எல்லா வருடங்களிலும் வழங்குமா என்பது கேள்வியே.
    ஆனால் இஸ்லாமிய மார்க்கம்"ஜக்காத்"என்னும் ஏழைகளுக்கு செலுத்த வேண்டிய வரியை கட்டாயம் ஆக்கியிருப்பதால் எல்லா வருடமும் அவ்வரி கட்டாயமாக செலுத்தப் படுகிறது என்பதினை அறியும்போது மனம் சந்தோஷம் அடைகின்றது.

    இக்கட்டுரையை எழுதிய அய்யா பழ கருப்பையா அவர்கள் மிக தெளிவாக எழுதியுள்ளார்கள் வாழ்த்துக்கள் !

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள் சகோ.

    அஸ்ஸலாமு அழைக்கும்.

    ReplyDelete
  7. please visit this link:


    தீண்டாமைக்கு இது தான் தீர்வு.. இது மட்டுமே தீர்வு. (காணொளி)

    http://meiyeluthu.blogspot.fr/2012/08/blog-post_19.html

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் மிக அருமையான பகிர்வை பகிர்ந்து இருக்கீங்க

    ReplyDelete