உமர் இப்னு அல்-கத்தாப் கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவருமாவார் என்று சொல்லலாம். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக் வயதில் இளையவரான உமறும் மக்காவிலே பிறந்தார். அன்னார் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. அநேகமாக கி.பி. 586 ஆம் ஆண்டாக இருக்கலாம்.
துவக்கத்தில் உமறு, முஹம்மது நபி (சல்) அவர்களுடைய, புதிய மார்க்கத்திற்கும் கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார். (தூய பவுல்-கிறிஸ்தவத்தில் சேர்ந்த நிகழ்ச்சிக்கு ஒப்பாகக் கருதத்தக்கது). முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆலோசகர்களில் ஒருவராய் உமறு ஆகி அன்னாரின் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்.
தமக்குப் பின்னால் யார், பதவிக்கு வர வேண்டும் என்பதைக் குறிப்பிடாமலேயே முஹம்மது நபியவர்கள் 632 ஆம் ஆண்டில் காலமானார்கள். உடனேயே உமறு தயக்கம் எதுவுமின்றி முஹம்மது நபியவர்களில் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபூபக்கர் பதவி ஏற்க வேண்டுமென்று ஆதரவு தெரிவித்தார். இதனால், பதவிப் போட்டி தவிர்க்கப்பட்டு, அபூபக்கர் முதல் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்க முடிந்தது.
உமறு கி.பி. 634 இல் பதவியேற்று, 644 வரை பதவியில் இருந்தார். அந்த ஆண்டில் அவரை பாரசீக அடிமை ஒருவன் மதீனாவில் குத்திவிட்டான். மரணப் படுக்கையில், உமறு தமக்குப் பின் பதவிக்கு வருபவரைத் தேர்ந்தெடுக்க அறுவர் கொண்ட ஒரு குழுவை அமைத்து (அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று) ஏற்பாடு செய்தார். இவ்வாறாக, மீண்டும் பதவிக்கான ஆயுதப் போட்டி தவிர்க்கப்பட்டது. இந்தக் குழு மூன்றாம் கலீபாவாக உதுமானைத் தேர்ந்தெடுத்தது. அவர்கள் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார்கள்.
உமறுடைய பத்தாண்டு கிலாபத்தின் போதுதான், அரபுகளுக்கு முக்கிய வெற்றிகள் கிட்டின. உமறு பதவியேற்ற சிறிது காலத்தில், அப்போது பைஸாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும், பாலஸ்தீனும் அரபு இராணுவத்தின் படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (636) அரபுகள் பைஸாந்தியப் படையினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றி கண்டனர். அதே ஆண்டு டமாஸ்கசும் (திமிஷ்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஜெரூசலேமும் சரணடைந்தது. கி.பி. 641 -க்குள், பாலஸ்தீன் முழுவதையும் சிரியாவையும் அரபுகள் வெற்றி கொண்டு, இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டையும் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். 639 இல் பைஸாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீதும் அரபு இராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது.
உமறு அவர்கள் பதவியேற்பதற்கு முன்னரே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது. கி.பி. 641-க்குள் ஈராக் முழுமையும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டது. அது மட்டுமல்ல அரபு இராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுத்தது. நஹாவந்துப் போரில், கடைசி ஸஸ்ஸானியப் பேரரசின் படைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. உமறு 644 இல் காலமானார். அப்போதே, கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டு விட்டது. உமறு காலமான பின்னருங்கூட அரபு இராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே, அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்ரிக்காவை நோக்கி அவை முன்னேறின. உமறு அவர்களுடைய வெற்றிகளின் பரப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவை நிரந்தரமாகவும் இருந்தன என்பதுதான். ஈரானிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்றாலும், இறுதியில் அவர்கள் அரபு ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையாக அரபு மயமாகின என்பதுடன், இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன.

தம்முடைய படைகள் வெற்றி கொண்ட இப்பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்வதற்குரிய தக்க திட்டங்களை உமறு வகுக்க வேண்டியதாயிற்று. அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகி கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் உமறு முடிவெடுத்தார். பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும். இன்னும் குறிப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேருமாறு செய்யக்கூடாது என்றும் அன்னார் வழி செய்தார்கள். (இதிலிருந்து அரபிகளில் போர் வெற்றிகளுக்கு தேசிய விரிவாக்கம் நோக்கமாக இருந்ததே தவிர, அவை (மதத்தைப் பரப்பும்) புனிதப் போர் அல்ல என்பது மேற்கண்டவற்றிலிருந்து தெளிவாகும். எனினும், மத அம்சமும் இல்லாமலில்லை)
உமறுடைய சாதனைகள் நிச்சயமாக எவர் மனதிலும் ஆழ்ந்து பதிந்து நிற்கக் கூடியவை. முஹம்மது நபியவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு அன்னார் முக்கியமான காரண புருஷராக விளங்குகிறார்கள். அவர்களுடைய வேகமான வெற்றிகள் இல்லாதிருந்தால், இஸ்லாம் இன்றிருக்கும் அளவுக்குப் பரவியிருக்குமா என்பது சந்தேகம்தான். அன்றியும், அன்னார் காலத்தில் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் பல இன்றும் அரபுத் தன்மையுடையதாகவே இருக்கின்றன. இவ்வளர்ச்சிகளை முக்கியமாக இயக்கி வைத்தவர் என்ற நிலையில் முஹம்மதுஅவர்களுக்குப் பெருமளவு புகழுண்டு. எனினும், உமறு அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிப்பது பெருந்தவறாகும். உமறு கண்ட வெற்றிகள் முஹம்மது நபி தந்த ஊக்கத்தினால் மட்டுமல்ல (இஸ்லாமிய ஆட்சியின்) ஓரளவு விரிவாக்கம நிச்சயமாக நிகழக்கூடியதுதான். ஆனால் உமறு அவர்களின் ஒளிமிக்க தலைமையின் கீழ் வெற்றி கண்ட அளவுக்கல்ல.
உமறு அவர்களின் தலைமையின் கீழ் அரபுகள் வெற்றி கொண்ட நிலங்கள் அவற்றின் பெரும் பரப்பையும் அவை நிலையாக அவர்கள் ஆட்சியில் இருந்துவரும் கால அளவையும் கொண்டு கணக்கிட்டால், அவர் சீசர், சார்லமான் ஆகியோரின் வெற்றிகளைவிட உறுதியான முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை என்கிற the 100 (நூறு பேர்) புத்தகத்திலிருந்து நூலாசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவரின் கருத்துக்களை மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன் இப்பதிவில்.
புதிய வரலாறு படைத்தோரின் வரிசைமுறை என்கிற the 100 (நூறு பேர்) புத்தகத்திலிருந்து நூலாசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் என்பவரின் கருத்துக்களை மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன் இப்பதிவில்.
No comments:
Post a Comment