Sunday, April 12, 2015

உங்கள் செல்பேசியில் காங்கோ குழந்தையின் கதறல் கேட்கிறதா?

நாம் பயன்படுத்தும் செல்போன் ,மடிக்கணினி , ரேடியோ, டி.வி. எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படும் கபாஸிடர்களுக்காக  காங்கோ நாட்டில் பல பேர் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். என்பது தெரியுமா? அறியாத அப்பாவி மக்கள் சுரண்டப் படுவது தெரியுமா?

கால்டன் என்பது கொலம்பியம் - டான்டலம் என்ற இரு உலோகங்கள் அடங்கிய தாதுப்பொருள். இதில் டான்டலம் என்கிற சமாச்சாரம் அதிக சூட்டைத் தாங்கக் கூடியதால் அதை உபயோகித்து கபாஸிடர் எனப்படும் மின்னேற்பிகள் செய்கிறார்கள். மின்சாரத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தரவல்ல இந்த மின்னேற்பிகள் இல்லாமல் எலக்ட்ரானிக்úஸ இல்லை! எனவே நம் செல்போன், ரேடியோ, டி.வி. சகலத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது டான்டலம். உலகில் மிகச்சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் கால்டனுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு. உலகத்தின் மொத்த கால்டனில், எண்பது சதவிகிதம்இங்கேதான் கிடைக்கிறது. உலகச் சந்தையிலோ ஏராளமாக டிமாண்ட்.  காங்கோ மக்கள் அப்பாவிகள், கோட்டை விட்டார்கள். ஆளாளுக்கு காங்கோவில் புகுந்து கால்டன் உள்படப் பல இயற்கை வளங்களையும் சூறையாடிவிட்டு, போகிற போக்கில் ஒரு உதையும் கொடுத்துவிட்டுப் போகும் அவல நிலை.

கால்டனை அகழ்ந்தெடுப்பது சுலபமான வேலை. மண்வெட்டியால் மண்ணைத் தோண்டி பக்கெட்டில் போடுங்கள். தண்ணீர் ஊற்றி அலசுங்கள். கால்டனில் சற்று கனமான உலோகங்கள் இருப்பதால் அடியில் தங்கிவிடும். அப்படியே கொண்டுபோய் நிழலான ஏஜெண்ட்டுகளிடம் கொடுங்கள். அவர்கள் மனமுவந்து தரும் சொற்பத் தொகையை வாங்கிக்கொண்டு வழிப்பறித் திருடர்களிடம் மாட்டாமல் வீடு திரும்பினால் அன்றைக்கு வீட்டில் அடுப்பெரியும். ஒரு சுறுசுறுப்பான குழுவால் தினம் ஒரு கிலோ கால்டன் சேகரிக்க முடியும். 450 ரூபாய் வரை கிடைக்கும். தரகர்களைக் கடந்த பிறகு மார்க்கெட்டில் விலை என்ன தெரியுமா? ரூபாய் இருபதாயிரம்!
காங்கோ பாவம்... சின்ன வயசிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்ட தேசம். பதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் வந்து கால் வைத்த போது ஆரம்பித்தது சனி. ஒரு கட்டத்தில் அவர்கள் கப்பல் கப்பலாக அடிமைகளைப் பிடித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். உள்ளூர் மக்களின் சுதந்திரப் போராட்டம் வெற்றி பெறமுடியவில்லை.
காங்கோ மன்னரே ஐரோப்பியர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கண்ணடித்துவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொண்டார். நடுவில் வாடிகன் சர்ச் நுழைந்து எரிகிற வீட்டில் பிடுங்கியது. பிறகு பெல்ஜியம் நேரடியாக நாட்டை அடிமைப்படுத்தியது. காலனி ஆட்சியில் காங்கோ மக்கள் அனுபவித்த நிறவெறிக் கொடுமைகளைப் பற்றி நிறையப் பேர் ஆர்ட் படம் எடுத்து அவார்ட் வாங்கியிருக்கிறார்கள்.
1965-ல் சி.ஐ.ஏ. உதவியுடன் ஆட்சியைக் கவிழ்த்துப் பதவியை அபகரித்த தளபதி மொபுடு, நாட்டின் பழைமையான கலாசாரத்தையும் தேசிய கௌரவத்தையும் ஐரோப்பிய மிலேச்சர்களிடமிருந்து காப்பாற்றப் போகிறேன் என்று சூளுரைத்தார். நாட்டின் பெயரை ஜயர் என்று மாற்றிவிட்டு, தன் பெயரையும் ஒரு பாராவுக்கு வைத்துக்கொண்டார். ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக தேர்தலில் நின்று ஜெயித்தார்.
மொழிப் பாதுகாவலையும் விட்டு வைக்கவில்லை. "எங்கள் தாய் கோங்கோ மொழி, இன்பக் கோங்கோ எங்கள் உயிருக்கு நேர்' என்று பாட்டுப் பாடி தார்ச்சட்டியை எடுத்துக்கொண்டு பெயர்ப் பலகைகளிலெல்லாம் ஃப்ரெஞ்சை அழித்தார். பிறகு நாட்டை அழித்தார். தேசத்தில் பாதியை விற்று தன் ஸ்விஸ் வங்கிக் கணக்கில் போட்டார். ராணுவத்துக்குச் சம்பளமே தராமல், நேரடியாகப் பொது மக்களிடமிருந்து முடிந்தவரை அடித்துப் பிடுங்கிக் கொள்ளுங்கள் என்று அவிழ்த்துவிட்டு விட்டார். அராஜகம்!
காங்கோவில் தங்கம், வைரம், தாமிரம் என்று ஏராளமான இயற்கை வளங்கள். வற்றாத ஆறுகள், ஏரி, பொருள்களுக்குக் குறைச்சலே இல்லை. இருந்தும் சராசரிக் குடிமகனின் மாத வருமானம் 400 ரூபாய்; சராசரி வாழ்நாள் 42 வருடங்கள். பணவீக்கம் ஒரு சமயம் ஆறாயிரம் சதவிகிதம் வரை எகிறி நாடே மாபெரும் கப்பரையாகிவிட்டது. காரணம், அரசியல்! 


பாம் வெடிக்கும் பிரிவினைவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு பட்டாசு சப்ளை செய்யும் பக்கத்து நாடுகள், அவ்வப்போது ராணுவ ஆட்சி, ஆட்சியில் பயங்கர ஊழல், ஊழலுக்குத் துணை நிற்கும் மேற்கத்திய நாடுகள், மேற்கத்திய அநியாயங்களை அதட்டிக் கேட்க முடியாமல் முப்பது வருஷமாக அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கும் ஐ.நா.சபை என்று கச்சிதமாக எல்லாம் விதிப்படியே நடந்துகொண்டிருந்தது.
காங்கோவின் தீவிரவாதப் பிரச்னை, பற்பல பரிமாணங்கள் கொண்ட பன்னாட்டுச் சிக்கல். இந்த மொபுடு சும்மா இருக்கமுடியாமல் ருவாண்டா, உகாண்டா, அங்கோலா என்று பல நாடுகளின் உள்நாட்டுச் சண்டையில் தலையிட்டு ஊதித் தொலைத்துவிட்டார். அவரவர்கள் கோபம் கொண்டு ஆளுக்கொரு தீவிரவாதக் குழுவுக்குக் கொம்பு சீவி காங்கோவுக்கு அனுப்பி வைக்க, இந்தப் பிரதேசத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் ஃப்ரான்ஸ் மட்டம் தட்டுவதற்காக அமெரிக்காவும் புகுந்த அலம்பல் செய்ய, ஆயுதம் தாங்கிய அகதிகள் பிரச்னை வேறு சேர்ந்துகொள்ள, எல்லாத் தரப்பினரும் காங்கோவை பன் மாதிரி பிய்த்து டீயில் தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
இந்தப் பின்னணியில் மறுபடி கால்டனுக்கு வருவோம். காங்கோவின் உள்நாட்டுப் போர் முடிவில்லாமல் நீள்வதற்கு கால்டன் தரும் பணம் ஒரு முக்கிய காரணம். கால்டன் சுரங்கங்கள் திட்டமிட்டு சுரண்டப்பட்டு பல தீவிரவாதக் குழுக்கள் கையில் போய்ச் சேருகிறது. பக்கத்து நாடான ருவாண்டாவின் ராணுவம் காங்கோவில் புகுந்து ஒரே வருஷத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கால்டனைக் கடத்தியிருக்கிறது. 
காங்கோவின் பல்லாயிரம் வருட சொத்தான ட்ராபிகல் காடுகள் ஐம்பதே வருடத்தில் மழுங்கச் சிரைக்கப்பட்டு எங்கெங்கும் பள்ளம் தோண்டி வேளச்சேரி மெயின் ரோடு மாதிரி ஆகிவிட்டதற்குக் காரணம் கால்டன். உள்ளூர் மக்களின் விவசாய நிலங்களெல்லாம் துப்பாக்கி முனையில் அபகரிக்கப்பட்டு கால்டன் சுரங்கமாக மாறியதன் விளைவு - விலா எலும்பு தெரியும் குழந்தைகள். அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் கட்டாயமாக கால்டன் தோண்ட கொத்தடிமையாகவும் பிடித்துப்போகிறார்கள். குடியும் குடித்தனமுமாக அமைதியாக வாழ்பவர்கள் குறைந்துபோய், நாடு முழுவதும் சுரங்கத் தொழிலாளர்களும் போராளிகளும் நிறைந்துவிட்டதால் விபசாரம் மிகவும் பெருகி எங்கு பார்த்தாலும் எய்ட்ஸ்!
சந்தடி சாக்கில் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் காங்கோவை நெருக்குகின்றன. எல்லா இயற்கை வளங்களையும் சுரங்கம் தோண்டும் உரிமைகளையும் மேற்கத்திய தனியார் கம்பெனிகளின் வசம் ஒப்படைத்தால்தான் உதவித்தொகை வருமாம். சண்டையை நீடித்துக்கொண்டே போவதால் காங்கோவிலிருந்து யாரும் கால்டன் வாங்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் போட்டார்கள். ஊகூம். ஐ.நா. தீர்மானத்தை யாராவது மதிப்பார்களா? 
அமெரிக்காவில் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முயற்சியால் இப்போது காங்கோ பிரச்சினையைப் பற்றிய ஞானம் ஓரளவு ஏற்பட்டிருக்கிறது. கெமட் போன்ற பெரிய கபாஸிடர் தயாரிப்பாளர்கள், டான்டலம் வாங்கும்போது அது சட்ட விரோதமாகத் தோண்டப்பட்டதல்ல என்று சர்டிபிகேட் கேட்கிறார்கள்.ஆஸ்திரேலியா போன்ற மாற்று சப்ளையர்களிடமிருந்துதான் டான்டலம் வாங்குகிறோம் என்று பொய்ச்சத்தியம் செய்கின்றன சில கம்பெனிகள். கிரீன்லாந்தின் எரிமலைகளுக்குள் நிறைய டான்டலம் இருக்கிறது என்று ஒரு கோஷ்டி தைரியமாக கிட்டே போய் எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சில தன்னார்வக் குழுக்கள் காங்கோவின் கண்ணீரை உள்ளடக்கிய கம்ப்யூட்டர், டி.வி. போன்றவற்றைப் போட்டு உடையுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு முறை நாம் டி.வி. பார்க்கும்போதும் செல்போன் பேசும்போதும் காங்கோவில் யாரோ ஒருகலூங்காவின் துயரத்திற்கு காரணமாகிறோம். ஒரு அநியாயம் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்; சம்பவ இடத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருந்தால் நமக்கு அதில் மறைமுகமான பொறுப்பில்லை என்று மனசாட்சி உறுத்தாமல் வாழ முடியுமா? 

(ஆதார கட்டுரைகள் : ராமன் ராஜா அறிவியல் கட்டுரை மற்றும் The Congo Mines That Supply 'Conflict Minerals' For The World's Gadgets ) புகைப் படங்கள் கூகுள் தேடல் 

1 comment:

  1. அதிர்ச்சியான தகவல். பாராட்டுக்கள் சொல்ல முடியாத அளவுக்கு மனதை தாக்கிவிட்ட கட்டுரை.

    ReplyDelete