ஐம்பது வயதை தொட்ட பெண்களில் அநேகம் பேருக்கு குதிங்கால் வலி என்ற உபாதையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.நானும் கடந்த ஒரு வருடமாக அந்த அவஸ்தையை அனுபவித்து அதை கடந்தும் வந்த விதத்தை கூற விரும்புகிறேன்.
அடுத்தடுத்து மகளுக்கு திருமணம், பேறுகாலம், மகனுக்கு திருமணம் என போதிய ஓய்வின்மையும்,அதிக அலைச்சலும் கூடிய காலகட்டத்தில் என் குதிங்கால்களின் மத்தியில் விண்ணென்ற வலி தோன்ற ஆரம்பித்தது. அலைச்சல் முடிந்து, போதிய ஓய்வு எடுத்த பின்பும் வலி குறையவே இல்லை. ஆஸ்பத்திரிக்கு செல்லவோ பயம். சுற்றிலும் விசாரித்ததில் கால்வலி இல்லாத மாதவிடாய் நின்ற பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாமென தோன்றியது.
ஆளாளுக்கு விளக்கங்களும், வைத்தியங்களும் சொன்னார்கள். உடல் எடை கூடுவது ஒரு காரணமாக கருதப்பட்டது. நம்மில் பலருக்கு நாற்பது வயதுக்கு மேல் உடல் எடை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று என்று உணர்வது நிஜந்தானே ? உடம்பில் ஈஸ்ட்டிரோஜன் குறைந்ததால், இயற்கையாக ஏற்படும் வயோதிக மாற்றத்தால் குதிங்காலில் வலி என்றார்கள். முற்காலத்தில் போல கொல்லம் செங்கல் பதித்த தரைக்குப் பதிலாக வீடுகளில் மொசைக், மார்பிள்,சிமெண்ட் டைல்ஸ் பதித்திருப்பதுதான் காரணம் என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டது.
கால்களை வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்தாயிற்று. அளவு கொடுத்து விசேஷமாக செய்து வாங்கிய மைக்ரோஸில் செருப்பை வீட்டிற்குள் அணிந்து கொண்டு நடக்கலானேன். வெளியே செல்லும் போது அணிவதற்கு அக்குபங்சர் செருப்பு. மருந்து கடைகளில் பிரத்யேகமாக விற்கும் ஸ்டாக்கிங்ஸ் போன்ற 'ஆங்க்லெட்ஸ் ' அணிந்து பார்தேன். விதம் விதமாய் தைலங்கள் - யூகலிப்டஸ், வேதகோடாரி, ஃபிராஞ்ச் ஆயில் - எல்லாம் தடவிப் பார்த்தும் பலனேயில்லை. எருக்கம் இலையை சூடான செங்கல்லில் வைத்து எடுத்து கொடுக்கும் ஒத்தடமும் சிபாரிசு செய்யப்பட்டது.
எலும்பு வளர்ந்திருக்கலாம், ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சிலர் குண்டைத் தூக்கிப் போட்டார்கள். இது எலும்பு தேய்மானந்தான், இதற்கு மருந்தேயில்லை என்று அடித்துச் சொன்னவர்களும் உண்டு. பயந்து பயந்து எப்போதாவது பொறுக்கமுடியாமல் வலி மாத்திரைகள் சாப்பிடுபவளிடம் ஸ்டாராய்ட் ஊசிதான் போட்டாக வேண்டும் என்று சிலர் பீதியை கிளப்பினார்கள்.
என் கால்வலி கலாட்டாவால் ரொம்ப நொந்து போன என் குடும்பத்தினர் உருப்படியான வைத்தியம் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தியபின் ஒரு எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை அணுகினேன். என்னென்ன டெஸ்டுகளோ, எவ்வளவு செலவோ என்றெல்லாம் கலக்கத்துடன் சென்ற என்னிடம் மிகவும் ஆறுதலாக பத்து வருடத்திற்கு இந்த குதிங்கால் வலியை தள்ளிப் போடுவது மிகவும் சுலபம் என்றார். அப்போதைய வலிக்கு ஐந்து நாளைக்கு மாத்திரைகள் தந்துவிட்டு வலி குறைந்ததும் எளிமையான பிஸியோதெரபி எக்ஸர்சைஸ்களை செய்து வரும்படி கூறி அனுப்பி விட்டார்.
கொஞ்ச காலத்திற்கு அதிக பளுவை தூக்கக் கூடாது, அடிக்கடி மாடிப்படி ஏறக்கூடாது, காலை அதிக நேரம் தொங்க விட்டபடி அமர்ந்து நீண்ட தூரம் ரயிலிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பொதுவான யோசனையாக உடல் எடை கூடாமலிருக்க உணவில் கிழங்குகளை குறைக்கச் சொன்னார்.பயங்கரமான சிகிச்சைகளை, செலவை எண்ணி பயந்த எனக்கு இவ்வளவு ஈஸியாக டாக்டர் சொல்லிவிட்டது பெரிய நிம்மதியாக இருந்தாலும் உண்மையிலேயே அவர் சொன்ன எளிய எக்ஸர்சைஸால் குதிங்கால் வலி போய் விடுமா என்ற அவநம்பிக்கை நிறையவே இருந்தது.
ஆனாலும் மிகுந்த கீழ்படிதலுடன் செய்ய ஆரம்பித்தேன். முதலில் சில நாட்களுக்கு பெரிதாக முன்னேற்றம் தெரியாமல் கவலையாகக்கூட இருந்தது. இருந்தாலும் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்த பயிற்சியால் சில வாரங்கள் கழித்து முதலில் ஒரு காலில் வலி முற்றிலும் போய் விட்டது. அடுத்து மற்றொரு காலிலும் வலி கிட்டதட்ட போய் விட்டது. எனக்கே இது நம்ப முடியாத ஆச்சரியமாய் இருக்கிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளை நன்றாக இயங்கச் செய்யும், வலியை விரட்டிய எளிய எக்ஸர்சைஸ் இதுதான்: கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள் பக்கமாய் மடக்கி விரிக்கவும். அடுத்து முன் பாதங்களை தாளம் போடுவது போல இருபது முறை உயர்த்தி இறக்கவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிங்கால்களை இருபது முறை தரையை விட்டு மேலே உயர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை இரு வேளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.
இவ்வளவு எளிய வைத்தியம், பலனளிக்கும் வைத்தியம் இருப்பதை குதிங்கால் வலியால் அவதிப்படும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அதை செய்து பயனடைய வேண்டும் என்பதே என் அவா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல யாம் துன்பம் நீங்கிய வழி அறிக இவ்வையகம் என்ற எண்ணந்தான் இந்த கட்டுரைக்கு தூண்டுகோள்.
(நன்றி சகோதரி பவளமணிபிரகாசம் அவர்களே )