Friday, February 25, 2011

சிலம்பை கையில் எடு கிரிக்கெட்டை தூர எறி

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பணத்தை மட்டுமே தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற உலகை கற்பனை செய்து பாருங்கள். அந்த உலகில் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கும்,கலைஞர்களின் கலை வடிவங்களுக்கும், கவிஞர்களின் கவிதைவரிகளுக்கும்,பெரும் பெரும் நாளிதழ்களில் வெளியாகும் ஓட்டுமொத்த ஆக்கங்களுக்கும், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளி,ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும்,  இன்னும் அறிஞர்களின் அறிவுக்கும்,சீர்திருத்தவாதிகளின் ஓழுக்கக் கருத்தோட்டங்களுக்கும்,எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு.

எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கி விட முடியும்.
எல்லாமே விற்பனைக்கே...! எல்லாமே சந்தை மயமாக்கப்பட்டுவிட்டன.....!  எவர் பணம் தருகின்றாரோ, எவரால் அவற்றை விலை கொடுத்து வாங்க முடிகின்றதோ அந்த நபர் முன்பு அவையெல்லாம் பெட்டி பம்பாக அடங்கிப் போகும் என்கிற அளவுக்கு அந்த உலகம் இயங்குகின்றதென வைத்துக் கொள்ளுங்கள்.

அவையெல்லாவற்றுக்கும் உரிய விலையைத் தரக்கூடிய ஆற்றலும் சக்தியும் சில பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனங்களுக்கோ உலக வளங்களுக்கெல்லாம் முழுமுதல் உரிமையாளராக ஆவதைத் தவிர வேறு எந்த நோக்கமோ, லட்சியமோ ஆசையோ இல்லை.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்த உலகம் எத்தகையதாக இருக்கும்? எந்த நிறம் கொண்டதாக இருக்கும்? எந்த மணம் கொண்டதாக இருக்கும்?

மனித பண்பாடுகளின் வரலாற்றை பல்வேறு வண்ணங்களைக் கொண்டதாக ஆக்கியதில் மிகப் பெரும் பங்கற்றுகின்ற யாதொரு கூற்றுக்கும் அந்த உலகத்தில் இடம் இருக்குமா? சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலுக்கும், கொள்கைகள் மற்றும் மாண்புகள் பற்றிய அறிவார்ந்த விவாதங்களுக்கும் பண்பாடுகளின் ஒப்பாய்வு மற்றும் புரட்சிகள் போன்றவற்றுக்கும் அந்த உலகில் இடம் இருக்குமா?

உதராணத்திற்கு இந்த கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விளையாட்டிற்கும் நமது மண்ணுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? இந்த செயற்கைத் தனமான விளையாட்டு எப்படி இந்தியாவின் மானத்தை காக்கின்ற விளையாட்டாக மறிப் போனது?

இந்தியாவையும் நம்மையும் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த வெள்ளையர்கள்  கோடைக் காலங்களில் ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு ஓய்வு எடுப்பதற்காக எஸ்டேட்களில் தங்கியிருந்த போது காட்டிற்கு சென்று இயற்கை சூழலை கெடுத்து மிருகங்களை எந்த தேவையில்லாமல் கொன்று பொழுதை கழிப்பார்கள். அல்லது அதிக உடல் உழைப்பு இல்லாத விளையாட்டான கிரிக்கெட் விளையாடுவர்கள்.

வெள்ளைக்காரர்கள் வெறும் சடங்குரீதியான சுகந்திரம் மட்டும் தான் கொடுத்து சென்றுயிருக்கிறார்கள் என்பதற்கான நிகழ்கால ஆதரமாக நிறைய விஷயங்கள் இருக்கின்றன அதில் கிரிக்கெட் முக்கியமான பாத்திரம் வகிக்கிறது.

 வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போயி அரை நூற்றாண்டு மேலாகியும் அந்த வெள்ளைக் கலர் மேலுள்ள மோகம் குறையாமல். வெயில் பிரதேச நாட்டைச் சேர்ந்த நமக்கு தோல் கருப்பாகத்தான் இருக்கும் அதுதான் அழகு, ஆரோக்கியம் என்பதை கூட உணராமல். உணவுக்கு செலவழிப்பதை விட முகத்தை சிகப்பாக்க பேர் அன் லவ்லி கீரிம்களுக்கு செலவழிக்கிற மனநிலை எப்படி உருவாக்கப்பட்டது?

இங்கிலாந்து போன்ற குளிர் பிரதேச நாடுகளில் காலில் ஷு மாட்டிக்கொண்டு
குளிர்க் காற்று உள்ளே போகமால் இருக்க காலர் பட்டனை இறுக்கமாக பூட்டி அதற்குமேல் டை எனும் துணி கயிற்றால் இறுக்கமாக கட்டிக் கொள்வது அவர்களுடைய சூழல் சார்ந்த தேவை ஆனால் வெயில் பிரதேசங்களில் வாழும் நாம் கொளுத்தும் வெய்யிலில் கணத்த ஷு மாட்டி இறுக்கமாக டை கட்டி ஆஸ்ப்பாட்டஸ் ஷீட் மேயப்பட்ட ஸ்கூலில் நாம் பிள்ளைகளை உட்கர வைக்கிறோமே இது எந்த வகையான தேவை? இதுதான் நாகரீகமா?
இது காலனித்துவ அடிமைப் புத்தி இல்லையா?

அட ரொம்ப போக வேனாங்க. மனித வரலாற்றின் எந்தவோரு காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும் பண்பாடுகள் முற்றாக ஒழிந்து போனாலும் உணவு, பானங்கள் தொடர்பான சுவைகளும் விருப்புகளும் காலத்தை வென்று நிற்கும். பத்து வருஷத்துக்கு முன்னாடி நமக்கு கோகோ கோலா, பெப்ஸி. ஹம்பர்கர். பிட்ஸா இவைகளை பரவலாக தெரியுமா? நம்ம பெப்ஸி உமா அக்காவால் எப்படி ஒவ்வோரு கிராமத்திற்கும் பெப்சியை கொண்டு போய் சேர்க்க முடிந்தது? நம்ம விக்ரம் அண்ணே சேவல் மாதிரி கத்தி கத்தி சண்ட போடுற படத்துல லஞ்ச ஒழிப்பு ஆபீஸர் ஆகுறதுக்கு முன்னாடி பிட்ஸா கடையில மிகக்கவுரமான வேல பாத்து பிட்ஸா தான் டாப்புன்னு ஏன் பாட்டு பாடனும்? இதையே சாதரன புரோட்டா கடையில வேல பாக்குற மாதிரி ஏன் காட்டவில்லை இரண்டும் மைதா மாவு தானே?

365 நாட்களும் 24 மணி நேரமும் நடக்கும் இந்த சிந்தனை ரீதியான ஊடக பயங்கரவாத தக்குதல்களில். உணவின் சுவை, குணம்,மனம், காரம் தொடர்பான விருப்புவெறுப்புகளையும் (Taste buds) நாம் சமையல் அறை வரை இந்தப் விளம்பரங்கள் தாக்குதல் தொடுக்க முடியும் என்றால் போழுது போக்குக்கான விளையாட்டைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

மனதை மயக்கும் விளம்பரங்கள் கிரிக்கெட் மீதான மோகத்தை ஊட்டி வளர்க்கிற வணிக, விளம்பர உத்திகள், வணிக நிறுவணங்களில் விளம்பரக் கருவியாக கிரிக்கெட் மாறி ஒரு மாயப் பின்னலாக இன்றைய கிரிக்கெட் ரசிகர்களைச் சுற்றி பிணைந்து சிறைப்படுத்தி இருக்கிறது.

சரி இந்த வீடியோவை பாருங்கள்

                         நன்றி சிலம்பம் குறும்படம் - www.sangamamlive.in


அருமையான குறும்படம் எனக்கு தேவையானதை வெட்டி எடுத்திருக்கிறேன் முழுமையாக பார்க்க மேலேயுள்ள லிங்கில் பாருங்கள்.

ஒரு சிலம்பட்டக்காரன் என்றமுறையில் அந்த பெரியவரின் வேதனையை நான் உணர்ந்தேன் உண்மையில் சிலம்பாட்டம் கிரிக்கெட்டை விட எந்த வகையில் தாழ்ந்தது?

சிலம்பம் என் கிராம வாழ்வோடு தொடர்புடையது எனது இராமநாதபுர கிராமங்கள் போன்ற தேன்மாவட்ட கிராமங்களில் வழிவழியாக சொல்லித் தரப்படும் நலிந்த விளையாட்டு.
இதில் உடல் உழைப்பு கூடுதலாக தேவைப்படுகிற முழு உடலும் இயங்கிற உடல்பயிற்சியோடு செய்யக்கூடிய சிறந்த விளையாட்டு

கணினியில் முழு நேரமும் டைப் செய்வாதல் வரக்கூடிய விரல் முடக்கு வியாதி மணிக்கட்டு வலி இவைகளை போக்கக்கூடியாது சிலம்பாட்டத்தில் கிரிக்கெட்டை விட மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் தான் அதிகமான வேலை.

ஆதி மனிதன் கையில் இருந்த இந்த தடி முனி சீவப்பட்டு ஈட்டியாக பரினமித்து
கருமருந்து தடவப்பட்ட அம்பாக மாறி துப்பாக்கி விசையில் தொட்டாகவாக உறுமாறி திப்பு சுல்தான் கையில் ஏவுகணையாக நின்று காலனித்துவ ஆட்சியாளர்களை பல ஆண்டுகள் கலங்கடித்தது.

மீண்டும் நம் மண்ணின் விளையாட்டு மறுகாலனித்துவ ஆட்சியாளர்களின் விளையாட்டை தொற்கடிக்க வேண்டுமேன்றால்.

 சிலம்பை கையில் எடு கிரிக்கெட்டை தூர எறி


26 comments:

 1. கிரிக்கெட்டை விடவும் சிலம்பம் சூப்பரான ஒரு விளையாட்டு, கலை. ஆனால் அதெல்லாம் கஸ்ட்பட்டு பழக நம்ம நாட்டு ஆம்புள்ளைங்களுக்கு டைம் இல்ல.. அது இல்லாம அத்த கற்றுக்கொண்டால். ஆம்புள்ளை ஆயிடுவோம், அப்புறம் அம்மாவுக்கு அடங்கி பெண்டாட்டிகளை அடிக்க முடியாது, பெண்டாட்டிகளுக்கு பயந்து அம்மாக்களைத் துரத்த முடியாது ...... ரோட்டில் போகும் போது ரவுடிப் பயலுக யாராவது பெண்ணை கிண்டல் பண்ணா கேட்காம போக முடியாது .... ஆக மொத்தத்தில் சிலம்பம் கத்துக்கிட்டா ஆம்பிளையா ஆகணும். போக பாஸ் அது நடக்கிற காரியமா..........

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ஹைதர் அலீ...

  நறுக்கென்று பதிவிட்டு நொறுக்கி இருக்கிறீர்கள் கிரிக்கெட்டு மட்டையை, சிலம்பம் தூக்காமலேயே..!

  அதுவும், உலகக்கோப்பைக்குள்ளே இளைஞர் உலகமே கவுந்தடிச்சு கிறங்கி கிடைக்கும் வேளையில்... சிலம்பம் சுற்ற கூப்பிடுகிறீர்கள்.

  உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா...?

  இங்கே 99.99 % பேருக்கு ஒரு பால் கூட ஓடிவந்து ஒழுங்கா பவுலிங் பண்ணவோ, பவுண்டரியிலே நிண்ணு கேட்ச் பண்ணவோ தெரியாது.

  ஹி..ஹி..ஹி..

  கிரிக்கெட் பார்க்கவும், அதைப்பற்றி இருநூறு பின்னூட்டமிட்டு... 'ஸ்டம்ப் வேறு bபைல்ஸ் வேருன்னு' பிளந்துகட்டி பலமணிநேரம் விவாதிக்கவும் மட்டுமே தெரியும்.

  நீங்கள் முதலில், சிலம்பம் விளையாட்டை வேடிக்கை பார்க்க வாங்கன்னுதான் கூப்பிட்டிருக்கணும்....

  என்னது...?

  நீங்க நம்ம இந்தியன் கிரிக்கெட் டீம்ல உள்ள பதினஞ்சு பேரைத்தான் சிலம்பம் ஆட கூப்பிட்டீங்களா... அப்பன்னா சரி..! மத்தவங்க வழக்கம் போல வேடிக்கை பார்ப்போம்.

  ஆங்..! வந்து இதிலே மேட்ச் ஃபிக்ஸிங் பண்ண சான்ஸ் உண்டா..? டெண்டுல்கர் கிட்டே நீங்க சிலம்பம் ஆடி தோக்கணும்... அப்பத்தானே ஒரு திரில் இருக்கும்..!?!
  --------------------------------------
  நல்ல விழிப்புணர்வு இடுகை தந்தமைக்கு மிக்க நன்றி சகோ. மிக உயர்ந்த நடையில் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள். மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. இக்பால் செல்வன் அவர்கள் சொன்னது உண்மைதான்.

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்.

  நல்லதொரு அலசல் சகோ... இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பரவலாக பேசப் படுகின்ற விளையாட்டு கிரிகெட்,இது வெள்ளையர்களால் பொழுது போக்கிற்காக தொடங்கப் பட்டதுதான்,காலப் போக்கில் இது பெரும் சூதாட்டாமாக உருமாறி பல கோடி மக்கள்கள் இந்த விளையாட்டால் கவரப் பட்டு,சீரழிந்து வருகின்றார்கள்.

  லாட்டரி சீட்டை தடை விதித்த தமிழக அரசு,லாட்டரி விற்பது தப்பு என்று அன்று காரணம் கூறியது,நாமும் அதை வரவேற்றோம் ஆனால் இன்று நடக்கும் சூதாட்டத்தை யார் தடுத்து நிறுத்துவது ?

  தமிழக வீர விளையாட்டுகளில் ஒன்றான இந்த சிலம்பாட்டம் உடற்ப்பயிற்சி மற்றுமில்லாது,ஒரு தற்காப்புக் கலை என்பதே உண்மை,நீங்கள் சுற்றிக் காண்பிக்கும் விதம் அருமை தென் மாவட்டத்தை சேர்ந்த நீங்கள் இந்த கலையைக் கற்று இருக்கும் போது அதே மாவட்டத்தை சேர்ந்த நான் கறக்காமல் இருப்பது வெட்கமாக இருக்கின்றது.

  பீசா,பெப்சி,கோலா என்று ஒன்னையும் விட்டு வைக்காத நீங்கள்,எல்லோரையும் காளி மார்க் பானங்களை அருந்துமாறு யோசனை சொல்லிருக்கலாம் என்பது எனது கருத்து.

  சைனாவில் உழைக்கும் நேரத்தை எட்டு மணியாக இருப்பதை,பனிரெண்டு மணிக்கொருவாக மாற்றும்படி அரசிடம்,மக்கள்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

  எதற்கு என்று தெரியுமா ?
  ஒரு தனியாள் எட்டு மணி நேரத்தில் சாப்பாடு இடை வெளிப் போக இருபது சட்டைதான் தைக்க முடியுதாம்,பணிரெண்டு மணிக்கொருவாக இருந்தால் முப்பது சட்டை தைத்து விடலாமாம்,இப்படி எல்லா மக்கள்களும் செய்யும் உற்பத்தியில் நாலு மணிக்கொரு கூடுதலாக கிடைக்கும் பட்ச்சத்தில் அரசுக்கும் லாபம்,நாட்டிற்கும் வளர்ச்சி,சாதனையும் புரிவார்கள்.

  உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியாச்சு எத்தனை மாதங்கள் வீணாகப் போகப் போகின்றதோ ?

  நன்றி சகோ.... பின்னூட்டம் பதிவை விட நீளமாக போயிருச்சு மனம் பொறுக்கவும்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு .முன்பு சினிமா நடிகர்களாவது சிலம்பம் கற்றிருந்தார்கள் .அந்த வகையிலாவது விளம்பரம் கிடைத்தது .இதற்கென பிரத்யேக பயிற்சியாளர்கள் எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்

  ReplyDelete
 6. @இக்பால் செல்வன் அவர்களுக்கு
  சரியான முறையில் கலைகளை கற்றுக் கொண்டால் பலஹீனமனவர்களை அடிக்க மனசு வாரது என்பது உண்மைதான்

  அதே சமயத்தில்
  ஒழுக்கமில்லாத வீரம் தவறான தவறான பாதையை நோக்கி செலுத்திவிடும்

  மற்றபடி கலைகளை கற்றுக் கொள்வதால் தன்னம்பிக்கை உண்டாகும்.

  நன்றி நண்பரே

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  கிரிக்கெட் பிரியர்களுக்கு நல்ல சவுக்கடி, விளையாட்டு என்பது ரசிக்கலாம், அதே பைத்தியாமாக இருப்பது முட்டாள் தனம். சிலம்பு விளையாட்டை முறையாக கற்றவன் நான், நல்ல மன உறுதியை கொடுக்க கூடியது. சிலம்பு மற்றும் குஸ்தி போன்ற விளையாட்டுகளும் இன்று மறைந்து வருகிறது.

  ReplyDelete
 8. சிலம்பம் அமெரிக்காவில் வாழ்கிறது!

  http://www.youtube.com/watch?v=0AC-4yLuNJA

  ReplyDelete
 9. @முஹம்மத் ஆஷிக்

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..

  உங்களுடைய ஆங்கிகாரத்துக்கு நன்றி
  சகோ

  ReplyDelete
 10. சிலம்பம் - முன் காலங்களில் (25-30 வருடங்கள் முன்) எங்கள் ஊரில், ஊர்க்கந்தூரி, பெருநாள்/கந்தூரி சமயங்களில் பல குழுக்கள் ஊர்முழுதும் வலம்வந்து சிலம்பம் ஆடுவார்கள். பார்க்க கூட்டம் குமியும். பெருநாள் வருமுன்னே, பல மாதங்கள் முன்பே, பல குழுக்களும் கடும்பயிற்சி எடுப்பார்கள். இளைஞர்கள் சிலம்பக் குழுவில் இருக்கிறார்கள் என்றால் தனி மவுசு - இன்று லேட்டஸ்ட் மாடல் பைக்/மொபைல் வைத்திருப்பதைப் போல. சிலம்பம் மட்டுமல்ல, பலப்பல விளையாட்டுகள் தெருக்கள்/ஊர் சார்பாக நடத்தப்படும். அந்தத் தினங்களில் ஊர்ச்சாப்பாடு ஆக்குவதும் உண்டு.

  ஆனால், காலப்போக்கில் எல்லாம் நின்றுவிட்டன. இஸ்லாம் விழிப்புணர்வு வரத்துவங்கியதும் நல்ல மாற்றங்கள் வந்தாலும், இதை இழப்பாகவே உணர்கிறேன்.

  ReplyDelete
 11. @அந்நியன் 2

  வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

  //நன்றி சகோ.... பின்னூட்டம் பதிவை விட நீளமாக போயிருச்சு மனம் பொறுக்கவும்.//

  சகோ இது ஒங்க இடம்

  புகுந்து விளையாடுங்க

  ReplyDelete
 12. ரோஜா அழகு என்பது ஒரு ஒப்பீடுதான்.
  ஒப்பீடு தான் எது அழகானது என்பதையும்,அழகானதல்ல என்பதையும் எடுத்துக்காட்டும்.

  ReplyDelete
 13. @பூங்குழலி

  தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. நண்பர் ஹைதர் அலி,

  உங்கள் பதிவும் இக்பால் செல்வனின் மறுமொழியும் மிகச்சரியானதொரு புள்ளியில் ஒன்றிணைகின்றன. புகையை உள்ளிளுக்க கட்டாயப்படுத்தப்படுகிறோம் என்பதை உணர்வதற்காகவேனும் தென்றலை சிலம்பக்கம்புகளால் சீற்றவேண்டியதிருக்கிறது.

  ஒரு இடுகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

  செங்கொடி

  ReplyDelete
 15. @இளம் தூயவன்

  வஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..  //கிரிக்கெட் பிரியர்களுக்கு நல்ல சவுக்கடி, விளையாட்டு என்பது ரசிக்கலாம், அதே பைத்தியாமாக இருப்பது முட்டாள் தனம். சிலம்பு விளையாட்டை முறையாக கற்றவன் நான், நல்ல மன உறுதியை கொடுக்க கூடியது. சிலம்பு மற்றும் குஸ்தி போன்ற விளையாட்டுகளும் இன்று மறைந்து வருகிறது.//

  கையைக் குடுங்க சகோ சரியான
  பின்னூட்டம்

  நன்றி சகோ

  ReplyDelete
 16. @சுந்தரவடிவேல்

  தகவலுக்கு நன்றி

  உங்களின் முதல் வருகைக்கும்

  ReplyDelete
 17. @"குறட்டை " புலி

  ஒப்பீட்டில் நீங்கள் தான் புலிதான் போங்கள்

  ReplyDelete
 18. @செங்கொடி

  உங்கள் எதிர்ப்பார்ப்புக்கு நன்றி
  நண்பரே விரைவில்

  ReplyDelete
 19. //மனித பண்பாடுகளின் வரலாற்றை பல்வேறு வண்ணங்களைக் கொண்டதாக ஆக்கியதில் மிகப் பெரும் பங்கற்றுகின்ற யாதொரு கூற்றுக்கும் அந்த உலகத்தில் இடம் இருக்குமா? சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலுக்கும், கொள்கைகள் மற்றும் மாண்புகள் பற்றிய அறிவார்ந்த விவாதங்களுக்கும் பண்பாடுகளின் ஒப்பாய்வு மற்றும் புரட்சிகள் போன்றவற்றுக்கும் அந்த உலகில் இடம் இருக்குமா?
  // சிந்திக்க வேண்டிய இடுகை சகோ.இந்த அருமையான இடுகையை பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 20. ஸாதிகா அவர்களுக்கு
  // சிந்திக்க வேண்டிய இடுகை சகோ.இந்த அருமையான இடுகையை பகிர்ந்தமைக்கு நன்றி//

  உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 21. வணக்கம் நண்பரே,
  நலமா?
  அருமையான ஒரு விஷயத்தை எடுத்து விவரித்து
  அதன் போக்குகளை படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்..

  நம்ம காலத்தில எல்லாம் பள்ளி விடுமுறை விட்டவுடன்
  கோலிகுண்டு பம்பரம் பட்டம் என்று சுற்ற ஆரம்பித்துவிடுவோம்..
  இன்று வாண்டு முதல் பல்போன தாத்தா வரை இந்த மட்டையைத்
  தூக்கிக்கொண்டு தான் திரிகிறார்கள்..

  என் அண்ணன் சிலம்ப வாத்தியார் ஆதலால் எனக்கு சிலம்பம்
  கொஞ்சம் தெரியும்.. அந்த வகையில்
  என் பிள்ளைகளும் கற்று வருகிறார்கள்...
  நேரம் கிடைக்கையில் சுற்றி இருக்கும் பிள்ளைகளுக்கும்
  சொல்லிக் கொடுக்கிறோம்...

  அருமையான நம்ம ஊர்க் கலை அது..

  ReplyDelete
 22. மேலும் என் தளத்தில் தங்களின் கருத்துரை பார்த்தேன்,
  நாட்டுப்புறக் கலைகள் பற்றி ஒரு ஆய்வு செய்யப்போவதாக சொல்லியிருந்தீர்கள்.
  தாராளமாக, தங்களிடம் இருந்து அப்படி ஒரு ஆய்வுக் கட்டுரை வந்தால்
  மகிழ்ச்சி கொள்ளும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
  அதற்கான முயற்சியில் என்னால் ஏதேனும் உதவி தேவையென்றால் செய்வதற்கு
  சித்தமாக இருக்கிறேன்.

  ReplyDelete
 23. எங்கள் ஊரில் இருந்த கிரிகெட் அணிகளில் ஒரு அணிக்கு நான் நீண்ட காலமாக கேப்டனாக இருந்திருக்கின்றேன் ... இன்று எங்கள் வீட்டு பிள்ளைகள் விளையாடினாலோ, அல்லது டீ வியில் பார்த்தாலோ ஆத்திரமும் கோபமும் பொங்கி வருகின்றது ... உடலுக்கு வலிமை சேர்க்கும் எந்த ஒரு விளையாட்டும் இன்று நம் குழந்தைகளிடம் இல்லை .. போலியாக உருவாக்கப்பட்டுள்ள கவர்ச்சி பொருள்கள்இன்று அடிமைபடுத்திகொண்டு இருப்பது எதிர்காலத்திற்கு மிக ஆபத்தை விளைவிக்க கூடியது என்ற உண்மையை உணர்த்தும் உங்கள் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள்

  ReplyDelete