Sunday, November 4, 2012

மொழியறிந்தவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்...!


மலேசியா,சிங்கப்பூர், துபாய், பஹ்ரைன், இப்படி கோபால் பல்பொடியைத் தோற்கடிக்கும் விதத்தில், சர்வதேச பதிவர்கள் பயனுள்ளவை, மொக்கை இப்படி எழுதித் தள்ளுகிறார்கள். பல் விளக்காமல் கூட இருப்பார்கள்! ஆனால் பேஸ்புக்கில் புல் அரிக்க வைக்கும் தத்துவங்களை ஸ்டேட்டஸ் போடாமல் இருக்க மாட்டார்கள்.

ஆனால் பிழைக்க போன இடத்தில் அந்தந்த நாட்டின் மொழி தெரியுமா? வாய்ப்பை பயன்படுத்தி கற்றுக் கொண்டீர்களா? என்று கேட்டால் (மாபி மாலும்) எனக்கு தெரியாது என்பார்கள். அவர்களின் மேல் அதிகாரிகள் அந்நாட்டு சொந்த மொழியில் இவர்களிடம் கேள்வி கேட்டால் மலங்க மலங்க முழிப்பார்கள். அட ஆங்கிலமாவது முழுமையாக தெரியுமா என்றால் முக்கால் வாசிப்பேர் பேசுவது ஓட்ட இங்கிலிஷ். இங்கு வந்த பிறகு தான் ஊரிலிருந்து வரும் மைத்துனனிடம் ஈஸி இங்கிலீஷ் கோர்ஸ் புத்தகம் வாங்கி வரச் சொல்லி ஆர்டர் கொடுக்கிறார்கள். வாங்கி வரும் புத்தகத்தையாவது படிப்பார்களா? என்றால் அதுவும் கண்காணாத இடத்தில் எறிந்து விட்டு பேஸ்புக் அரட்டையில் இறங்கி விடுகிறார்கள். அப்புறமென்ன?? “கழுதை கெட்டால் பேஸ்புக்” கதை தான்.

எந்த நாட்டில் இருக்கிறமோ அந்த நாட்டின் மொழியை கற்றுக் கொள்ள முயற்சிப்பவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள். சவூதியில் ஆங்கிலத்தில் உள்ளதை அரபியில் மொழிமாற்றிக் கொடுப்பதற்கு நல்ல சம்பளமும் அத்துறையில் உள்ளவர்களுக்கு தனியார் கம்பெனிகளில் கிராக்கியும் இருக்கின்றன. அரபு நாட்டில் இருக்கும் நம்மவர்கள் (பி,  மாபி) பி என்றால் இருக்கு மாபி என்றால் இல்லை இதைவைத்தே காலத்தை ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள்.

"ஒரே அரபியா பேசுறாய்ங்கே! அதிலிருந்து தப்பிக்க தான் இணையத்தில் தமிழ் தளங்களில் உலாவுகிறேன்" என்கிறார்கள் சிலர். சரி, இணையத்தில் சொந்த மொழி, தாய்மொழி தமிழ் அதையாவது ஒழுங்க எழுதுனா மனசு ஆறிப் போயிரும். நமக்கு தமிழ் மொழியே ஒழுங்காக தெரிவதில்லை. கொலையா கொல்லுறது! தயவுசெய்து சொந்த மொழியையாவது நாம் கற்றுக் கொள்ள முயற்சிப்போம். சிறிது நேரத்தை ஒதுக்கி....!

சரி ஊரில் படிக்கிறவங்களுக்கு தெரிந்ததெல்லாம் மெடிக்கலும், இன்ஜினிரியங்கும்தான். அடுத்தது கம்யூட்டர். உலகத்துலே படிக்க வேறு ஒன்றுமே இல்லையென்ற நினைப்பு. உதாரணத்துக்கு - வாய்ப்புகள் விரிந்து, பரந்து கிடக்கிற ‘மொழிக்கல்வி’ பற்றி நமக்கு குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. படிப்பவர்களும் அதைப் புரிந்து கொள்வதில்லை.கற்பிப்பவர்களும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மேலை நாடுகளில் மொழி படிக்கும் மாணவர் வெறும் பிரெஞ்சை மட்டும் கற்பதில்லை. குறைந்தது மூன்று மொழிகளை கற்கிறார். மொழியாசிரியர்கள் குறைந்தது நான்கு மொழிகளையாவது நன்றாக ஆழப்படித்திருப்பார்கள். இதனால் மொழிபெயர்ப்பு வேலை அங்கு தனித்துறையாகவே வருகிறது. நமக்கு தமிழ் மொழியே ஒழுங்காக வருவதில்லை. ஆங்கிலம் என்று எதையோ படிக்கிறார்கள். நாலு வார்த்தை முறையாக எழுதவோ, படிக்கவோ கூட இங்கு பலருக்குத் தெரியாது.

உலகத்தில் ஏராளமான மொழிகள் இருக்கின்றன. அதை கோடிக்கணக்கான மக்கள் பேசுகின்றனர். அவர்களுக்கென்று நாடு இருக்கிறது. அந்த மொழிதான் அவர்களின் வாழ்க்கை. இப்படி இருக்கும் போது அந்த மொழி படித்தவருக்கும் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

இன்று அமெரிக்காவில் பெரும் பிரச்சனை, அந்த நாட்டு மாணவர்களுக்கு மொழியறிவு குறைவு என்பதுதான். ஆனால், இப்போது அதைப் புரிந்து கொண்டார்கள். நாம்தான் இன்னும் அப்படியே இருக்கிறோம். இந்தியாவில் மட்டும் பதினெட்டு மொழிகள் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நம்மவர்கள் அந்த மாநில மொழியையே படிப்பதில்லை. கோடிக்கணக்கான மாணவர்களுக்கு மொழி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அறிவியல் ஆசிரியர் அறிவியல் மாணவர்களை மட்டுமே சந்திப்பார்.குறைவான வாய்ப்புகளே! ஆனால் மொழி ஆசிரியர் எல்லாத் துறைகளுக்கும் போயாக வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் பட்டபடிப்பு வரை இதுதான் நிலை.

இன்று தூதரகங்கள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. பெரிய வல்லரசு முதல் சின்ன நாடுகள் வரை எல்லா இடங்களிலும் தூதரங்களை திறக்கின்றன. இங்கு பணிபுரிய இருமொழி அறிவு இருக்கிறவர்கள் நிறைய பேர் தேவைப்படுகின்றனர். ஜப்பான்  தூதரகம் சென்னையில் இருந்தால் - ஜப்பான், தமிழ்மொழி தெரிந்தால் பல ஆயிரங்களில் சம்பளம். ‘தில்லி’ யில் இருந்தால் ஜப்பான், இந்தி தெரிய வேண்டும். இப்படி உலகம் முழுக்க தேவை இருக்கிறது. இந்த மொழிகளைப் படிக்க பெரிய பொருட் செலவு கூட கிடையாது. மிகக் குறைந்த கட்டணத்தில் அந்த தூதரகங்களே கற்றுத் தருகின்றன. இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் முக்கியமான மொழிகளில் பி.ஏ., எம்.ஏ பட்ட வகுப்புகள் நடைபெறுகின்றன. இதற்காக அந்தந்த அரசுகள் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்குகின்றன.

திராவிட மொழிகளுக்கு என்று தனியாக மைசூரில் பலகலைக்கழகமே இருக்கிறது. தஞ்சாவூரில் தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக்கழகம் இருக்கிறது. தமிழ்ப் பலகலைக்கழகம் என்றால் - வெறும் ‘தமிழ்’ இலக்கியங்கள் மட்டும் படிப்பதில்லை. நாட்டுப்புறவியல், மொழியியல், சுவடியியல், பதிப்பியல்... இப்படி ஒரு மொழியின் பண்பாட்டுக் கூறுகள் தொடர்பான அனைத்துக்கும் பி.ஏ. , எம்.ஏ. முதல் பி.ஹெச்டி. வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.

மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவ கலைக்களஞ்சியம் தயாரித்தல், இருமொழி அறிவு படைத்தவர்கள் மட்டுமே பணி செய்ய முடியும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் அரசு அலுவலங்கள் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் கணினி அறிவு இருக்கிறது. ஆனால் தமிழறிவு இல்லை. இதனால் மக்களை நேரடியாக நிர்வாக அமைப்பு தொடர்புகொள்ள முடியாது. இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஏராளமான வாய்ப்புகள். ஆனால், தகுதியானவர்கள் கிடைப்பதில் ஏகப்பட்ட சிக்கல். சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு பல கோடி ஒதுக்குகிறது. இதே போல ஒவ்வொரு மாநில அரசுகளும் நிதி ஒதுக்குகின்றன. இப்படி ஓர் உலகம் இயங்குவது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவே தெரியாது. தமிழ்ச் சூழல் மட்டும் இப்படி என்றால், ஒரு ஐரோப்பிய மொழியைக் கற்றுக்  கொண்டால்... எண்ணிப் பாருங்கள்!

இன்னொரு முக்கியமான விஷயம், ‘மொழிகல்வி’ பிரதானமாகவும் வாழ்க்கைக்குத் துணையாகவும் உதவும். உதாரணத்துக்கு, இன்ஜினீயரிங் படித்த ஒருவருக்கு ஜெர்மன் தெரிந்தால் ஜெர்மனியில் வேலை வாங்குவது எளிது. இங்கு மொழி துணையாக இருக்கிறது. இவையெல்லாம் இல்லாமல் ‘மொழிக்கல்வி' யில் வேறு பல பயன்கள் இருக்கின்றன. மருத்துவம் படிக்கும் ஒருவர் நல்ல திறமையான மருத்துவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு மொழி பேசும் மக்களிடையேதான் பணிபுரிந்தாக வேண்டும். வெறும் தொழிற்கல்வியில் பயன் இல்லை.

மொழிகல்விக்கு இன்னும்  எதிர்காலம் பிரகாசமாகிக் கொண்டே போகின்றது. தகவல் தொடர்பு ஊடகங்கள் வெகுஜன மக்களை அடையத் தொடங்கிவிட்ட யுகம் இது. ஒரே செல்போன் நிறுவனம், தமிழ்நாட்டில் ‘வணக்கம்’ என்றும், வட இந்தியாவில் ‘ நமஸ்கரம்’ என்றும் சொல்ல வேலைக்கு ஆள் எடுக்கிறது. பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி போன்ற மக்கள் தொடர்பு ஊடகங்கள் மொழியை மையப்படுத்தியே இயங்குகின்றன. நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் என்று வேலை வாய்ப்புகள் பெருகிக் கொண்டே போகின்றன. தமிழ்மொழியைத் தெளிவாகக் கற்றவர், வேறு எந்த மொழியையும் எளிமையாகக் கற்கலாம். செலவு அதிகம் கிடையாது. பயனும் மிக அதிகம்.

மாணவர்கள் கல்லூரியில் ஒரு துறையில் படிக்கும் போதே, மாலையில் ஒரு மொழி வகுப்புக்கும் போகலாம். இணையத்தில் நேரம் செலவழிக்கும் போது எத்தனையோ மொழி கற்கும் இணையதளங்கள், காணொளி வகுப்புகள் இருக்கின்றன. அவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். சூழ்நிலை அறிந்து விழித்துக் கொள்கிறவர்களே வெற்றி பெறுகிறார்கள். ஒளிமயமான எதிர்காலத்துக்கு என் வாழ்த்துகள்!”

பின்குறிப்பு:
வ.செ. குழந்தைசாமி - அண்ணா பல்கலைக்கழகம் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தர். தற்போது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் தலைவாரக இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். நாடறிந்த கல்வியாளர். மொழிகள் கற்க வேண்டியதின் அவசியம் பற்றிய அவரின் கட்டுரை இது.

பல்வேறு மொழிகளை கற்பிக்கும் நிறுவனங்கள் :
The School of Languages, Jawarharlal Nehru University, New Delhi; Delhi Unversity, New Delhi;
The Central Institute of Indin Language, Mosore;
Loyola College, Chennai;
Central Institute of English and Foreign Languages (CIEFL), Hyderabad

10 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமையான பகிர்வு.. இதைப் பற்றி நான் பல முறை சிந்தித்தது உண்டு.... ஆனால் எவ்வாறு முயற்சிப்பது என்று தான் புரியவில்லை.. அரபிக் பல ஸ்டைலில் பேசுகிறார்கள்.. புக்கில் ஒன்று இருக்கு அது நடை முறை பேச்சுக்கு ஒத்து வரவில்லை.. படித்ததை பேசி பார்க்கலாம் அரபி தெரிந்தவர்களிடம் பேசினால் சிரிக்கிறார்கள் அது அப்படி சொல்லக் கூடாது இப்படி என்று.. என்ன பண்றது சொல்லுங்க... :)

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் சகோ....

    ReplyDelete
  3. சிறந்த பதிவு .
    ஒருவருக்கு மிகவும் பிடித்தது அவர் பெயர் அடுத்தது அவர் மொழி . நம் மக்கள் ஆங்கிலம் அறிந்தவன் அறிவுடையோன் என நினைத்து ஆங்கிலத்தில் பேச முனைகின்றார்கள் .ஐரோப்பாவில் ஆங்கிலம் விலை போகாது.(இதே நிலை இன்னும் பல நாடுகளில் ) .பிரெஞ்சு நாட்டவர் ஆங்கிலம் தெரிந்தாலும் ஆங்கிலம் பேச மாட்டார்கள்.தன் நாட்டுக்கு வருபவர் தன நாட்டு மொழி அறிந்திருக்க வேண்டும் என நினைப்பார்கள். மொழியை பேசக் கற்றுக் கொள்வது அந்த நாட்டில் இருக்கும்போது முயன்றால் எளிமையாக வந்துவிடும்.ஆனால் நாம் முயலுவதில்லை. தேடுவது கிடைக்கும் .தேடாமலேயே அத்தனையும் வேண்டும் என்ற மனப் பக்குவம் மாற வேண்டும். அரபுக் கல்லூரியில் பயிலும் நம் இஸ்லாமிய சகோதரார்கள் மார்க்கத்தைப் பற்றி அறிந்துக் கொள்கின்றார்கள் . ஆனால் ஒருவர் கூட அரபி மொழி அறிந்து பேச முயலுவதில்லை. ஆங்கில கான்வென்டில் பயிலும் சிறு பையனும் ஆங்கிலத்தில் பேசும் அளவுக்கு திறமை பெற்று விடுகின்றான். அறிவு ஒரு சக்தி .அதனை அடைய முயற்சி தேவை . பல மொழிகளின் வல்லமை அதற்கு உதவும்

    ReplyDelete
  4. சிந்திக்கத் தூண்டும் சிறப்பான பதிவு சகோ

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு நன்பரே, மற்று மொழிகளை கற்க முயற்சி செய்கிறோம். பகிர்வு நன்றி.

    ReplyDelete
  6. சலாம் சகோ.ஹைதர் பாய்

    சாதாரண மனிதர்களுக்குத்தான் மொழி தேவை சாதனை மனிதரை கொஞ்சம் பாருங்கள் சகோ.ஆப்ரிக்காவில் மொழி இல்லாமல் எப்பிடி கலக்குவார்னு பாருங்க ...அவரு யாரு நம்ம டீ ஆறு

    ....ஊ...ஆ...புபுப்பு ஆ.........

    ஊ...ஆ...புபுப்பு ஆ.........

    இதை பார்க்கும் பொது என் சோல்டர் என்கிட்டே இல்ல..

    ஊ...ஆ...புபுப்பு ஆ.........

    ஊ...ஆ...புபுப்பு ஆ.........

    நன்றி !!!

    ReplyDelete
  7. சலாம் சகோஸ்

    வீடியோவிற்குரிய லிங்கை கொடுக்காமல் மறந்து பாவியாகி விட்டேனோ..???

    http://www.youtube.com/watch?v=YOE0tBMQ52M

    ஏ பப்பா பிபிப்பி பிப்பா..

    ஏ பப்பா பிபிப்பி பிப்பா..

    வேவா வெவ்வெவ்வ வேவா ....

    ஊ...ஆ...புபுப்பு ஆ.........

    ஊ...ஆ...புபுப்பு ஆ.........

    டீ ஆறு பாடி முடிக்கைல சேர்ல இருந்த நான் தரைல கிடக்கிறேன் ....

    நன்றி !!!


    ReplyDelete
  8. நல்லதொரு விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துகள்....

    ReplyDelete
  9. சலாம் சகோ..!! ,
    தமிழ் நாட்டில மட்டும்தான் நம்ம தமிழ் எடுபடும் , கொஞ்சம் அரக்கோணம் தாண்டினா தமிழ் அவ்வளவுதான். குறைந்த பட்சம் ஹிந்தி (உருது ) யாவது எக்ஸ்டிரா தெரிந்திருக வேணும் ,கல்ஃபில இருக்கும் பலப்பேருக்கு திறமைகள் என்னதான் இருந்தும் மொழிப்பிரச்சனையாலேயே கிடைக்க வேண்டிய பல விஷயங்கள கிடைக்காமலேயே போய் விடுகிற்து.

    வெளி நாடு வர விரும்புபவர்கள் . அதுக்குறிய ஏற்பாடுகள் (பாஸ்போர்ட் எடுக்கும் போதே செய்யும் போதே அந்த நாட்டுக்குறிய மொழியை கொஞ்சமாவது கற்றுக்கொண்டு வந்தால் நிறைய சிக்கலகள் இருக்காது .

    அவசியமான ஸ்டிராங்கான பதிவு :-)

    ReplyDelete