Thursday, November 22, 2012

ஆசிரியர் அமைவதெல்லாம்...!


நல்ல ஆசிரியர் என்பவர் யார் ? நன்றாகக் கற்பிப்பது எப்படி ? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெளிவாக இல்லை என்கிறார் அமண்டா ரிப்ளி (http://www.theatlantic.com/doc/201001/good-teaching). அதை ‘ஆமாண்டா’ என்று ஆமோதிக்கிறார் ஜனாதிபதி ஒபாமா. அவரும் இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்தவர் என்பதால், உலகில் நல்ல வாத்தியார்கள் கிடைப்பது அரிது என்ற விஷயம் ஒபாமாவுக்குத் தெரிந்திருக்கிறது. அமெரிக்கப் பள்ளி ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக 430 கோடி டாலர் பட்ஜெட் ஒதுக்கியிருக்கிறார். சந்தையில் மற்ற எல்லாச் சரக்குகளும் போலவே கல்வியும் தனியார் மயமாகிவிட்ட சூழ்நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் வரலாறு காணாத முயற்சி இது !
வாஷிங்டனில் ஐந்தாம் வகுப்புப் பையன்கள் இரண்டு பேர். இருவரும் ஒரே மாதிரி ஏழைக் குடும்பம். ஒரே மாதிரி கணக்கில் ஃபெயில் மார்க். அதில் ஒரு பையன், மிஸ்டர் டெய்லர் என்ற திறமையான ஆசிரியரின் வகுப்பில் சேர்ந்தான். மற்றவன், ஒரு சாதா பள்ளிக்கூடத்தில் சாதா ஆசிரியரின் வகுப்பில் சேர்ந்தான். வருடக் கடைசியில் இரண்டாமவன் கணக்குப் பாடத்தில் அதே முட்டை வாங்கிக் கொண்டிருக்க, டெய்லரிடம் படித்தவனிடம் அபாரமான முன்னேற்றம். அதற்கு வாத்தியார்தான் முழுக் காரணம். டெய்லரின் வகுப்பில் படித்த அத்தனை பேருமே சராசரியிலிருந்து முன்னேறி, பிரகாசிக்கும் மாணவர்கள் என்ற வரிசையில் சேர்ந்துவிட்டார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் கல்விக்கூட ஆராய்ச்சிகள் பலப் பல செய்யப்பட்டு அத்தனையின் முடிவும் ஒன்றுதான் : நல்ல பள்ளிக்கூடம், நல்ல சூழ்நிலை, முன்னேறிய சிலபஸ், பெற்றோர் வருமானம், மதிய உணவில் முட்டை எல்லாவற்றையும் விட மாணவர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது ஆசிரியர்கள்தான்.
பெற்றோர்கள் எல்லோருமே தத்தம் குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டுமென்றுதான் ராத்திரி நாலு மணிக்குப் போய் விண்ணப்ப கியூவில் நிற்கிறார்கள். பி.எஃப்பில் லோன் போட்டு நன்கொடை கட்டுகிறார்கள். இருந்தும் பள்ளிக் கூடம், பாடத் திட்டம் எல்லாவற்றையும் விட சாக்கட்டித் தூசி படிந்த கையுடன் குழந்தைகளின் எதிரே நிற்பவர்தான் முக்கியம்.
வாஷிங்டன் பரிசோதனையில் கவனிக்கப்பட்ட இரண்டு பையன்களும் இன்னும் நாலைந்து வருடத்துக்குத் தத்தம் ஆசிரியர்களிடம் படித்தால், அவர்களின் வாழ்க்கை நிரந்தரமாக வெவ்வேறு திசைகளில் பிரிந்துவிடும். அவர்கள் ஹைஸ்கூலுக்கு வரும்போது நல்ல ஆசிரியர் - அல்லாத ஆசிரியர்களால் தொடர்ந்து ஏற்பட்ட மொத்த விளைவுகளும், பிறகு என்ன செய்தாலும் மாற்ற முடியாத அளவுக்குப் பெரிதாக இருக்கும்.
இதையே வேறு விதமாகச் சொல்லலாம் : ஏறக் குறைய குப்பத்திலிருந்து வந்த மாணவர்கள் தொடர்ந்து டெய்லர் போன்ற ஆசிரியரிடம் படித்தால், அவர்களுக்கும் நகர்ப்புறத்தின் வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்கும் அறிவில் திறனில் வித்தியாசமே இருக்காது !
டஃபா (Teach For America) என்ற தன்னார்வ அமைப்பு, பத்து வருடங்களாக லட்சக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர்கள் விடை கண்டு பிடிக்க விரும்பும் கேள்வி - ‘சில ஆசிரியர்களிடம் படித்த மாணவர்கள் மட்டும் வேகமாக முன்னேறிவிடுகிறார்களே, அதன் ரகசியம் என்ன ?’
இந்த அமைப்பு பட்டதாரிகளை இரண்டு வருட காண்ட்ராக்டில் ஆசிரியர் பணியில் அமர்த்தி, பொருளாதார வசதியில் குறைந்த பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறது. பெரும்பாலும் கறுப்பு-அமெரிக்க, லத்தீன்-அமெரிக்கக் குழந்தைகள். கிராமத்தில் நடவு, நாற்று என்றால் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு ஜூட் விட்டுவிடும் ! 5 லட்சம் மாணவர்கள், 7300 ஆசிரியர்களின் ஜாதகத்தையே கம்ப்யூட்டரில் சேகரித்திருக்கிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு, பயிற்சி ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொண்டு மறுபடி மறுபடி பரிசோதனை செய்கிறார்கள்.
டஃபா ஆரம்பித்த போது, பேச்சுத் திறமை, முன் அனுபவம், கல்லூரிச் சாதனைகள் போன்ற 12 கோணங்களில் அலசி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு டேட்டாவை வைத்துக்கொண்டு பின்னோக்கிப் பார்த்தார்கள். மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்று தெரிய வந்தவர்களுக்கெல்லாம், ஆரம்பத்தில் பொதுவான அம்சங்கள் என்ன இருந்தன ?
முதலாவதாக, விடா முயற்சி. பையன்கள் என் மீது பேப்பர் ராக்கெட் விட்டாலும் சரி, பெஞ்சுக்கு அடியில் குனிந்துகொண்டு பூனை மாதிரி கத்தினாலும் சரி, எது எப்படிப் போனாலும் என் மாணவர்களை முன்னேற்றியே தீருவேன் என்று பல்லை நற நறவென்று கடித்துக்கொண்டு களத்தில் இறங்கும் ஆசிரியர்கள் நல்ல ரிசல்ட் தருகிறார்கள்.
ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் இல்லை, புத்தகம் இல்லை, ஹெட் மாஸ்டர் வண்டை வண்டையாகத் திட்டுகிறார், போர்டில் சாக்கட்டி கீச்சுகிறது என்பது போன்ற எந்தப் பிரச்னையும் அவர்கள் பணியை பாதிப்பதில்லை. எடுத்த வேலையை முடித்து விட்டுத்தான் மறு வேலை.
தங்கள் மாணவர்களுக்கு அவர்கள் பெரிய பெரிய இலக்குகளை நிர்ணயிக்கிறார்கள். வருடம் முழுவதும் என்னென்ன செய்ய வேண்டும், அடுத்த வாரத்துக்கு என்ன பாடம் என்று வித விதமாக அட்டவணை போட்டுக் கொள்கிறார்கள். தினமும் ஏதோ தாங்கள்தான் பரீட்சைக்குப் போவது போல முற்றிலும் தயாரிப்புடன் வகுப்பறையில் நுழைகிறார்கள்.
தாங்கள் செய்வதையும் அதற்குப் பலன் இருந்ததா என்பதையும் சீர்தூக்கிப் பார்த்து அவ்வப்போது தக்கபடி கியரை மாற்றிக் கொள்கிறார்கள்.
‘பொங்கல் செலவெல்லாம் எங்கோ போய்விட்டது’ என்று எப்போதும் மூக்கால் அழும் ஆசிரியர்களைவிட, உற்சாகமே வடிவாக, எப்போதும் பாஸிட்டிவ் ஆக வாழ்க்கையை அணுகும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள். தன் வாழ்க்கையை நினைத்துத் திருப்தியுடன் மலர்ச்சியாக இருப்பவர்களின் உற்சாகம், குழந்தைகளையும் தொத்திக் கொள்கிறது.
தங்கள் கல்லூரிப் படிப்பின்போது கை நிறைய மார்க் வாங்கின ஆசிரியர்களின் பின்னாள் மாணவர்களும் அதே போல் நிறைய மார்க் வாங்குகிறார்கள்.
லீடர்ஷிப் : ஒரு என்.சி.சி அணிக்காவது தலைமை ஏற்று வழி நடத்தின அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், மாணவர்களைச் சரியாகத் திருப்பி ஓட்டிக்கொண்டு போக வல்லவர்களாக இருக்கிறார்கள்.
மற்றபடி பி.எட், எம்.எட் படிப்பெல்லாம் பைசா பிரயோசனமில்லை என்று தெரிவிக்கின்றன டஃபா ஆராய்ச்சிகள். (அடிக்க வராதீர்கள், சொன்னது நான் இல்லை !)
போன வருடம் 35,000 விண்ணப்பங்களைப் பரிசீலித்து 4,100 புதிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தது டஃபா. 30 பரிமாணங்களில் அவர்களின் தகுதியை அலசி பாயிண்ட் கொடுக்கிறார்கள். வருடா வருடம் இந்த மதிப்பிடும் முறையைப் பிழை திருத்திக் கூர் தீட்டிக் கொள்கிறார்கள். இண்டர்வியூவின்போது கற்பனை வகுப்புக்குப் பாடம் நடத்தச் சொல்லியும் கவனிப்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களைக் கண்காணித்து அவ்வப்போது அவர்களுக்கு உக்கிரமான ட்ரெயினிங். அவர்கள் செய்யும் தப்புக்களையெல்லாம் திருத்தி வெற்றி விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொருவருக்கும் அளவெடுத்துத் தைத்தது போல் தனிப்பட்ட பயிற்சி கொடுக்கிறார்கள்.
டஃபாவில் வகுப்புக்குப் போவதற்கு முன்பு நாடக ஒத்திகை போல நன்றாகத் தயார் செய்துகொண்டுதான் போக வேண்டும். எங்கள் தியாகராசன் சார் மாதிரி ட்ரிக்னாமெட்ரி கணக்கைப் பாதியில் சொதப்பி வளைத்து வளைத்து போர்டு பூரா எழுதியும் விடை வராமல் திருதிருவென்று முழித்தால் வேலை போய்விடும் !
அமெரிக்க அரசாங்கம் இத்தகைய ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்துவிட்டுத்தான் ஆசிரியர்களின் திறமையை வளர்ப்பதற்காக Race to the top என்ற ப்ராஜெக்டை ஆரம்பித்து, முன்னே சொன்ன மில்லியன்களை ஒதுக்கியிருக்கிறது. அமெரிக்கா நல்ல காரியங்களுக்காகப் பர்ஸைத் திறப்பது அபூர்வம் என்பதால் இந்தப் பணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒபாமாவுக்கும் டஃபாவில் இருப்பவர்கள்தான் ஆலோசகர்கள். இந்த வருடத்திலிருந்து வாஷிங்டன் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களுக்கும் பரீட்சை. நூற்றில் ஐம்பது மார்க், அவர்களுடைய மாணவர்கள் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. மற்ற ஐம்பது மார்க், வருடம் முழுவதும் அவ்வப்போது வகுப்புக்கு வந்து அமர்ந்து கவனிக்கும் இன்ஸ்பெக்டர்கள் போடும் மார்க்.
இந்த முயற்சிக்கு எதிர்ப்புகளும் அதிகம். ‘மாணவர்கள் வாங்கும் மார்க்குக்கு ஏற்பத்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்’ என்று சொன்னபோது ஆசிரியர் யூனியன்கள் பல்லாலும் நகத்தாலும் எதிர்த்தன. ‘கல்வி பிசினஸ், மாநில அரசுகளின் பிசினஸ். அதில் மத்திய அரசு தலையிடுவதாவது’ என்று ஒரு பக்கம் அரசியல் கலகக் கொடி. இது வரை எதற்கும் அசரவில்லை ஒபாமா. போகப் போக என்ன ஆகிறது என்று பார்க்க வேண்டும்.
கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியர்களால் பாழாய்ப் போன வாழ்க்கைகள் எத்தனையோ கோடி. அதே சமயத்தில் எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்னை செதுக்கியவர் இவர்தான் என பெருமையோடு அறிமுகப்படுத்தி மனமகிழ்ச்சியடைந்து நினைவு கூறும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
Reference : http://www.theatlantic.com/doc/201001/good-teaching 
ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்

6 comments:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவை அறியத் தந்தமைக்கு வாழ்த்துகள்

    சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. இக்கல்வியை ஒரு சேவை எனக்கருதி மாணாக்கர்களுக்கு திறம்பட புகட்டுவது நமது ஆசிரியப் பெருமக்களே !

    மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதிலும் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியர்களே

    ReplyDelete
  3. நல்ல கருத்துக்கள்! ஆசிரியர் மாணவனை ஊக்குவித்து உயர்த்த வேண்டும்தான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. இன்றிய பள்ளிகள்,பள்ளிகளுக்கும்,மாணவர்களுக்கும் இருக்கிற ஊறவுகள்,ஆசிரியர்களுக்குள் இருக்கிற உறவுகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டியுள்ளது,மற்ற அரசுத்துறையைப்போல இல்லை இது.ஒரு மாணவனை உருவாக்குகிற பணி.அதனால்தானே என்னவோ ஆசிரியர்ப்பணி அறப்பணி என்றார்கள்.

    ReplyDelete
  5. கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்னை செதுக்கியவர் இவர்தான் என பெருமையோடு அறிமுகப்படுத்தி மனமகிழ்ச்சியடைந்து நினைவு கூறும் ஆசிரியர் பலர். அவர்கள் பாடசாலையில் மற்றும் பல இடங்களில் பரவி இருக்கிறார்கள்.வாழ்வின் வழி காட்டிய ஆசிரிர்கள் அடையாளம் காணாமல் போய் விடுபவர்களும் உண்டு. உங்களில் உயர்ந்தவர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு கற்பித்தவரே என்பது நபிமொழி

    ReplyDelete