Friday, November 23, 2012

உடல் உறுப்புகள் விற்பனைக்கு.


ஒரு பக்கம் செயற்கை உயிர், அது இது என்று உதார் விட்டுக்கொண்டு அந்தப் பதினைந்து நிமிஷப் புகழ் மழையில் செயற்கையாக நனைந்துவிட்டு, ஈரம் உலர்ந்தவுடன் மறக்கப்படுகிற விஞ்ஞான ஆராய்ச்சிகளும் இருக்கின்றன. ஆனால் மருத்துவ இயலில் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் மற்றொரு பக்கம் ஓசைப்படாமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக டிஷ்யூ எஞ்சினியரிங் என்ற இயலைச் சொல்லலாம்.
இந்த திசுப் பொறியியல் என்பது நம் உடலின் செல்கள் அழிந்து போனால் மறுபடி புதுப்பித்து வளர்க்கும் கலை. சேதாரமான உடல் உறுப்புகளை மீண்டும் வளரச் செய்வது உட்பட பலவித சாத்தியங்கள் இதில் உள்ளன. டாரிஸ் டெய்லர் என்பவர் ஒரு எலியின் முழு இதயத்தையே மாவடு போல் ஜாடியில் வைத்து வளர்த்திருக்கிறார்.
எலி இதயத்தோடு டாரிஸ் டெய்லர்
உயிரியல் தவிர எஞ்சினியரிங், மருத்துவம், பொருட்களைப் பற்றிப் படிக்கும் மெட்டீரியல் விஞ்ஞானம், பயோ இன்ஃபர்மாடிக்ஸ் என்ற கணினி வேலை என்று பல துறை வல்லுநர்கள் ஒத்துழைத்து இதை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டுக் கம்பெனிகள் ஒவ்வொரு தப்படிக்கும் பேடண்ட் வாங்கிப் பூட்டி வைத்து விடாவிட்டால், இந்த இயல் சீக்கிரமே நன்கு வளர்ந்து பெரிய குழந்தையாகிவிடும்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் உடனடிப் பலன் என்ன? உடலில் ஒரு குருத்தெலும்போ, ரத்தக் குழாயோ, மூத்திரப் பையோ சேதமடைந்துவிட்டால் அந்த இடத்தில் புதிய செல்கள் வளர்த்து ரிப்பேர் செய்துவிடலாம். ஆனால் இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம், கனம், கடினத் தன்மை கொண்டவை. எனவே திசுக்களை வளர்ப்பது மட்டுமில்லாமல் அவற்றை உயிரியல் லேத் பட்டறையில் கொடுத்து சரியான ஷேப்பில் கடைந்து எடுத்தால்தான் உடலுடன் பொருந்திப் போகும். இங்கேதான் எஞ்சினியரிங் வருகிறது. தேவையான வடிவத்தில் தயாரித்த பாலிமர் வலை, கார்பன் நானோ டியூப்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து அதன் மீது செல் வளர்த்து செயற்கை மூக்கு, காது தயாரிக்க முடியும்.
தற்போது ரீஜெனரேட்டிவ் மெடிஸின் என்று மற்றொரு நதியும் வந்து இதில் இணைந்து கொண்டிருக்கிறது. அவர்களின் ஆயுதம் ஸ்டெம் செல்கள். இந்த ஸ்டெம் செல்கள் என்பவை பச்சைக் களி மண் மாதிரி, ஆதாரமான செல்கள். அவை தேவைக்கேற்றபடி பரிணமித்து இதயம், கிட்னி அல்லது ஈரலாக மாற வல்லவை.
சோதனைச் சாலையில் கண்ணாடித் தட்டில் வைத்து உயிருள்ள செல்களை வளர்க்க முடியும் என்பது, மைக்ராஸ்கோப் கண்டுபிடித்த நாளிலிருந்து தெரிந்த விஷயம்தான். ஆனால் செல்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து எண்ணிக்கையில் பெருகுவது ஒரு சில தடவைகள்தான் நடந்தது. ஹேஃப்ளிக் எல்லை என்பது வரை செல்கள் பிரிந்துவிட்டு அதற்குப் பிறகு சண்டித்தனம் செய்து நின்றுவிடும். க்ரோமசோம்களின் வால் பகுதியில் உள்ள டெலோமியர்கள் படிப்படியாக வெட்டுப்பட்டு சிறுத்துப் போய்விடுவதால் வரும் விளைவு இது. கடைசியாக 1998-ல் ஜெரான் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இந்த டெலோமியர்கள் சேதமாகாமல் செல்லைப் பிரிப்பது எப்படி என்று கண்டுபிடித்தார்கள்.
டிஷ்யூ எஞ்சினியரிங்கின் அடிப்படைச் செங்கற்கள், செல்கள். ரத்தம், கொழுப்பு போன்ற திரவப் பொருள்களிலிருந்து பம்ப் வைத்துச் சுழற்றி செல்களைப் பிரித்து எடுத்துவிடலாம். தசை நார்கள் போன்று கெட்டிப்பட்டுவிட்ட பாகங்களிலிருந்து தனிப்பட்ட செங்கல்லை உருவ வேண்டுமென்றால், முதலில் அதை என்ஸைம் வைத்துக் கரைத்து அலச வேண்டும். அதிலிருந்து மாதுளம் பழம் மாதிரி செல்களை உதிர்த்துக்கொள்வார்கள்.
சிவில் எஞ்சினியரிங்கில் ஒரு கான்க்ரீட் கட்டடம் கட்டு முன் தேவையான வடிவத்தில் இரும்புக் கம்பியால் ஃப்ரேம் செய்து கொள்கிறார்களே, அதே பொறியியல் இங்கேயும் தேவை. உதாரணமாக, எலும்புகள் ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தில் இருக்கும். அச்சாக அதே மாதிரி எலும்பு செய்து பொருத்தினால்தான் முழங்கையை மடக்க முடியும்.

இதற்காகக் கொலம்பியா பல்கலைக் கழகத்தில், வாயில் பெயர் நுழைய மாட்டாத பேராசிரியை ஒருவர் செயற்கை எலும்புகளை உருவாக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அடிப்படையிலிருந்து ஆரம்பித்து தாடை எலும்புகளை உருவாக்கியிருக்கிறார். இதற்கு உதவியது ஸ்டெம் செல்கள்தான். சண்டை போட்டுத் தாடை உடைவதற்கு முன் இருந்த எக்ஸ்ரே படங்களை கம்ப்யூட்டரில் கொடுத்து அதே மாடலில் ஸ்டெம் செல்களை வார்த்து எடுத்தார்கள்.
சி.டி.ஸ்கான் செய்து ஒரு நல்ல டிஜிட்டல் படம் மட்டும் இருந்துவிட்டால் எத்தகைய சிக்கலான ஷேப்பையும் உருவாக்கிவிடலாம் என்கிறார்கள். முக்கியமாக, உள் காதின் சின்னஞ் சிறிய சொப்பு போன்ற குருத்தெலும்புகள் செவிச் செல்வத்துக்கு அவசியம். இதற்கு டிஷ்யூ எஞ்சினியரிங்தான் ஒரே நம்பிக்கை.
பயோ ரியாக்டர் என்று இட்லிப் பானை போன்ற பாத்திரம் ஒன்றுக்குள்தான் எல்லாம் வெந்து தயாராகிறது. முதலில் ஒரு துண்டு எலும்பை சுத்தம் செய்து கம்ப்யூட்டர் உதவியுடன் அதைச் செதுக்கி வேண்டிய வடிவத்தில் ஒரு ஃப்ரேம் தயார் செய்துகொள்கிறார்கள். பிறகு சரியான அளவில், வடிவில் இருக்கும் அச்சு ஒன்றுக்குள் அதை இறக்குகிறார்கள். இனி இடைவெளிகளை எல்லாம் செல்களைப் போட்டு நிரப்ப வேண்டும்.
அதற்கு எலும்பு மஜ்ஜை அல்லது தொப்பைக் கொழுப்பிலிருந்து உறிஞ்சி எடுக்கப்பட்ட செல்களை உயிரியல் ஃப்ரேமின் மீது படர விடுகிறார்கள். அவை வளர்வதற்கு உரிய ஹார்மோன்கள், ஆக்ஸிஜன், சர்க்கரை மற்ற சத்துப் பொருட்களை வேளா வேளைக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால், செல்கள் நாம் இன்னும் தலைவனின் உடலுக்குள்தான் இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு இரட்டித்து வளரும். முழுவதும் வளர்ந்தபிறகு ஸ்பேர் பார்ட்டை எடுத்து மனிதனுக்குப் பொருத்த வேண்டியதுதான் பாக்கி.
மிச்சிகனில் மற்றொரு பேராசிரியர் ஹோலிஸ்டர், இட்லிப் பானைக்குப் பதிலாக நம் உடலுக்குள்ளேயே வைத்து செல்களை வளர்க்க முடியுமா என்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
மனித உடலிலேயே மிகப் பெரிய பாகம் எது? விடை, நம் தோல்! சிலருக்கு, தீயினாலோ நோயினாலோ தோலின் பெரும் பகுதி சேதாரமாகிவிடுவதுண்டு. முன் காலத்தில் எல்லாம் பேஷண்ட்டை வாழை இலை மீது படுக்க வைத்து மாரியம்மனுக்கு மஞ்சள் காசு முடிந்து வைத்துவிட்டு, பக்கத்தில் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருப்பது தவிர வேறு வழியே இல்லாமலிருந்தது. இப்போது டிஷ்யூ எஞ்சினியரிங்கில் தோலைத் தனியாக வளர்த்து சீட் கவர் மாதிரி பொருத்தி மூடி விடலாம்.
தோலின் வெளிப் பகுதி மெலனோசைட், லாங்கர்ஹான்ஸ் போன்ற செல்களால் ஆனது. அதற்கு அடியில் கொலாஜன் என்ற நீண்ட இழைகள். (இந்த இழைகளின் அமைப்பைக் கண்டுபிடித்த ராமச்சந்திரன் குழுவினரின் உபயமாக இதற்கு மெட்ராஸ் மாடல் என்று பெயர்!)
செயற்கைத் தோல் வளர்ப்பில் கொலாஜனில் அஸ்திவாரம் போட்டுக்கொண்டு அதன் மேல் தோல் செல்களை விட்டு வளரச் செய்தார்கள். இந்தத் தோல் செல்கள் எடுக்கப்பட்டது, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளின் முக்கியமான பாகத்தின் நுனியிலிருந்து. ஒரு குழந்தையிடமிருந்து எடுக்கப்பட்ட தோலை வைத்துக்கொண்டு நான்கு ஏக்கர் பரப்பளவுக்குப் புதிய தோல் தயாரிக்க முடியும்! தோலை சேமித்து வைக்கும் முறைகள் இன்னும் செம்மைப் படுத்தப்பட்டால் மீட்டர் கணக்கில் செயற்கைத் தோல் தயாரித்து, கோயம்புத்தூரிலிருந்து பேல் பேலாக ஏற்றுமதி செய்யலாம்.
தற்போது செயற்கையாக வளர்க்கப்பட்ட எலும்புகளை நாய், நரிக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில துணிச்சல் மிக்க மனிதர்களும் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வசதி எதிர்காலத்தில் பரவலாக எல்லோருக்கும் கிடைக்கப் போகிறது. ஆபரேஷன் தியேட்டரில் முனியாண்டி விலாஸ் போல “சாருக்கு சூடா ஒரு கிட்னி!” என்று ஆர்டர் கொடுப்பதையும் கேட்கக் கூடும். (அப்புறம் திருட்டு பயமே இருக்காது).
டிஷ்யூவில் காசு இருக்கிறது என்று மோப்பம் பிடித்துவிட்டதால்,  பெய்யெனப் பெய்யும் மழையாய்த் தனியார் முதலீடு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. தினம் ஒரு புதிய கம்பெனி ஆரம்பித்துக் காதும் மூக்கும் தயாரிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ரத்தக் குழாய்களின் உள்ளே இருக்கும் லைனிங்கிற்காக மட்டுமே இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கம்பெனிகளும் உண்டு. முக எலும்பு, முதுகெலும்புக்காக மற்றொரு கம்பெனி. கல்லீரல், மண்ணீரல் என்றெல்லாம் பெரிய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்



6 comments:

  1. என்னவெல்லாம் நடக்குது...? எல்லாமே விற்பனைக்கு... உண்மையான அன்பு...?

    நன்றி...
    tm10

    ReplyDelete
    Replies
    1. ///உண்மையான அன்பு...?//

      அது மட்டும் தான் விற்பனையற்றது

      Delete
  2. பல செய்திகளை தெரிந்து கொண்டேன் நன்றிங்க.

    ReplyDelete
  3. என்றுமே போலி போலிதான்

    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. //என்றுமே போலி போலிதான்///

      அது என்னவோ முற்றிலும் உண்மை

      Delete